மாரியப்பன் தங்கவேலு

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பதக்கங்களை வென்றவர், மிகவும் பாராட்டுக்குரிய மாரியப்பன் அவர்களைப் பற்றி இந்த மாதம் இவர் யார் தெரியுமா? பகுதியில் தெரிந்து கொள்வோம் குழந்தைகளே!

முதலில் பாரா ஒலிம்பிக் என்பதைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். மாற்றுத்திறனாளிகள் பங்கு கொள்ளும் ஒலிம்பிக் போட்டி பாரா ஒலிம்பிக் என்று அழைக்கப்படும்.

தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டி கிராமத்தில் 1995ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிறந்தவர் மாரியப்பன்.

மாரியப்பனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது நடந்த ஒரு விபத்தில், பேருந்து சக்கரத்தில் சிக்கி அவரது வலது கால் மூட்டு நசுங்கியது. அது அவரை நிரந்தர மாற்றுத்திறனாளி ஆக்கியது.

தமது பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ராஜேந்திரனால் உந்தப்பட்டு தடகளத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் மாரியப்பன். 2016 பாராலிம்பிக் போட்டிகளின் போது அளித்திருந்த பேட்டியில், “பள்ளிப் பருவத்தில் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான எனது திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், எனக்கு ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார்.” என்று மாரியப்பன் கூறியிருந்தார்.

பள்ளியில் படித்துக்கொண்டே மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாரியப்பன், 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தேசிய, சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றார்.

2013இல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் உயரம் தாண்டிய விதம், பயிற்சியாளர் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக, மாரியப்பனுக்கு பெங்களூருவில் வைத்து பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 2015இல், தமிழ்நாட்டின் ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ (BBA) பட்டப்படிப்பை முடித்தார் மாரியப்பன்.

மத்திய அரசு மாரியப்பனுக்கு, 2017ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும், 2020ஆம் ஆண்டில் இவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் வழங்கி கெளரவித்தது.

2016இல் ரியோ பாராலிம்பிக், 2021இல் டோக்கியோ பாராலிம்பிக் என இரு சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி என பதக்கங்களை வென்றதன் மூலம், பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக ஒரே பிரிவில் இரண்டு முறை பதக்கம் வென்ற பாராலிம்பிக் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் மாரியப்பன்.

கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றிருந்தார் மாரியப்பன் தங்கவேலு. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் அவர் வென்ற முதல் தங்கம் அது.

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் (T63) வெண்கலப் பதக்கம் வென்றார். தொடர்ந்து மூன்று முறை பதக்க்கங்களை வென்று ஹாட்ரிக் சாதனை செய்திருக்கிறார் மாரியப்பன்.

சாதிக்க எதுவும் தடையில்லை தானே குழந்தைகளே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *