அந்த அடுக்ககத்தின் ஐந்தாவது தளத்தில்
பிரவீணின் வீடு உள்ளது.
பிரவீண் ஆறாவது படிக்கறான். வெளிநாட்டில் வேலை செய்து வந்த அவங்க மாமா ஒரு நாள் அவனுடைய வீட்டுக்கு வந்தாங்க. மாமாவுக்கு கல்யாணம் ஆகப் போகுது. அதனால மாமா இன்னும் இரண்டு மூணு மாசத்துக்கு இங்கதான் இருப்பாங்க.
மாமாவை பார்த்ததும் அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அதுவும் மாமா இரண்டு மாசத்துக்கு இங்கதான் இருப்பாங்கன்னு தெரிஞ்சதும் அவனுக்கு இன்னும் மகிழ்ச்சியா இருந்தது.
இதுவரை வீடியோ கால்ல மட்டுமே பேசிப் பழகியிருக்கற மாமாவை நேரில் பார்த்த மகிழ்ச்சியை அவன் கொண்டாடினான்.
மாமாவுக்கு தன் சைக்கிளை ஓட்டி காட்டினான். பள்ளிக்கூடத்தில தான் வாங்கின பரிசுகளையெல்லாம் காட்டினான்.
அவனுடைய நண்பர்களையெல்லாம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினான்.
மாமா கூடவே படிப்பு விளையாட்டுன்னு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருந்தான்.
மாமாவுக்கும் அவனுடன் பொழுதைப் போக்கறது ரொம்ப பிடிச்சிருந்தது.
ஒருநாள் அவங்கம்மா மாதுளை ஜூஸ் செய்து எடுத்து வந்து எல்லாருக்கும் கொடுத்தாங்க.
எல்லாருக்கும் கண்ணாடி டம்ளர்ல ஜூஸ் குடுத்த அம்மா பிரவீணுக்கு மட்டும் சாதா ஸ்டீல் டம்ளர்ல கொடுத்தாங்க.
“அம்மா! எனக்கும் கண்ணாடி டம்ளர்ல ஜூஸ் குடுங்க..” ன்னு பிரவீண் அடம் பிடிச்சான்.
“வேணாம் பிரவீண்! ஜூஸ் ஜில்ன்னு இருக்கு.. உனக்கு கண்ணாடி டம்ளர் வழுக்கும். டம்ளர் கீழ விழுந்து உடைஞ்சிடும்.. நீ ஸ்டீல் டம்ளர்லயே ஜூஸ் குடி..” ன்னு அம்மா சொன்னாங்க.
“நா என்ன சின்ன குழந்தையா? கண்ணாடி டம்ளரை எப்டி கவனமா பிடிச்சிக்கணும்னு எனக்கு தெரியும்..” ன்னு பிடிவாதம் பிடிச்சி கண்ணாடி டம்ளர்ல ஜூஸ் வாங்கி குடிச்சான்.
அப்ப அம்மா சொன்ன மாதிரியே அவன் கையில கண்ணாடி டம்ளர் வழுக்கி கீழ விழுந்து உடைஞ்சது. கண்ணாடி சில்லுகள் அந்த அறை முழுக்க சிதறியது.
“நா சொன்னேன்ல.. கேட்டாதானே? ஒழுங்கா இதை கிளீன் பண்ணு!” ன்னு பிரவீணை கோவிச்சிகிட்ட அவனையே கீழ சிதறின கண்ணாடி சில்லுகளை கவனமா பெருக்கியெடுத்து குப்பையில போடப் சொல்லிட்டு போனாங்க.
அவனும் சிணுங்கிக்கிட்டே அம்மா சொன்ன மாதிரி கண்ணாடி சில்லுகளை பெருக்கியெடுத்து குப்பைத்தொட்டியில போடப் போனான்.
“நில்லு பிரவீண்! இப்டியேவா கண்ணாடி சில்லுகளை குப்பையில போடப் போற?” அப்டீன்னு அவங்க மாமா கேட்டாங்க.
“ம்! ஆமா!” அப்டீன்னு பிரவீண் சொல்ல,
“இப்டி போடக் கூடாதுடா!” அப்டீன்னு மாமா தடுத்தாங்க.
மாமா சொன்னதைக் கேட்ட பிரவீணுக்கு ரொம்ப குழப்பமா இருந்தது.
“ஏன் மாமா?” ன்னு பிரவீண் கேட்டான்.
“பிரவீண்! இப்ப இந்த கண்ணாடி சில்லுகளை இப்படியே உங்க வீட்டு குப்பைத்தொட்டியில போடுவ.. நாளைக்கு குப்பை அள்ளுற துப்புரவுப் பணியாளர்கள் வருவாங்களா?” அப்டீன்னு கேட்டு மாமா நிறுத்தினார்.
“ஆமா மாமா! நாளைக்கு காலையில ஆறு மணிக்கெல்லாம் வந்துடுவாங்க. தெருமுனையில வரும்போதே விசிலடிச்சிகிட்டே வருவாங்க. உடனே நாங்க வீட்டுல இருக்கற குப்பைத்தொட்டியை எடுத்து அவங்க கிட்ட குடுப்போம். அவங்க வீட்டு குப்பைத்தொட்டியை அப்டியே அவங்க தள்ளிக்கிட்டு வர குப்பை வண்டியில கவிழ்த்து கொட்டிக்குவாங்க. இது எப்பவும் பண்றதுதானே மாமா?” அப்டீன்னு பிரவீண் கேட்டான்.
“ம்! இப்ப இந்த குப்பை, நாளைக்கு குப்பை வண்டியில கொட்டினதோட நம்ம வேலை முடிஞ்சிடும் பிரவீண். நம்ம வீடு சுத்தமாகிடும். நமக்கு இந்த உடைந்த கண்ணாடி சில்லுகளால எந்த ஆபத்தும் இல்ல! கரெக்ட்டா?” ன்னு மாமா கேட்டு நிறுத்தினாரு.
“ம்.. ஆமா மாமா!” ன்னு சொன்னான் பிரவீண்.
“ஆனா இதுக்கப்றம்தான் அந்த துப்புரவுப் பணியாளர்களின் வேலையே ஆரம்பிக்கிது. அவங்க நம்ம வீடுங்கள்ல இருந்து சேகரிக்கற குப்பைகளை நகரின் மூலையில் இருக்கும் குப்பைக்கிடங்குக்கு எடுத்துட்டு போவாங்க.”
“ம்..”
“அங்க போய் இதை அப்டியே கொட்ட மாட்டாங்க. இதை, மக்கும் குப்பை மக்காத குப்பைன்னு தனித்தனியா பிரிப்பாங்க.”
“ஆங்..” என்று பிரவீணின் முகம் அதிர்ச்சியைக் காட்டியது.
“இந்த குப்பையை தனித்தனியா பிரிப்பாங்களா.. கையாலயா? ஐய்ய..” என்று முகம் சுளிக்கவும் செய்தான்.
“ஆமா பிரவீண்! நாம தொடத் தயங்கற நம்ம வீட்டு குப்பையை அவங்க தன் கையால தனித்தனியா பிரிப்பாங்க. அப்ப இந்த மாதிரி கண்ணாடிச் சில்லுகள் கூர்மையான ஊசிகள் பிளேடுகள் எல்லாம் இப்டி ஓப்பனா இருந்தா அவங்க கையில குத்தி கிழிச்சுக்குவாங்கதானே?” என்று மாமா கேட்க,
“ஐயோ! ஆமா மாமா! அவங்க கையில கண்டிப்பா காயம் படும்!” என்றான் அவசரமாக.
“ம்.. அதனாலதான் இந்த மாதிரி அபாயகரமான கண்ணாடி சில்லுகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், உடைந்த கத்தி பிளேடுகள், கம்பிகள் எல்லாம் கவனமா அப்புறப்படுத்தணும்.” ன்னு மாமா சொன்னாங்க.
“அது எப்டி மாமா?” பிரவீண் கேட்டான்.
“அப்டி கேளு! இப்ப இந்த உடைந்த கண்ணாடி சில்லுகளை ஒரு கனமான துணியில போட்டு எல்லா பக்கமும் மூடுற மாதிரி அந்த துணியால சுத்தி மூடி நூல் வெச்சி இறுக்கமா கட்டிடணும். இல்லன்னா டேப் போட்டு ஒட்டிடணும்.” ன்னு மாமா சொன்னாங்க.
“ஆனா இப்டி துணியில சுத்தி போட்டா கூட இதுல கண்ணாடி சில்லு இருக்குன்னு அவங்களுக்கு தெரியாதே மாமா?” ன்னு பிரவீண் கேட்டான்.
“வெரி குட்! துணியில சுத்தி குப்பைத்தொட்டியில போடக் கூடாது. இத மட்டும் தனியா வெச்சிருந்து குப்பை சேகரிக்க வர துப்புரவுப் பணியாளர் கிட்ட, ‘இதுல உடைந்த கண்ணாடி சில்லு இருக்கு! இதுல உடைந்த ஊசி / பிளேடு இருக்கு’ ன்னு சொல்லி கவனமா குடுக்கணும்!”
“அப்டி குடுத்தா?”
“அப்டி குடுத்தா அவங்க அதை தனியா சேகரிச்சி குப்பைக்கிடங்குக்கு எடுத்துட்டு போய் அதுக்குன்னு இருக்கற இடத்தில வெச்சி அப்புறப்படுத்துவாங்க. இல்லன்னா ரீசைக்கிள் செய்யக் கூடியதை ரீசைக்கிள் செய்வாங்க!” ன்னு சொல்லிட்டு,
“ரீசைக்கிள்ன்னா என்னன்னு தெரியுமா?” ன்னு கேட்டாங்க.
“ம்! மறுசுழற்சிதானே? அதாவது திரும்பவும் பயன்படுத்தறது?” ன்னு பிரவீண் சொன்னான்.
“அதேதான்! வெரி குட்.” ன்னு மாமா சொல்ல பிரவீண் அந்த கண்ணாடி சில்லுகளை பத்திரமா கட்ட கனமான துணியும் நூலும் எடுத்து வந்து மாமா சொல்லிக் குடுத்த மாதிரியே அதை கவனமா துணியில சுத்தி பேக் (pack) செய்து வைத்தான்.
மறுநாள் காலையில ஞாபகமாக துப்புரவுப் பணியாளர் கிட்ட, தன் வீட்டு குப்பைத் தொட்டியைக் குடுக்கறப்ப கட்டி வைத்த கண்ணாடிச் சில்லுகள் அடங்கிய பொட்டலத்தை,
“ஆன்ட்டி! இதுல உடைஞ்ச கிளாஸ் பீஸ் இருக்கு!” ன்னு சொல்லி குடுத்தான்.
“ரொம்ப நல்ல வேலை செய்த தம்பி! இப்டியே எல்லா வீட்டுலயும் கவனமா இருந்தா எங்களுக்கு எப்பவும் காயமே படாது!” ன்னு சொன்னாங்க அந்த பணியாளர்.
அவங்க கையில போன வாரம் இதே போல உடைந்த கண்ணாடி குத்தியதால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து வைத்து பெரிய கட்டு போட்டிருந்தார்கள்.
*******
என்ன குழந்தைகளே! உடைந்த கண்ணாடித் துண்டுகள் பிளேடுகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் எல்லாம் எப்படி முறையாக அப்புறப்படுத்தணும்னு தெரிஞ்சிகிட்டீங்களா?
நம் வீட்டை மட்டுமல்ல நாட்டையும் தூய்மையாக வைப்போம்.
நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் துப்புரவுப் பணியாளர்களிடம் மனிதத்தன்மையுடன் நடந்து கொள்வாம்!
♥♥♥♥♥
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.