ஒரு கிராமத்தில் நான்கு நண்பர்கள் வசித்து வந்தனர். மூன்று பேர் பல கலைகள் கற்றுத் தேர்ந்தவர்கள். ஒருவன் மட்டும் படிக்காதவன்.

நால்வரும் சேர்ந்து அருகிலிருந்த நகரத்திற்குப் பிழைப்பு தேடிக் கிளம்பினர்.

வழியில் ஓர் அடர்ந்த காடு.காட்டின் வழியே சென்று கொண்டிருந்த போது

வழியில் பல எலும்புகள் குவிந்து கிடந்தன.

முதல் நண்பன் சொன்னான்.

“எனக்கு இந்த எலும்புகளை சரியாகப் பொருத்தி உருவம் கொடுக்க முடியும். நான் அந்தக் கலையைக் கற்றவன்”

சொன்னவுடன் சொன்னது போல் அந்த எலும்புகளை சரியாகப் பொருத்தி உருவம் கொடுத்தான்.

இரண்டாவது நண்பன் சொன்னான்.

“என்னால் இந்த உருவத்திற்குத் தசை நார்கள், உடல் உறுப்புகள், இரத்த ஓட்டம், தோல் பொருத்த முடியும். அந்தக் கலையைக் கற்றிருக்கிறேன்.”

அவனும் சொன்னபடி உடனே அந்த எலும்புக் கூட்டிற்கு உருவம் கொடுத்தான்.கண் முன்னே ஒரு சிங்கத்தின் உருவம் உயிரில்லாமல்.

இரண்டு நண்பர்களும் தங்களது கலையை சரியாகக் கற்றிருக்கிறோம் என்று பெருமை அடைந்தனர்.

மூன்றாவது நண்பன் சொன்னான்.

“என்னால் இந்த சிங்கத்திற்கு உயிர் கொடுக்க முடியும். நான் அந்தக் கலையைக் கற்றிருக்கிறேன்.”

அவன் அந்தக் கலையைப் பிரயோகம் செய்வதற்குள் நான்காவதாக இருந்த படிக்காதவன் அவனைத் தடுத்தான்.

panhathanthra lion
படம்: அப்புசிவா

“வேண்டாம். வேண்டாம். ஆபத்தான வேலை செய்ய வேண்டாம். சிங்கத்திற்கு உயிர் வந்தால் நம்மைக் கொன்று விடும்.”

அவனுடைய சொற்களை மூன்றாவது நண்பன் ஏற்கவில்லை.

“அதெல்லாம் இல்லை. நானும் எனது கலையை பிரயோகம் செய்ய வேண்டாமா? என்னைத் தடுக்காதே!.”

சொல்லி விட்டு சிங்கத்திற்கு உயிர் கொடுக்கும் வேலையைத் தொடங்கினான்.

நான்காவது நண்பன் அச்சத்துடன் ஓடி அருகிலிருந்த மரத்தில் நல்ல உயரத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

சிங்கம் உயிர் பெற்றது. உயிர் பெற்றவுடன் தன் கண் முன்னே இருந்த மூன்று மனிதர்களையும் அடித்துக் கொன்று போட்டு விட்டு நகர்ந்தது.

சிங்கம் அங்கிருந்து நகர்ந்த பின்னர் மரத்திலிருந்து இறங்கிய நான்காவது நண்பன் தனது நண்பர்களின் மூடச் செயலை எண்ணி வருந்திக் கொண்டே அங்கிருந்து சென்றான்.

யோசிக்காமல் செய்யும் செயல் அழிவைத் தரும். புத்தகங்களைப் படித்துப் பெற்ற அறிவுடன் பொது அறிவையும் கலந்து யோசிப்பது நல்லது.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments