இந்தியா 76 வது சுதந்திர நாளைக் கொண்டாடும் இம்மாதத்தில், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வீர மங்கையரில் ஒருவரான, கிட்டூர் ராணி சென்னம்மாவைப் பற்றித் தெரிந்து கொள்வது, பொருத்தமாக இருக்கும்.
தற்போதைய கர்நாடகாவின் முன்னாள் சமஸ்தானமாகிய கிட்டூரின் ராணி தான் சென்னம்மா. இவர் கணவர் ராஜா மல்லசர்ஜா. இவர் கணவரும், மகனும் அடுத்தடுத்து இறந்துவிட, 1824 ஆம் ஆண்டு சிவலிங்கப்பா என்பவரைத் தத்தெடுத்து, தம் ஆட்சிக்கு வாரிசாக நியமித்தார் சென்னம்மா.
ஆனால் அச்சமயம் கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹவுசி Doctrine of lapse என்ற வாரிசு உரிமை சட்டத்தை அமல்படுத்தியிருந்தார். அதன்படி வாரிசு இல்லாத அரசுகள் ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்குப் போகவேண்டும். எனவே சென்னம்மா தத்து எடுத்தது செல்லாது என ஆங்கிலேய அரசு அறிவித்தது.
எனவே சென்னம்மா படைக்கும், ஆங்கிலேயரின் படைக்கும் போர் துவங்கியது. முதற் கட்ட போரில் சென்னம்மா படையின் கையே மேலோங்கியிருந்தது. பிரிட்டிஷ் படைக்குக் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. கலெக்டர் ஜான் தாக்கரேவும் கொல்லப்பட்டார்.
தம் தளபதி சங்கொல்லி ராயண்ணாவின் உதவியுடன், ராணி சென்னம்மா இறுதி வரை மிகவும் கடுமையாகப் போரிட்டார். ஆனால் இறுதிப் போரில் ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் உடல்நலக்குறைவால் இறந்தார்.
கிட்டூரிலும், பெங்களூரிலும் இவர் நினைவாகச் சிலைகள் உள்ளன. 1977 ஆம் ஆண்டு இவர் நினைவைப் போற்றும் வகையில், இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது. கிட்டூர் ராணி சென்னம்மாவின் வீரத்தைப் போற்றுவோம்!
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.