தனது பிறந்தநாளுக்கு பீட்டர் கொடுத்த ரயில் இன்ஜினை வைத்துக்கொண்டு வெகு நேரம் யோசித்தாள் ராபர்ட்டா. ‘அவனுக்கு ரொம்பப் பிடிச்ச ரயில் இன்ஜினை எனக்கே தந்துட்டானே! அவனுக்கு சந்தோஷம் தர்ற மாதிரி நாம ஏதாவது செய்யணும்’ என்று யோசிக்க, சட்டென்று ஒரு யோசனை புலப்பட்டது. சிறியதாக இருந்தாலும் நிஜ ரயில் போலவே ஓடக்கூடிய பொம்மை ரயில் என்ஜின் தான் அது. கொஞ்சம் பழுது ஏற்பட்டிருந்ததால் அதை உபயோகிக்க முடியவில்லை. அந்தப் பழுதை சரிசெய்ய அவர்களுடைய அப்பா பெரிதும் முயன்றார். அவரால் முடியவில்லை.

 அந்த ரயில் எஞ்சினை எடுத்துக்கொண்டு  தனியாக ரயில் நிலையத்திற்குப் போனாள் ராபர்ட்டா. பீட்டர், ஃபிலிஸ், அம்மா யாருக்கும் அவள் சொல்லவில்லை. அங்கு சென்றபோது  ரயில் ஒன்று நிலையத்தில் நின்றிருந்தது. அதன் என்ஜினைத் தேடிச் சென்ற ராபர்ட்டா, அதனுள் ரயிலின் ஓட்டுனர் அமர்ந்திருந்ததைப் பார்த்தாள். என்ஜினுக்குள் ஏற முயன்றாள். அவளைக் கவனிக்காத ஓட்டுநர், ரயிலை இயக்கத் தொடங்கினார். ரயிலின் என்ஜின் சற்று அசைய, ராபர்ட்டா தவறிக் கீழே விழுந்தாள்.

Train repair
படம்: அப்புசிவா

அவள் விழப்போவதை அருகிலிருந்த ஓட்டுனரின் உதவியாளர் பார்த்துவிட்டு, “ஐயோ! ஒரு சின்னப் பொண்ணு கீழே விழுந்துட்டா.. ரயிலை உடனே நிறுத்துங்க” என்று சத்தமிட்டார். ஓட்டுனர் உடனே செயல்பட்டு  ரயிலை நிறுத்திவிட்டார். ராபர்ட்டா மேலிருந்த தூசி மற்றும் அழுக்கினை அகற்றி, அவளுக்கு ஏதும் காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்து அவளுக்கு தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர்.

“ஏன் என்ஜினுக்குள்ள ஏற முயற்சி செய்தே? கொஞ்சம் பிசகியிருந்தாலும் எவ்வளவு ஆபத்தாகி இருக்கும்?” என்று அவர்கள் கேட்க, தன் பையில் வைத்திருந்த சிறிய ரயில் எஞ்சினை எடுத்து அவர்களிடம் காட்டினாள் ராபர்ட்டா.

“இதை உங்களால சரி செய்ய முடியுமான்னு கேட்கத் தான் வந்தேன். இதை நல்லா ஓட வச்சு என் தம்பிக்குக் கொடுத்தால் அவன் ரொம்ப சந்தோஷப்படுவான். அவனுக்குப் பிடிச்ச ரயில் என்ஜின் இது. இதை அவன் எனக்காக விட்டுக் குடுத்திருக்கான்” என்று அவள் சொல்ல ரயிலின் ஓட்டுனருக்கும் உதவியாளருக்கும் கண்கள் கலங்கிவிட்டன.

“கண்டிப்பா சரி பண்ணித் தரேன். எனக்கு இந்த என்ஜினுடைய இயக்கம் எல்லாம் ரொம்ப நல்லாத் தெரியும்” என்று கூறிவிட்டு அதை வாங்கிக் கொண்டார் ஓட்டுநர்.

 சொன்னபடியே அடுத்த இரண்டு நாட்களில் அந்த பொம்மை ரயில் என்ஜினை அழகாகப் பழுது நீக்கி ஓடச் செய்து கொடுத்து விட்டார். அதை வாங்கிய ராபர்ட்டா மகிழ்ச்சியுடன் ஓடிச் சென்று பீட்டரிடம் கொடுத்தாள். அது நல்ல முறையில் தரையில் இயங்குவதைக் கண்டு பீட்டர், ஃபிலிஸ், அம்மா மூன்று பேரும் மகிழ்ச்சியின் ராபர்ட்டாவைக் கட்டிக் கொண்டனர்.

“நீங்க எப்பவுமே இதே போல ஒற்றுமையாவும் அன்பாவும் இருக்கணும்” என்றார் அவர்களுடைய அம்மா.

 அடுத்து வந்த சில நாட்களில் அம்மா நகரத்திற்கு ஒரு வேலையாகச் சென்றிருந்தார். அம்மா திரும்பி வரும் நேரம் குழந்தைகள் மூவரும் அம்மாவுக்காக ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.

அம்மா தன் ரயிலில் வந்து இறங்கிய போது அங்கு வந்த ரயில் நிலையக் காவலர்கள் ஒரு மனிதரின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றனர்.‌ அவருடைய உடைகள் அழுக்காக இருந்தன. உடல்நலம் இல்லாதவர் போல் தோன்றினார். அவர் வேற்று மொழியில் ஏதோ கூறினார். அது இவர்களுக்குப் புரியவில்லை. காவலர்கள் ரயிலின் பயணச்சீட்டு அவர் கையில் இல்லை என்று கூறினர்.

 ஒரு நிமிடம் அந்த மனிதரை உற்றுப் பார்த்த அம்மாவிற்கு அவரை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு தெரிந்தது.

“அடிக்காதீங்க! கொஞ்சம் இருங்க” என்று ரயில் நிலையக் காவலர்களை கேட்டுக் கொண்டார் அம்மா. அந்த நபரிடம், உங்களுக்கு என்னென்ன மொழிகள் தெரியும் என்று கேட்டார்.‌ “ஃபிரெஞ்சு மொழி தெரியும்” என்று அந்த மனிதர் சொல்ல, அம்மா ஃபிரெஞ்சு மொழியில் அவரிடம் பேசினார்.

பின் காவலர்களிடம், “இவர் ரஷ்யாவில் மிகப்பெரிய எழுத்தாளர். இவரோட புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளை நானும் படிச்சிருக்கேன். இப்ப அவரோட பர்ஸையும் டிக்கெட்டையும் யாரோ திருடிட்டாங்களாம். இப்ப அவருக்கு உடம்பும் சரியில்லை. இவரை மன்னிச்சு விட்ருங்க. இவருக்கு சிகிச்சை தேவை. நான் இவரை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்  நல்லா கவனிச்சுக்கிறேன்” என்றார்

காவலர்களும் அம்மாவின் கோரிக்கையை ஏற்று அந்த ரஷ்ய மனிதரை அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்ததும் அவருக்கு ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தார் அம்மா. அம்மாவுக்கு வந்திருந்தது போன்ற காய்ச்சல்தான் அவருக்கும் இருந்தது. குழந்தைகளின் நண்பர்களான அந்தப் பெரிய மனிதர் கொடுத்த மருந்துகளில் சில மிச்சம் இருந்ததால் அதை வைத்து அந்த ரஷ்ய எழுத்தாளருக்கு முதலுதவி அளித்தனர்.

 அருகில் உள்ள மருத்துவரை அழைத்து வந்தான் பீட்டர். சிகிச்சைக்குப் பின் நன்றாக தேறி விட்டார் ரஷ்ய எழுத்தாளர். பின் அம்மா அவரிடம் மேலும் சில விபரங்களைக் கேட்க, அவர் தன் வாழ்க்கைக் கதையை ஃப்ரெஞ்ச் மொழியில் கூறினார்.

அதைக் கேட்ட அம்மா, “ஏழை மக்களோட நலனுக்காக நிறைய கதைகளை எழுதுறவர் இவர். இவர் எழுதின கருத்துக்கள் ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கலன்னு இவரை ஜெயில்ல போட்டாங்க. ஜெயில்ல இருக்கும் போதே அடுத்ததா அவங்க நாட்டு ராணுவத்தில் இணைஞ்சு போர் நடக்குற இடத்துக்குப் போறதுக்கான ஆணை வந்திருக்கு. அந்த நேரம் அவருடைய மனைவியும் குழந்தையும் நம்ம இங்கிலாந்து நாட்டுக்குக் குடி பெயர்ந்து வந்துட்டதா கேள்விப்பட்டிருக்கிறார். அவங்களைத் தேடி வந்த நேரம் தான் உடல் நலமில்லாமல் போச்சு. அவரோட உடமைகளையும் யாரோ திருடிட்டாங்க” என்று குழந்தைகளிடம் சொல்ல,

“இப்படி போர் மற்றும் அரசியல் காரணத்துக்காக சிறையில் இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப பாவம் என்னம்மா?” என்று கேட்டாள் ராபர்ட்டா.

“ஆமா! நாம இவங்களுக்காகக் கடவுள் கிட்ட வேண்டிக்கலாம்” என்றாள் ஃபிலிஸ்.

“ஜெயில்ல இருக்கிற அனைத்து கைதிகளுக்காகவும் கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க” என்று அழுத்திச் சொன்னார் அம்மா.

 ஏன் என்று தெளிவாகப் புரியவிட்டாலும் அம்மா சொன்னது போலவே குழந்தைகளும் அனைத்து கைதிகளுக்காகவும் மனமுருக வேண்டிக் கொண்டனர்.

-தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *