இதுவரை:
டாரத்தி என்ற சிறுமி தன்னுடைய செல்ல நாய் டோட்டோவுடன் ஒரு மந்திர உலகத்தில் மாட்டிக் கொள்கிறாள். அவளுக்கு சில நண்பர்கள் கிடைக்கின்றனர். எல்லாருமாகச் சேர்ந்து ஆஸ் நகரத்தின் பெரிய மந்திரவாதியிடம் சில உதவிகள் கேட்பதற்காகச் செல்கின்றனர். ஒரு கெட்ட சூனியக்காரியை இவர்கள் அழகத்தால் தான் அந்த உதவிகளைச் செய்வேன் என்கிறார். இனி..
அத்தியாயம் 6
கோட்டையின் தலைமைக் காவலர் கூறிய அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டு, மேற்குத் திசையின் கெட்ட சூனியக்காரியை அழிப்பதற்காக அந்தத் திசையை நோக்கி டாரத்தி, டோட்டோ, சிங்கம், தகர மனிதன் மற்றும் சோளக்கொல்லை பொம்மை ஆகியோர் நடந்து சென்றனர். தன் மந்திர சக்தியால் இவர்கள் வருவதை முன்பே தெரிந்து கொண்டாள் சூனியக்காரி. தன்னுடைய நகரத்தை அடைவதற்கு முன்பாகவே அவர்களைக் கொன்று விட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
தன் மந்திர சக்தியைப் பயன்படுத்தி ஒரு ஓநாய்க் கூட்டத்தை வரவழைத்தாள். “டாரத்தின்னு ஒரு பொண்ணு தலைமையில் ஒரு சின்னக் கூட்டம் இங்கே வந்துக்கிட்டு இருக்கு. அவங்களை நீங்க கொன்னுடுங்க” என்று கூறி அந்த ஓநாய்களை அவள் அனுப்பி வைத்தாள். ஓநாய்கள் கூட்டம் டாரத்தியையும் நண்பர்களையும் நோக்கி நெருங்கியது. மற்றவர்கள் பயந்து நிற்க, தகர மனிதன் விரைந்து செயல்பட்டான். அவனுடைய கோடரியால் சரக் சரக்கென்று அனைத்து ஓநாய்களின் தலைகளையும் வெட்டிக் கீழே போட்டான்.
தன்னுடைய ஓநாய்க் கூட்டம் முழுவதும் அழிந்து போனதை மந்திர சக்தியால் உணர்ந்த சூனியக்காரி, கோபத்தில் கொந்தளித்தாள். உடனடியாகக் காகங்கள் நிரம்பிய படை ஒன்றை அனுப்பி வைத்தாள். நிறைய காகங்கள் தங்களை நோக்கி வருவதை கண்ட சோளக்கொல்லை பொம்மை நன்றாக நிமிர்ந்து நின்றது. அதைப் பார்த்து காகங்கள் பயந்து, தயங்கி நின்றன.
அந்தக் காகக் கூட்டத்தின் அரசன், “இது வெறும் பொம்மைதான். நம்மை ஒண்ணும் செய்யாது. இங்கே வாங்க என்று கூறி முன்னால் பறந்து சென்றது. ஆனால் எதிர்பாராத நேரத்தில் காகங்களின் அரசனை சோளக்கொல்லை பொம்மை தன் கைகளால் பிடித்து, பிய்த்துப் போட்டது. அதைக் கண்ட மற்ற காகங்கள் பயந்து ஓடி விட்டன.
தன்னுடைய இரண்டாவது முயற்சியும் தோல்வி அடைந்ததை உணர்ந்த சூனியக்காரி, இப்போது ஒரு தேனீக்களின் படையை அனுப்பி வைத்தாள். அந்தத் தேனீக்களின் படை இவர்களை நெருங்கும் போது சோளக்கொல்லை பொம்மை தன்னுடைய உடலில் இருந்த வைக்கோலால் டாரத்தியையும் டோட்டோவையும் மூடிக்கொண்டது. தேனீக்கள் முதலில் தங்கள் பார்வையில் பட்ட தகர மனிதனை ஒன்றாகச் சென்று தாக்கின. ஆனால் அந்தோ பரிதாபம்! தகர மனிதனின் உடலில் பட்டு அவர்களுடைய நீளமான கொடுக்குகள் உடைந்து போய்விட்டன. வலியுடன் தேனீக்களும் திரும்பி சென்றன.
தன்னுடைய முதல் மூன்று முயற்சிகளும் தோல்வி அடைந்ததை உணர்ந்த சூனியக்காரி, கோபத்தில் தன் தலையைப் பிய்த்துக் கொண்டாள். அடிமைகளாக அவள் பிடித்து வைத்திருந்த விங்க்கிக்களை அவள் வரவழைத்தாள். அவற்றுக்கு கூர்மையான ஈட்டிகளை அளித்த சூனியக்காரி, பாரதியையும் அவளது நண்பர்களையும் கொன்று விட்டு தான் திரும்ப வேண்டும் என்று கட்டளையிட்டாள். விங்க்கிக்கள் அவ்வளவு தைரியசாலிகள் கிடையாது. ஆனால் சூனியக்காரி மேல் மிகுந்த பயம் உடையவர்கள். அதனால் அவர்கள் நண்பர்களை நோக்கி செல்ல சிங்கம் அவர்களை பார்த்து பெரிதாகச் சீறியது. அந்த ஒரு சீற்றத்தைப் பார்க்க முடியாமல் எல்லா விங்க்கிக்களும் வந்த வழியே திரும்பி ஓடினர்.
வேறு வழியில்லாமல் சூனியக்காரி தன்னுடைய கடைசி ஆயுதத்தை எடுத்தாள். அவளிடம் இருந்த தங்கத் தொப்பியை எடுத்து அணிந்து கொண்டாள். அந்தத் தொப்பிக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. அதை அணிந்து கொள்ளும் மனிதரால் பறக்கும் குரங்குகள் படையை மூன்று முறை உதவிக்கு அழைக்க முடியும். ஏற்கனவே தங்கத்தொப்பியின் சக்தியை இரண்டு முறை பயன்படுத்தி விட்டாள் சூனியக்காரி. இன்னும் ஒரு முறை மட்டுமே அவளால் பறக்கும் குரங்குகளை அழைக்க முடியும் என்ற நிலை. தொப்பியை அணிந்து கொண்டு அவள் ஒரு மந்திரத்தைச் சொல்ல, மிகப்பெரிய உருவத்திலான பறக்கும் குரங்குகள் அவள் முன் தோன்றின.
“அந்த புதுசா வந்திருக்கவங்களை எல்லாம் அழிச்சிடுங்க. ஆனா சிங்கத்தை மட்டும் இங்கே கூட்டிட்டு வாங்க. அந்த சிங்கத்தை நான் அடிமையாக வச்சுக்கணும்” என்றாள் சூனியக்காரி.
டாரத்தியும் அவள் நண்பர்களும் எதிர்பாராத வகையில் பெரிய பெரிய குரங்குகள் திடீரென்று மேலே இருந்து பறந்து வந்தன. குரங்குகள் தகர மனிதனை அப்படியே தூக்கி, பாறையில் மோதின. அதனால் தகர மனிதனின் உடலின் பல பாகங்கள் உடைந்து போய் அவனால் நடக்கவே முடியவில்லை. அடுத்ததாக சோளக்கொல்லை பொம்மையின் உடலிலிருந்து அனைத்து வைக்கோல்களையும் பிய்த்து ஆங்காங்கே எறிந்து விட்டன. அவனுடைய உடைகள், தொப்பி, காலனி அனைத்தையும் திசைக் கொன்றாக வீசிய குரங்குகள், சூனியக்காரி கூறியபடியே சிங்கத்தைக் கயிறால் கட்டி சூனியக்காரியின் கோட்டைக்கு இழுத்துச் சென்றன.
ஆனால் பாரதியை மட்டும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் நல்ல சூனியக்காரி கொடுத்த முத்தத்தால் பாரதியின் நெற்றியில் இருந்த அழகிய மச்சத்தை அவர்கள் கவனித்தார்கள். பறக்கும் குரங்குகளின் அரசனான தலைமைக் குரங்கு, “இந்தப் பொண்ணுக்கு நல்ல சக்தியுடைய அருள் இருக்கு. அது தீய சக்தியை விடச் சிறந்தது. அதனால இவளை நாம துன்புறுத்த கூடாது” என்று சொல்ல அனைத்துக் குரங்குகளும் சேர்ந்து அவளையும் டோட்டோவையும் மென்மையாகத் தூக்கிக் கொண்டு போய் கோட்டைக்குள் விட்டன.
-தொடரும்.
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். ‘கதை சொல்லு கதை கேளு’ என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.