குழந்தை இலக்கிய படைப்பாளர்களில் குறிப்பிடத் தக்கவர், வாண்டு மாமா. வி.கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் என்ற ஊரில் பிறந்தவர். இளம் வயதில் தந்தையை இழந்த இவர், திருச்சியில் அத்தை வீட்டில் வளர்ந்தார்.

vandumama
படம்: இணையம்

சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில், இவருக்கு நாட்டம் இருந்தது. கதை எழுதுவதிலும், இவருக்கு ஆர்வம் அதிகம். பள்ளியில் படித்த போது இவர் எழுதிய ‘குல்ருக்’ என்ற கதை, கலைமகளில் வெளியாகிப் பரவலான கவனம் பெற்றது. ‘கெளசிகன்’ என்ற புனை பெயரில், பெரியவர்களுக்காகப் பிரபல பத்திரிக்கைகளில் கதைகள் எழுதினார். ஆனந்த விகடன் ஓவியர் மாலி இவரைச் சிறுவர்க்காகக் கதை எழுதச் சொன்னார். இவருக்கு ‘வாண்டு மாமா’ என்ற புனை பெயரைச் சூட்டியதும், ஓவியர் மாலி தான்.

கல்கியின் ‘கோகுலம்’ இதழில், 23 ஆண்டுகள் பணி புரிந்து, சிறுவர்க்காகக் கதை,கட்டுரைகள் எழுதினார். அவற்றுள் ‘பலே பாலு’ சமத்து சாரு’ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

1984இல் ‘பூந்தளிர்’ இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். இந்த இதழில் படக்கதை,நீதிக்கதை ஆகியவற்றை, அழகான படங்களுடன் கொடுத்தார். அறிவியல் தொழில் நுட்பச் செய்திகளையும், பொது அறிவுச் செய்திகளையும், எளிய தமிழில் எழுதினார். இவர் ஓவியராகவும். இதழ் வடிவமைப்பாளராகவும் இருந்தமையால், பல்வேறு புதுமைகளைப் ‘பூந்தளிர்’ இதழில் புகுத்தினார். பல அயல்மொழி இலக்கியங்களையும், தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

இவர் எழுதியுள்ள 160க்கும் மேற்பட்ட நூல்களில், 150 சிறுவர்க்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. 65 ஆண்டுகளுக்கும் மேலாகப் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றிய இவர், தம் நூல்களுக்காகப் பல்வேறு பரிசுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார். 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments