ஒரு பெரிய மரத்தடியில குட்டி குட்டியா நிறைய கார் பொம்மைகள் சிதறி கிடந்துச்சு. நிறைய கார் பொம்மைகள்.. நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள்ன்னு எல்லா நிறத்திலயும் இருந்தது.
எல்லா பொம்மையும் ஒரே மாதிரி ஒரே அளவுலதான் இருந்தது. ஆனா நிறம் மட்டும் வேற வேற.
அந்த வழியா போனவங்க சிலர் அத ஆர்வமா பாத்தாங்க. சிலருக்கு அதுல அவ்ளோ ஆர்வம் இல்ல. அதனால அவங்க பாட்டுக்கு அவங்க வேலைய பாத்துட்டு போய்ட்டாங்க.
ஆனா அந்த பக்கமா போன குழந்தைங்களுக்கெல்லாம் செம்ம ஜாலியாயிடுச்சு.
ஓடிப் போய் கார் பொம்மைகளை எடுத்து எடுத்து தங்களோட பையில போட்டுக்கிட்டாங்க. தான் போட்டுக்கிட்டது மட்டுமில்லாம தன்னோட நண்பர்களுக்காகவும் எடுத்துக்கிட்டாங்க.
இந்த பொம்மைகளை எடுக்கக் கூடாதுன்னு யாரும் அவங்கள தடுக்கல. இன்னும் சொல்லப் போனா ஒரு பொம்மை போனதும் சில நிமிடங்கள்ல அந்த இடத்தில அதே மாதிரி வேற பொம்மை வந்து விழுந்துச்சு.
கார் பொம்மைகள் எடுத்துகிட்டு போன குழந்தைங்க சொல்லி மற்ற குழந்தைகளுக்கு தெரிஞ்சி அவங்களும் அங்க வந்து பாத்தாங்க.. அப்பவும் நிறைய பொம்மைகள் இருந்துச்சு.
இந்த பொம்மைகள் பத்தின செய்தி எல்லா இடங்களுக்கும் பரவிடுச்சு. டிவி செய்திகள்ல கூட இதப் பத்தி சொன்னாங்க. செய்தித்தாள்கள்ல கூட இதப் பத்தின செய்தி வந்துச்சு.
முதல் நாள் கார் பொம்மை இருந்துச்சுன்னா அடுத்த நாள் பறவை பொம்மை; அதுக்கு அடுத்த நாள் யானை பொம்மை; இப்டியே ஒவ்வொரு நாளும் வித விதமா வகை வகையான பொம்மைகள் அந்த இடத்தில இருந்துச்சு.
முதல்ல ஆர்வமில்லாம அதை புறக்கணிச்சிட்டு போனவங்க கூட இப்ப அந்த பொம்மைகளை தங்கள் வீட்டு குழந்தைகளுக்காக எடுத்துகிட்டு போக ஆரம்பிச்சாங்க.
இப்ப அந்த இடமே ஒரு சுற்றுலா தலம் மாதிரி ஆயிடுச்சு.
பெரியவங்கல்லாம் தங்கள் குழந்தைங்களை அங்க கூட்டிட்டு வர ஆரம்பிச்சாங்க.
அந்த இடத்துக்கு டாய் ரெய்ன் அதாவது பொம்மை மழைன்னு பேர் வெச்சுட்டாங்க.
அந்த பொம்மை மழை எப்டி பெய்யுது? யார் இப்டி பொம்மைகளை இங்க கொண்டு வந்து போடறாங்கன்னு யாருக்குமே தெரியல. ஆனா எப்பவும் அங்க பொம்மைகள் இருந்துட்டே இருந்துச்சு.
அந்த மரத்துக்கு அடியில பூமியில வேர் பாகத்தில ஒரு சின்ன பொந்து இருந்துச்சு. அந்த பொந்துக்குள்ள ரெண்டு எலிகள் வாழ்ந்துட்டு இருந்துச்சு.
அந்த எலிகளுக்கு ஒரு அபூர்வ சக்தி இருந்தது. அது என்னன்னா அதால சூப்பரா படம் வரைய முடியும். அது என்ன படம் வரைஞ்சாலும் அது அப்டியே நெஜமா வந்துடும். கார் பொம்மை வரைஞ்சா உண்மையாவே கார் பொம்மை வந்துடும். யானை பொம்மை வரைஞ்சா உண்மையான யானை பொம்மை வந்துடும்.
அந்த ரெண்டு எலிகளும்தான் இந்த மாதிரி தினம் தினம் பொம்மைகளை வரைஞ்சி அத மரத்துக்கு வெளிய தூக்கி போடும். அததான் எல்லாரும் எடுத்துகிட்டு போறாங்க.
ஆனா இது யாருக்குமே தெரியல. யாராலயும் கண்டுபிடிக்க முடியல.
அப்ப ஒரு மந்திரவாதி நா இத கண்டுபிடிக்கறேன்னு சொல்லிட்டு வந்தான்.
அந்த மந்திரவாதி, இந்த மரத்திலதான் எதோ மாயம் இருக்குன்னு சொல்லிட்டு அந்த மரத்த வெட்ட ஆரம்பிச்சான்.
இதப் பாத்த எலிகளுக்கு ரொம்ப கவலையாயிடுச்சு.
அதுங்களோட கவலைய பாத்த அங்க இருந்த எறும்புங்க எல்லாம், இவன நாங்க பாத்துக்கறோம்ன்னு சொல்லிட்டு மரத்துக்கு வெளிய வந்து மந்திரவாதியாட காலை நல்லா கடிச்சிடுச்சு.
மந்திரவாதி, ஐயோ! அம்மா! ன்னு கத்திகிட்டே ஓடிப் போயிட்டான்.
அப்றம் யாரும் அந்த மரத்தை வெட்ட வரவேல்ல.
எலிகளும் பொம்மைகளை வரைஞ்சிட்டே இருந்துச்சு. குழந்தைகளுக்கும் பொம்மைகள் கிடைச்சிட்டே இருந்துச்சு.
பொம்மை மழை எப்பவுமே நிக்கல. 😍
என்ன சுட்டீஸ்? கதை எப்டி இருந்தது? உங்களுக்கு பிடிச்சுதா?
அடுத்த இதழ்ல இதே மாதிரி இன்னொரு சூப்பரான கதையோட வரேன். அது வரைக்கும் சமத்தா இருங்க.
டாட்டா! பை! பை!
👋👋👋👋👋👋👋
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.