ஒரு காட்டில் நான்கு விலங்குகள் நட்புடன் பழகி வந்தன. ஒரு மான், ஒரு காகம், ஓர் ஆமை மற்றும் ஓர் எலி.
தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு மரத்தின் கீழே நின்று பேசிக் கொண்டு விளையாடிக் கொண்டு நேரத்தை ஒன்றாகக் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தன.
ஒரு நாள் காலையில் அங்கு அவை கூடிப் பேசிக் கொண்டிருந்த சமயம் அங்கு மான் மட்டும் வரவேயில்லை. சிறிது நேரம் காத்துக் கொண்டு இருந்தன.மான் வரவேயில்லை. கவலையில் ஆழ்ந்தன மானின் மூன்று நண்பர்களும்.
காகம் கிளம்பியது. “நான் சென்று பறந்து போய் மானைத் தேடிவருகிறேன்” என்று சொல்லி மானைத் தேடி காடு முழுவதும் அலைந்து திரிந்தது. ஓரிடத்தில் வேடன் ஒருவனின் வலையில் மாட்டிக் கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த மானைக் கண்டுபிடித்து விட்டது.
மானிடம், ” கவலைப் படாதே நண்பா. நான் நமது நண்பர்களை அழைத்து வருகிறேன். உன்னை நாங்கள் எப்படியாவது விடுவித்து விடுவோம்” என்று ஆறுதல் சொல்லி விட்டு எலியை மட்டும் தனது அலகால் தூக்கிக் கொண்டு விரைவில் அங்கு வந்து சேர்ந்தது. ஆமை மெதுவாக நகர்ந்து அங்கு வந்து கொண்டிருந்தது.
வந்தவுடன் எலி தனது கூரிய பற்களால் வலையைத் துண்டித்தது. மானும் வலையில் இருந்து வெளியே வந்தது. ஆமையும் அதற்குள் அங்கு மெதுவாக வந்து சேர்ந்தது.
சற்று தூரத்தில் வேடன் திரும்பி வந்து கொண்டிருந்ததைப் பார்த்து மான் வேகமாக அங்கிருந்து ஓடித் தப்பித்து விட்டது. எலியும் குடுகுடுவென்று ஓடியது. காகமும் அங்கிருந்து பறந்து சென்றது.
வேடன் அங்கு வந்து பார்த்தான். மானைக் காணாமல் ஏமாந்து போனான். அறுபட்டுக் கிடந்த வலையைக் கண்டு ஆத்திரம் அடைந்த வேடன் சுற்றுமுற்றும் பார்க்க சிறிது தூரத்தில் தப்பி ஓடிக் கொண்டிருந்த மானைக் கண்டு இன்னும் கொஞ்சம் ஆத்திரம் கொண்டான்.
அதன் பின்னால் ஓடியும் பயனில்லை. மானின் வேகத்திற்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லை.
அப்போது அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்த ஆமை அவன் கண்களில் பட்டது. சரி,கிடைத்தது லாபம் என்று எண்ணி ஆமையைப் பிடித்துத் தன் வலையில் சுற்றித் தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.
நண்பர்கள் மூவரும் மரத்தடியில் குழுமி விட்டுப் பார்த்தால் ஆமையை மட்டும் அங்கு காணவில்லை. பதறிப் போயினர் அந்த நண்பர்கள்.
திரும்பவும் காகம் பறந்து போய்ப் பார்த்தது. ஆமையை வலையில் கட்டி வேடன் தோளில் போட்டுக் கொண்டு நடப்பதைப் பார்த்து விட்டு வந்து மற்ற இருவரிடமும் சொல்ல அவர்கள் மூவரும் சேர்ந்து பேசினார்கள். வேடனிடம் மாட்டிக் கொண்ட தங்களது நண்பனைக் காப்பாற்ற ஒரு திட்டம் தீட்டின.
அந்தத் திட்டத்தின் படி வேடன் வரும் வழியில் மான் கீழே படுத்து அசையாமல்
கிடந்தது. காகம் அதன் கண்ணருகில் அமர்ந்து கண்ணைக் கொத்துவது போல்
நடித்தது.
வேடன் கீழே கிடந்த மானையும் அதன் கண்களைக் கொத்திக் கொண்டிருந்த காகத்தையும் பார்த்து, “மான் இறந்து கிடக்கிறது. நமக்கு இன்று மானும் கிடைத்து விட்டது” என்று நினைத்து மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்தான்.
வலையை இறக்கிக் கீழே வைத்து விட்டு மான் அருகில் வந்தான் வேடன். அவன் வலையை இறக்கி வைத்தவுடன் அங்கு ஏற்கனவே வந்து தனது நண்பர்களான இன்னும் சில எலிகளுடன் சேர்ந்து காத்துக் கொண்டிருந்த எலி வலையைக் கடித்துக் குதறி ஆமையை விடுவிக்க ஆமை அருகில் இருந்த ஒரு புதரில் ஒளிந்து கொண்டது.
வேடன் தனக்கருகில் வந்தவுடன் துள்ளி எழுந்த மான் முதலில் கொஞ்சம் மெதுவாக ஓடி வேடனை அலைக்கழித்து விட்டுப் பின்னர் வேகமாக ஓடித் தப்பித்து விட்டது.
மானைப் பிடிக்காமல் ஏமாந்து திரும்பிய வேடன் தான் இறக்கி வைத்த வலையருகில் வந்து பார்க்க ஆமையும் இல்லை. திரும்பவும் வலை அறுக்கப் பட்டிருந்தது.
ஏமாந்து போன வேடன் வெறும் கையுடன் திரும்பினான்.
நண்பர்கள் நால்வரும் நீண்ட நாட்கள் வனத்தில் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்தனர்.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.