மரிலா திருமதி பிளிவெட்டிடம் சொன்னதைக் கேட்ட ஆனியின் முகம், சூரியன் உதயம் ஆகும் வானம் போல் பிரகாசமானது. முகத்தில் இருந்த சோகம் மறைந்து, நம்பிக்கை லேசாகச் சுடர் விட்டது. மகிழ்ச்சியில் அவள் கண்கள் மின்னின.
திருமதி ஸ்பென்சரும், திருமதி பிளிவெட்டும் உள்ளே சென்ற போது, ஆனி மரிலாவிடம் ஓடோடி வந்தாள்.
“உண்மையாலுமே என்னைக் கிரீன் கேபிள்சில் வைத்துக் கொள்ளப் போவதாய், நீங்கள் அவர்களிடம் சொன்னீர்களா? அல்லது அப்படி நீங்கள் சொன்னதாக, நான் கற்பனை செய்தேனா?” ஆனி கேட்டாள்.
“உண்மை எது? கற்பனை எது? என்று, உன்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியாவிட்டால், கற்பனை செய்வதை நிறுத்த, நீ கற்றுக் கொள்வது நல்லது. நான் அப்படிச் சொன்னது, உண்மை தான். ஆனால் உன்னை என் வீட்டில் வைத்துக் கொள்வது பற்றி, இன்னும் முடிவு எடுக்கவில்லை. திருமதி பிளிவெட்டிடம் உன்னை அனுப்புவதா? வேண்டாமா? என்பதைப் பற்றி யோசித்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும். என்னை விட, அவருக்குத் தான், நீ அதிகம் தேவைப்படுகிறாய்” என்றார் மரிலா.
“அவரிடம் போவதை விட, நான் ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போவதே நல்லது. அவர் மூஞ்சியைப் பார்த்தால், மரத்தில் துளை போடும் கூர்மையான கருவி போல் உள்ளது” என்றாள் ஆனி.
மரிலா தமக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, ‘இப்படி பேசுவதற்காகக் ஆனியைக் கண்டிக்க வேண்டும்’ என்று நினைத்தார்.
“உன்னை மாதிரி சின்னப் பொண்ணு, முன் பின் தெரியாத ஒரு பெண்மணியைப் பத்தி, இப்படிப் பேசுறது ரொம்ப தப்பு. நாக்கை அடக்கிக்கிட்டு, அமைதியாப் போய் உட்காரு; நல்ல பொண்ணா நடந்துக்கோ” என்று, கடுமையான குரலில் கூறினார் மரிலா.
“நீங்க என்னை வீட்டுல வைச்சுக்கிறதா இருந்தா, நீங்க என்ன சொன்னாலும், நான் செய்வேன்; எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னாலும், அது மாதிரி இருக்க முயற்சி செய்வேன்” என்றாள் ஆனி.
இருவரும் கிரீன் கேபிள்ஸ் திரும்பி வந்த போது, மாத்யூ ஆச்சரியமாகப் பார்த்தார். ஆனியைத் திரும்ப அழைத்து வந்ததில், மாத்யூ முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. ஆனி அங்கிருந்து நகர்ந்த பிறகு, மரிலா திருமதி ஸ்பென்சர் வீட்டில் நடந்ததைப் பற்றியும், திருமதி பிளிவெட் பற்றியும் மாத்யூவிடம் தெரிவித்தார்.
“நீங்களும் அவளை இங்கே வைத்துக் கொள்ள விரும்பினீர்கள். எனக்கு இதுவரை ஒரு பெண் குழந்தையை வளர்த்த முன் அனுபவம் இல்லை. இருந்தாலும் என்னால் முடிந்தவரை, நல்லவிதமாக வளர்க்க முயல்கிறேன். அவள் இங்கேயே தங்கலாம் மாத்யூ” என்றார் மரிலா.
அதைக் கேட்ட மாத்யூ முகம், மகிழ்ச்சியில் மலர்ந்தது.
“நல்லது மரிலா. அவள் சுவாரசியம் நிறைந்த குட்டிப் பெண்” என்றார் மாத்யூ.
“சுவாரசியமான பெண்ணாக இருந்தால் மட்டும் போதாது. நமக்கு உதவியாகவும், அவள் இருக்க வேண்டும். நான் அவளுக்கு வேலைகளைச் சொல்லிக் கொடுத்துப் பழக்குகிறேன். ஆனால் அதில் நீங்கள் தலையிடக் கூடாது.”
“உன் வழியிலேயே பழக்கப்படுத்து மரிலா. ஆனால் அவளிடம் கடுமையாக நடந்து கொள்ளாதே; நல்ல விதமாகவும், இரக்கத்துடனும் நடந்து கொள். அவள் வாழ்க்கை வீணாகாமல் பார்த்துக் கொள்” என்றார் மாத்யூ.
“அவள் இங்கே தங்கப் போவதை, இன்று இரவு அவளிடம் சொல்லப் போவதில்லை; சொன்னால் இரவு, தூங்கவே மாட்டாள். ஓர் அனாதைப் பெண்ணைத் தத்து எடுக்க முடிவு செய்து விட்டோம். எப்படி போகுது என்று பார்க்கலாம்?” என்றார் மரிலா.
அன்று இரவு ஆனியைத் தூங்க அழைத்துச் சென்றார் மரிலா.
“ஆனி! நேற்று இரவு உன் துணிமணிகளைத் தரை முழுக்கக் கலைத்துப் போட்டு இருந்ததைப் பார்த்தேன். அது மோசமான பழக்கம். அதை நான் அனுமதிக்க மாட்டேன். எந்தத் துணியை எடுத்தாலும், அதை நன்றாக மடித்து, நாற்காலி மேல் வைக்க வேண்டும். சுத்தமாக இல்லாத சின்னப் பெண்ணால், எனக்கு எந்த உதவியும் கிடைக்காது” என்றார் மரிலா கண்டிப்பான குரலில்.
“நேற்று இரவு நான் சோகமான மனநிலையில் இருந்தேன். அதனால் என் துணிமணிகள் பற்றிய, நினைப்பே இல்லை. இன்று இரவு மடித்து வைக்கிறேன்” என்றாள் ஆனி.
மறுநாள் மதியம் வரை, கிரீன் கேபில்ஸ் வீட்டில் ஆனி தங்கப் போவதைப் பற்றி, மரிலா அவளிடம் சொல்லவே இல்லை. மரிலா காலையில் அவளுக்குச் சில வேலைகளைக் கொடுத்துச் செய்யச் சொன்னார். ஆனி சீக்கிரமாகவே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டாள். மரிலாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, பணிவாகவும் நடந்தாள். ஆனால் வேலைக்கு நடுவில் பகல் கனவு காணத் துவங்கி, வேலையை மறந்து விடும் கெட்ட பழக்கம் ஆனியிடம் இருந்தது.
அன்று இரவு சாப்பாட்டுப் பாத்திரங்களைக் கழுவி முடித்த ஆனி திடீரென்று மரிலாவிடம் வந்தாள். அவள் ஒல்லி உடம்பு நடுங்கியது. கண்கள் கலங்கின.
ஆனி மரிலாவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “என்னை அனுப்பப் போகிறீர்களா? இல்லையா? என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள்; இன்று காலை முழுவதும், நான் பொறுமையாக இருந்தேன். ஆனால் இனி மேலும் என்னால் தெரிந்து கொள்ளாமல், இருக்க முடியாது. தயவு செய்து சொல்லுங்கள்” என்றாள்.
“அந்தப் பிடிதுணியைச் சுத்தமான வெந்நீரில் அலச சொன்னேன். நான் சொன்னது போல, நீ செய்யவில்லை. என்னிடம் கேள்வி எதுவும் கேட்பதற்கு முன், போய் அந்த வேலையைச் செய் ஆனி!” என்றார் மரிலா.
ஆனி போய் அந்த வேலையை முடித்துவிட்டு வந்தாள். அதற்கு மேலும் மரிலாவால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“நீ நல்ல பெண்ணாகச் சமர்த்தாக, நன்றியுடன் நடந்து கொண்டால் மாத்யூவும், நானும் உன்னை இங்கே வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து இருக்கிறோம்” என்றார் மரிலா.
ஆனி கண்களில் ஆனந்தக் கண்ணீர். அவள் அழுவதைப் பார்த்து, “ஏன் என்னாச்சு?” என்றார் மரிலா.
“நான் அழுகிறேன். ஏன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் நல்ல பெண்ணாகச் சமர்த்தாக நடந்து கொள்ள முயல்கிறேன்” என்றாள் ஆனி, மகிழ்ச்சியுடன்.
(தொடரும்)
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.