ஆசிரியர்: சி.சரிதா ஜோ
பக்கம்: 49
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை : ₹45
ஐந்து சிறிய கதைகள் கொண்ட நூல் இது. தெளிவான சிந்தனையையும், மனித நேயத்தையும், அனைத்து உயிர்களின் மீதான அளவற்ற அன்பையும் வளர்த்துக்கொள்வதற்கான வேட்கையையும், குழந்தைகளின் மனத்திற்கு அளிப்பது இலக்கியங்களே என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. யார் என்ன வேலை செய்தாலும் தன் வேலையே உயர்ந்தது, கஷ்டமானது என்ற போக்கு குழந்தைகளுக்கும்,சமயத்தில் பெரியவர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது. அதிலிருந்து கூடு விட்டு கூடு பாய்வது போல ரோகிணி ஒரு நாள் கிளியாக மாறி அவர்களின் உலகில் உள்ள கஷ்டங்களைப் புரிந்து கொள்கிறாள். இவ்வளவு கஷ்டமான வாழ்க்கையா உங்களுடையது? நீங்கள் பறந்து கொண்டு இருப்பதைப் பார்த்து நீங்கள் அனைவரும் ரொம்ப ஜாலியா இருக்கீங்கன்னு நினைச்சேன் என்று ரோகிணி சொல்லும்போது நமக்கும் அவைகளின் கஷ்டம் புரிகிறது. நாங்கள் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நாளும், ஏன் தூங்கும் போதுகூட விழிப்போடு இருக்க வேண்டும். இல்லையென்றால் எதிரிகளால் நாங்கள் கொல்லப்படுவோம். இதையெல்லாம் கடந்து கூட நாங்கள் சந்தோஷமாத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற கிளியின் பதிலும் அருமை. வாழ்வியல் பாடங்களாக அமைந்தது. நட்சத்திரங்களாக மாறிய கதைகள் படித்தவுடன் நாமும் இனி புதிய கதைகளைக் குழந்தைக்குச் சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன். ஆமாம் என் கதையும் நட்சத்திரமாக மாற வேண்டும் என்று யாருக்குதான் ஆசை இருக்காது!
எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா என்ற கதை படிக்கும்போது மனம் மிகவும் சோர்ந்து விட்டது. கண்ணுக்குத் தெரியாத ஒட்டகங்கள் மீது இரக்கமும், மனிதனின் சுயநலத்தின் மீது வெறுப்பும் ஏற்பட்டது.
காகமும், எறும்பும் கதையில் காகத்திற்கு உணவிடுவது முதல், அது கரைந்தால் விருந்தாளி வருவது வரை, கேலி செய்திருக்கிறார். காகம் கருப்பு என்பது அதற்குத் தெரியாது தானே! எப்படி வருத்தம் கொள்ள முடியும்? கேள்வி நியாயம் தான்!
எழுத்துக்கள் கோபித்துக் கொண்டு செல்வது போல் புத்தக நண்பனும்,பூதமும் கதையில் சொல்வது சிறப்பு. செல்பேசியா,புத்தகமா என்று குழந்தைகளிடம் கேள்வி கேட்டு அதற்கு ஒரு தீர்வையும் தேடுகிறார். நன்று. நீங்களும் வாங்கிப் படியுங்கள் குழந்தைகளே!
என் பெயர் ஜெயாசிங்காரவேலு.நான் கரூரில் இருக்கிறேன்.இரண்டு வருடமாக தளங்களில் எழுதி வருகிறேன்.கணிதம்,சிறப்புக்கல்வி படித்துள்ளேன்.