“சார் வந்துட்டாங்க!” என்ற கிசுகிசுப்பான குரல்கள் எட்டாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் ஒலிக்க, வீறு நடை போட்டு வகுப்பறைக்குள் நுழைந்தார் சமூகறிவியல் ஆசிரியர் ராஜன்.

“ம்ம் என்ன! எல்லாரும் ரெடியா, எங்க ஒவ்வொருத்தரா எழுந்து ஆர்டிகில் 15ல ஒரு பாயிண்ட் சொல்லுங்க பாப்போம். சொல்றவங்க க்ளாஸ்குள்ள இருக்கலாம், சொல்லாதவங்க வெளிய எழுந்திருச்சுப் போய் நிக்கலாம் ம்ம்” என தன் கணீர் குரலால் தொண்டையை செருமிக் கொண்டார் ராஜன்.

முதல் வரிசையில் இருந்த மாணவியில் தொடங்கி, வரிசையாக ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த ஒற்றை வரியினை எழுந்து நின்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். பதில் தெரியாத மாணவர்கள் திருதிருவென விழிக்க, ராஜனின் உறுத்த பார்வையில் தானாகவே அவர்கள் வகுப்பிற்கு வெளியே சென்று நின்று கொண்டனர்.

ஆர்டிகில் 15 பற்றிக் கேட்டால், அனைவரும் அதன் சிறுகுறிப்பை கூறுவார்கள் என்று காத்திருந்த ராஜனின் புருவங்கள், மாணவர்களின் பதில்களால் ஆச்சரியத்தில் விண்ணை நோக்கி உயர்ந்தன.

“சார் ஆர்டிகில் 15ல வர மாதிரி பாரதியார் கூட ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு பாடியிருக்கார்” என பெருமையாய் ஒரு மாணவன் கூற, “சார் எங்க வீட்டுல எனக்கும், என் தம்பிக்கும் சம உரிமைன்னு எங்கப்பா சொல்லிருக்காரு” என மிடுக்காய் ஒரு மாணவி பதிலளித்தாள்.

“ஆமாம் சார், எங்க வீட்டுல கூட அப்பா ஆபீஸ் போகுறதுக்கு, முன்னாடி அம்மாக்கு காய்கறி எல்லாம் கட் பண்ணி குடுப்பாங்க! “ஆமாம், எங்க அப்பாவும் அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னா சமைப்பாங்க!” என அந்த மாணவியின் குரலோடு பல குரல்கள் ஒலித்தன.

“அமைதி!” என மேஜை மீது ஒருமுறை தட்டிய ராஜன், “தருண், நீ எழுந்து பதிலைச் சொல்லு பார்ப்போம்!” என அவர் வரும் பொழுது முன்வரிசையில் அமர்ந்திருந்த தருண், கேள்வி கேட்டதும் பின் வரிசையில் போய் அமர்ந்ததைக் கவனித்து அவனை எழுப்பினார்.

Nigar

தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்த தருண், ஆசிரியரின் கேள்வியை கவனிக்காதது போல் வேறு ஒரு உலகத்தில் இருந்தான். தான் அழைத்தும் எழுந்து கொள்ளாமல் தலையைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்த தருணைக் கண்டு சுறுசுறுவென்ற கோபம் வர, அவன் அமர்ந்திருந்த மேஜையின் முன் போய் நின்றார் ராஜன்.

“தருண்”, என சத்தமாக அவர் அழைத்ததும், சிந்தனை கலைந்தவனாக சட்டென்று எழுந்து நின்றான் அவன்.

“சார்” என அவன் குரல் பதட்டத்தோடு கிணற்றுக்கடியில் இருந்து ஒலிப்பது போல் இருந்தது.

“ம்ம், நான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன், நீ என்ன பகல் கனவு காண்றியா? ஆர்டிகில் 15 பற்றி உன்னோட பதில் என்ன?” என்று கேட்டார் உறுமும் குரலில்.

“சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைவருக்கும் சமமான பாதுகாப்பு வழங்குதல். மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறப்பு அடிப்படையில் பாகுபாடு பார்க்கத்தடை என்பதே ஆர்டிகில் 15 சட்டமாகும்” என கையைக் கட்டிக் கொண்டு நடுங்கும் குரலில் கூறினான் தருண்.

சரியான பதில் அளித்தும் அவன் காட்டிய கவனக்குறைவில் வெகுண்டிருந்த ராஜன், “இந்திய குடிமகனா ஆர்டிகில் 15இல் உன்னோட கடமை என்ன?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டு அவனை சிக்க வைக்க நினைத்தார்.

“சார்..அது வந்து..”

“என்ன தெரியாதா? அப்ப போய் வெளிய நில்லு! பாடம் நடத்தும் போது கனவு கண்டுக்கிட்டு இருந்தா இப்படித்தான்” என கத்தியபடி வாயிலை நோக்கி விரலைக் காண்பித்தார்.

“இல்ல சார், அது வந்து..”

“என்ன வந்து போயின்னு, பதிலைச் சொல்லு? இல்லைன்னா வெளியே போ தருண்! எனக்கு பாடம் எடுக்க வேண்டியது நிறைய இருக்கு!”

வகுப்பில் உள்ள மாணவர்கள் கழுத்தைத் திருப்பியபடி, கடைசி வரிசையையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“போச்சுடா! தருண் மாட்டுனான்” என மெலிதாய் ஒரு குரல் மாணவர்கள் மத்தியில் எழுந்தது.

“சார் இந்தியக் குடிமகனா, நான் எந்த பாகுபாடும் குறிப்பாக என் வீட்டு பெண்கள்கிடம் பாகுபாடு காண்பிக்கமாட்டேன். அவர்கள் சமையலில் உப்பு குறைவாய் இருந்தால், தட்டைத் தூக்கி சுவற்றில் அடிக்கமாட்டேன். சும்மா சும்மா நீ பொண்ணு தானன்னு சொல்லி பாகுபாடு காட்டமாட்டேன். வீட்டில் உள்ள அத்தனை வேலையையும் செய்கிறவர்களை, வேலைக்குப் போகாம வெட்டியா தானே இருக்கன்னு சொல்லமாட்டேன் சார்!” என அதிரும் குரலில் அசராமல் சொன்னவன், அவரையேக் கலங்கும் கண்களோடு பார்த்துக் கொண்டு நின்றான், ராஜனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் தருண்.

மாணவர்கள் அனைவரும்ஒன்றும் புரியாமல் விழிக்க, புரிய வேண்டியவருக்கு அனைத்தும் கனகச்சிதமாகப் புரிந்தது.

“தலைவலி கொல்லுது, நான் போய் ஒரு காபி குடிச்சுட்டு வரேன், அதுவரைக்கும் சத்தம் இல்லாம பாத்துக்க!” என வகுப்பு தலைவனிடம் சொன்னவர், அவசரமாக வகுப்பில் இருந்து வெளியறினார்.

ராஜன் வேக எட்டு வைத்த ஒவ்வொரு அடிக்கும், அன்று காலை மட்டும் அல்லாது அவர் வீட்டில் அவ்வப்போது நிகழும் தட்டைத் தூக்கி எறிதல், மனைவியை உதாசீனப்படுத்துதல் என அனைத்து நிகழ்வும் அவரின் மனக்கண்ணில் மின்னலாய் வந்தன.

“டேய் தருண், நீ வாத்தியாருக்குக்கிட்ட என்னடா பதில் சொன்ன புரியவே இல்லியே!” என ராஜனின் வகுப்புத் தலைவன் வந்து கேட்க, “ஆர்டிகில் 15 வீட்டில் இருந்து தான் ஆரம்பிக்கணும்னு அம்மா காலையில சொன்னாங்கடா, அதான் அப்படி சொன்னேன்” என்றான்.

ராஜனின் மனைவியான ஜானகி, தருணிற்கு ஜன்னல் வழி ஸ்னேகம். அவர் அடிக்கடி கொல்லைப் புறத்தில் அழுவதையும், மொட்டை மாடியில் அழுவதையும் பார்த்திருக்கிறான் அவன். தருணிற்குப் பிடித்த பால் பணியாரம் ஜானகி அக்காவின் கைமணத்தில் அடிக்கடி செய்து தருவதாகட்டும், செய்தித்தாளில் பட்டம் செய்து தருவதாகட்டும் ஜானகி, தருணின் மனதிற்குப் பிடித்த அக்கா.

“ஏங்க அந்த புள்ள ஜானகி எவ்வளவு அருமையா சமைக்குது தெரியுமா? ஒருநாள் சமையல்ல உப்பு குறைஞ்சுப் போச்சுன்னாக் கூட தட்டைத் தூக்கி வீசு அடிக்குறாருங்க, பாவம் ஜானகி பயந்து பயந்து சாகுறா! வீட்டுல சும்மா இருக்கோமேன்னு யூ ட்யூப் பார்த்து, அக்கம்பக்கம் உள்ளவங்களுக்கு துணி தைச்சும் குடுக்குதுங்க அந்த பொண்ணு” என ராஜனின் மனைவி அவரிடம் அல்லல்படுவதையும், அவஸ்தைப்படுவதையும் தருணின் அம்மா அவன் அப்பாவிடம் புலம்பியதை அவ்வப்போது கேட்டிருந்தான் தருண்.

அன்று காலையும் அவர் புலம்ப, அதற்கு தருணின் தந்தை, “மா ஆணும், பெண்ணும் சமம் பாகுபாடு பார்க்கக்கூடாதுன்னு இந்திய அரசியலமைப்பு சட்டமே சொல்லுது. சட்டம் தெரியலைன்னாலும், மனசாட்சி படி நடக்க தவறிப் போகுற ஆண்கள் தான் அதிகம். நம்மால முடிஞ்சது தருணை நல்லபடியா வளர்க்குறது தான், வேற என்ன பண்ண முடியும். சரி அந்த தேங்காயை எடு, நான் துருவித் தரேன் அப்புறம் கை வலிக்குதுன்னு புலம்புவ!” என தேங்காய் துருவிக் கொண்டிருந்த அம்மாவின் கைகளில் இருந்து அதைப் பிடிங்கிய அப்பாவைப் பார்த்தவன், அவரின் பதிலையே தன்னுடைய பதிலாகக் கூறியிருந்தான்.

வகுப்பறையில் நடுநாயகமாக மரச்சட்டதுக்குள் இருந்த அம்பேத்கார், நாளைய தலைமுறை நிச்சயம் அவரின் கோட்பாட்டின் படி மாறும் என்றும், ஆணிற்கு நிகராய் பெண்ணும் நடத்தப்படுவாள் என்ற நம்பிக்கையில் சிரித்துக் கொண்டிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *