கழுதையின் சோம்பேறித்தனம்

ஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவர் தினமும் வேறு கிராமத்திற்கு உப்பு விற்க செல்வார். உப்பு மூட்டைகளைச் சுமக்க ஒரு கழுதையை வைத்திருந்தார். உப்பு மூட்டைகளை அந்த கழுதையின் மீது ஏற்றிக் கொண்டு கிராமத்திற்கு செல்வார். ஆனால் அதற்கு ஆற்றைக் கடக்க வேண்டும். தினமும் சிரமத்தோடு ஆற்றைக் கடக்கும் அந்த கழுதை. 

ஒரு நாள் ஆற்றைக் கடக்கும் போது, திடீரென்று அதன் முதுகிலிருந்த உப்பு மூட்டை தவறி நீரில் விழுந்துவிட்டது.

வியாபாரி நீரில் விழுந்த உப்பு மூட்டையை எடுத்து மீண்டும் கழுதை மீது ஏற்றினார். நீரில் நனைந்ததால் உப்பு கரைந்து அந்த மூட்டையின் எடை குறைந்துவிட்டது.

‘அடடே எடை குறைந்து விட்டதே! இவ்வளவு நாளா நமக்கு இது தெரியாம போயிடுச்சே! இனிமே தினமும் மூட்டையை நீரில் தள்ளி விட்டு எடை குறைஞ்ச மூட்டைய ஈசியா தூக்கணும்.’ என்று கழுதை நினைத்தது.

அதன்படி தினமும் ஆற்றுக்கு வந்ததும் தன் உடம்பை அசைத்து மூட்டையை நீரில் தள்ளி விட்டது. வியாபாரியும் நீரில் நனைந்த மூட்டையை எடுத்து கழுதையின் முதுகில் ஏற்றுவார். கழுதையும் எடை குறைந்த மூட்டையை சுலபமாகத் தூக்கிச் சென்றது.

படம்: அப்புசிவா

தினமும் இப்படியே செய்ததால் உப்பு வியாபாரிக்கு சந்தேகம் வந்தது.

அதனால் அவர் உப்பு மூட்டைக்குப் பதிலாக பஞ்சு மூட்டையை ஏற்றினார். ஆனால் அது கழுதைக்குத்  தெரியவில்லை.

வழக்கம் போல ஆற்றுக்கு வந்ததும் தன் உடம்பை மெதுவாக அசைத்து அசைத்து மூட்டையைக் கீழே தள்ளியது. 

வியாபாரியும் நீரில் நனைந்த பஞ்சு மூட்டையை மீண்டும் கழுதை மீது ஏற்றினார்.

பஞ்சு நனைந்ததால் அதன்  எடை அதிகமாகியது. அதனால் கழுதைக்கு முதுகு வலித்தது.

‘என்ன இது எடை அதிகமாக உள்ளது.’ என்று நினைத்தது கழுதை.

நேரம் ஆக ஆக மூட்டையின் கனம் கூடியது. கழுதையின் முதுகு வலியும் கூடியது. அதனால் நடக்க முடியவில்லை.

எடை அதிகமாக இருப்பதற்கு உப்பு வியாபாரிதான் காரணம் என்று புரிந்து கொண்டது.

அது வலியில் முனகியது.

உப்பு வியாபாரி,

“இனிமேல் உப்பை கீழே தள்ளுவாயா?” என்று கேட்டார். 

“என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்.” என்றது கழுதை.

“புரிந்து கொள். சோம்பேறித்தனம் எப்பொழுதும் நிலைக்காது. எவரையும் ஏய்த்துப் பிழைக்க எண்ணக் கூடாது.” என்றார்.

கழுதையும் அதன் பின் சோம்பேறித்தனப்படாமல் எந்தத் தவறும் செய்யாமல் நேர்மையாக நடந்து கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *