சிறுவர் கதைகள்
ஆசிரியர் அப்பு சிவா
நீலவால்குருவி, சென்னை-92 செல்:-9840603499
விலை ரூ50/-
சிறார்க்கு வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய 6 கதைகள், இந்தச் சிறார் கதைத் தொகுப்பில் உள்ளன. இவ்வுலகில் சாக்லேட் பிடிக்காத குழந்தைகள் உண்டா?
‘பெரிய சாக்லேட்’ என்ற புத்தகத் தலைப்பாக அமைந்த முதல் கதையில், ஜீவா என்ற சிறுவனின் வீட்டில் திடீரென்று மின்சாரம் போய் விடுகிறது. இருட்டில் காலில் பிசுபிசுவென்று ஏதோ ஒட்டுகிறது. வெளிச்சம் வந்தவுடன் பார்த்தால் அங்கே! பீரோ சைஸுக்கு, ஒரு பெரிய சாக்லேட்! அவனுக்கு இனிய அதிர்ச்சி! ‘அப்பா எதிர்பாராத ஒரு பரிசு தருகிறேன் என்று சொன்னாரே! இதுவாக இருக்குமா?’ என்று யோசிக்கிறான். திகட்டும் அளவுக்குச் சாக்லேட்டைத் தின்கிறான்; அதன் மேல் ஏறிச் சறுக்கி விளையாடுகிறான்.
பெரிய தண்ணீர் தொட்டி அளவில், அட்டைப் பெட்டியில் மாம்பழ ஜூஸ் இருக்கிறது. ஜீவா அதில் ஓட்டை போட்டு, ஜூஸ் குடிக்கும் போது, அது வழிந்து ஆறாகி விடுகிறது. அதில் ஜீவா மிதக்கிறான். அதற்குப் பிறகு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள, இந்தக் கதைப் புத்தகம் வாங்கி, வாசியுங்கள். சுவையான கற்பனை கலந்த ஜாலியான கதை!
மனிதர்கள் யானை வழித்தடத்தில் கட்டிடங்களைக் கட்டி விட்டதால், வலசை போன யானைக் கூட்டத்தில், ஒரு யானைக்குட்டி வழி தவறி விடுகின்றது. அம்மாவைக் காணாமல், அந்தக் குட்டி யானை தவிக்கிறது. மனிதர்களின் காடழிக்கும் நடவடிக்கை காரணமாகக் காட்டுயிர்களுக்கு ஏற்படும் துன்பத்தை, நெகிழ்ச்சியாகக் குழந்தைகளுக்குச் சொல்லும் கதை ‘குட்டியானை’.
8 வயது சுட்டி தனிஷ்கா எழுதிய, கற்பனை நிறைந்த சுவாரசியமான தேவதையின் கதையும், இதில் உள்ளது. குட்டி எறும்பு ஏன் சோகமாக இருந்தது? முனிவரிடம் அது என்ன பாடம் கற்றது? பயிற்சி வகுப்பில் சேராமல், அகிலா கட்டுரைப் போட்டியில், முதல் பரிசு பெற்றது எப்படி? என்ற கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தை வாசித்தால் விடை கிடைக்கும். 6-12 வயது குழந்தைகளுக்கான புத்தகம். அவசியம் வாங்கி வாசிக்கக் கொடுங்கள்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.