“’நானும் மாத்யூவும் உன்னை எங்கள் வீட்டில் வைத்துக் கொள்வதாய் முடிவு செய்து இருக்கிறோம்” என்று மரிலா சொன்னதைக் கேட்டு, ஆனி ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.
“நாற்காலியில் உட்கார்ந்து அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள் ஆனி. அழுகையும், சிரிப்பும் உனக்கு ரொம்பச் சீக்கிரம் வந்து விடுகின்றது. நீ பள்ளிக்குப் போக வேண்டும். விடுமுறை ஆரம்பிக்க இன்னும் பதினைந்து நாள் தான் உள்ளது. எனவே விடுமுறை முடிந்து, செப்டம்பரில் பள்ளி திறக்கும் போது நீ சேரலாம்” என்றார் மரிலா.
“உங்களை நான் எப்படி கூப்பிடுவது? மிஸ்.குத்பர்ட் என்று சொல்லவா? மரிலா அத்தை என்று கூப்பிடலாமா?”
“வேண்டாம். நீ மரிலா என்றே கூப்பிடு.”
“அப்படிக் கூப்பிட்டால், மரியாதையாக இருக்காது.”
“அதனால் மரியாதைக் குறைவு எதுவும் ஏற்படாது. நீ பேசும் போது மரியாதையாகப் பேசினால் போதும். இந்த ஊரில் வயதில் சிறியவர், பெரியவர் எல்லாருமே, என்னை மரிலா என்று கூப்பிடுவது தான் வழக்கம்.”
“அத்தை மரிலா என்று கூப்பிடுவது, எனக்குப் பிடித்து இருக்கிறது. ஏன் என்றால் எனக்கு இதுவரை அத்தையோ, வேறு சொந்தமோ இருந்தது இல்லை. பாட்டி கூட இல்லை. அப்படி கூப்பிட்டால் நான் உங்களுக்குச் சொந்தம் என்ற நினைப்பு வருகிறது. நான் அத்தை மரிலா என்று கூப்பிட முடியாதா?”
“வேண்டாம். நான் உன் அத்தை இல்லை.”
“ஆனால் நீங்கள் என் அத்தை என்று, நாம் கற்பனை செய்து கொள்ளலாம்.”
“என்னால் முடியாது” என்றார் மரிலா, கடுமையான குரலில்.
“உண்மையில் இல்லாததை இருப்பது போல், நீங்கள் கற்பனை செய்ய மாட்டீர்களா?” வியப்புடன் கண்களை அகல விரித்து, ஆனி கேட்டாள்.
“அப்படிக் கற்பனை செய்வதில், எனக்கு நம்பிக்கை இல்லை. கால்களைச் சுத்தமாக கழுவிக் கொண்டு, அறைக்குப் போ. அங்கே அலமாரியில் பக்திப் பாடல் நோட்டு இருக்கிறது, அதை எடுத்து வந்து இன்று மதியம் ஓய்வு நேரத்தில், அந்தப் பாட்டை மனப்பாடமாகக் கற்றுக் கொள்.”
ஆனி ஹாலைத் தாண்டி இருந்த அறைக்குச் சென்றாள். ஆனால் பத்து நிமிடம் ஆகியும், திரும்பி வரவில்லை. எனவே மரிலா தையல் வேலையை நிறுத்திவிட்டு, எழுந்து ஆனியைத் தேடி உள்ளே சென்றார்.
அங்கே இரண்டு சன்னல்களுக்கு இடையே சுவரில் தொங்கிய ஒரு படத்தைப் பார்த்து, ஆனி கற்பனையில் மூழ்கி அசையாமல் நின்று இருந்தாள்.
“என்ன யோசனை ஆனி?” என்று மரிலா கேட்டவுடன், திடுக்கிட்டு நிஜ உலகுக்கு வந்தாள் ஆனி.
“இந்தப் படத்தில் ஏசுநாதர் குட்டிக் குழந்தைகளை ஆசீர்வதிக்கிறார். இந்தக் குழந்தைகளில் நானும் ஒருத்தி என்று கற்பனை செய்தேன். இதில் ஓரத்தில் நீல உடையில் நிற்கும் பெண், என்னைப் போலவே சோகமாகத் தெரிகிறாள் அல்லவா? அவளுக்கு அப்பாவோ, அம்மாவோ இல்லை என்பது என் யூகம். ஆனால் ஏசு தன்னையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். தன்னை அவர் கவனிக்க மாட்டாரோ என்று பயப்படுகிறாள். ஆனால் அவர் அவளைப் பார்த்துவிட்டார். இதை எல்லாம் கற்பனை செய்து கொண்டு நின்றிருந்தேன்” என்றாள் ஆனி.
“நான் உன்னிடம் ஒன்றை எடுத்து வரச் சொன்னால், உடனே எடுத்து வர வேண்டும். இது போல் படத்துக்கு முன்னால் கற்பனை செய்து கொண்டு நிற்கக் கூடாது; அதை ஞாபகம் வைத்துக் கொள்; அந்த நோட்டை எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குப் போ. ஒரு ஓரமாக உட்கார்ந்து பக்திப் பாடலை மனப்பாடம் பண்ணு” என்றார் மரிலா.
சிறிது நேரம் கழித்து, “மரிலா! இங்கே எனக்கு நெருங்கியத் தோழி யாராவது கிடைப்பாளா?” என்று கேட்டாள் ஆனி.
“பழத்தோட்டம் அருகே உள்ள வீட்டில் டயானா பேரி என்று ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கும் உன் வயது தான் இருக்கும். அவள் ரொம்ப நல்ல பெண். அவள் நம் வீட்டுக்கு வந்தால், உனக்கு விளையாட நல்ல துணையாக இருப்பாள். ஆனால் நீ நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டியது முக்கியம். இல்லாவிட்டால் டயானாவின் அம்மா உன்னுடன் விளையாட, அவளை அனுமதிக்க மாட்டார்; அவர் ரொம்பக் கண்டிப்பானவர்” என்றார் மரிலா.
அதைக் கேட்ட ஆனிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
“டயானா எப்படி இருப்பாள்? அவள் முடி சிவப்பாக இருக்காது தானே? என் நெருங்கியத் தோழிக்குச் சிவப்பு முடி இருப்பதை, என்னால் தாங்க முடியாது” என்றாள் ஆனி.
“டயானா அழகான குட்டிப் பெண். அவள் கண்களும், முடியும் கறுப்பு. கன்னங்கள் ரோஸ் நிறம். அவள் நல்ல சமர்த்துப் பெண். அழகாய் இருப்பதை விட, அது முக்கியம்” என்றார் மரிலா.
“ஓ! அவள் அழகாய் இருப்பாள் என்பதில், எனக்கு மகிழ்ச்சி. அழகான நெருக்கமான தோழி இருப்பது மிகவும் நல்லது. நான் இருந்த திருமதி தாமஸ் வீட்டில் கண்ணாடிக் கதவு கொண்ட ஒரு புத்தக அலமாரி இருந்தது. அதன் ஒரு கண்ணாடிக் கதவு உடைந்து இருந்தது. தாமஸ் ஒரு நாள் இரவு குடித்துவிட்டு மயக்கத்தில் இருந்த போது, அதை உடைத்துவிட்டார். அந்தக் கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை ஒரு நெருங்கியத் தோழியாகக் கற்பனை செய்தேன். அவளுக்குக் கேட்டி என்று பெயர் வைத்தேன். அவளிடம் மணிக்கணக்காகப் பேசுவேன். ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அவளிடம் பகிர்ந்து கொள்வேன். அவள் எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தாள். நான் திருமதி ஹம்மன்ட்ஸ் வீட்டுக்குக் கிளம்பிய போது, கேட்டியைப் பிரிவதை நினைத்து, என் மனம் உடைந்தது. அந்தக் கண்ணாடிக் கதவு வழியாக, அவளும் அழுது கொண்டே எனக்கு முத்தம் தந்தாள்.
ஹம்மன்ட்ஸ் வீட்டில் புத்தக அலமாரி இல்லை. அங்கே ஒரு ஆறு பக்கத்தில் பச்சைப் புல்வெளி இருந்தது. அங்கே நான் என்ன சொன்னாலும் எதிரொலி கேட்டது. அதை நான் வயலட் என்ற குட்டிப் பெண்ணாகக் கற்பனை செய்தேன். கேட்டியைப் போலவே, அவளையும் நான் நேசித்தேன். நான் ஆதரவற்றோர் இல்லத்துக்குக் கிளம்பிய போது அவளுக்கு டாட்டா சொன்னேன். அவளும் சோகமான குரலில் எனக்கு டாட்டா சொன்னாள். அவளுடன் மிக நெருக்கமாக இருந்தேன். அதனால் ஆதரவற்றோர் இல்லத்துக்கு வந்த பிறகு, வேறு யாரையும் என்னால் நெருக்கமான தோழியாகக் கற்பனை செய்ய முடியவில்லை.” என்றாள் ஆனி.
“உன் சொந்தக் கற்பனையை உண்மை என்று நம்புகிறாய். உன் மண்டையில் இருந்து இந்த அபத்தத்தை எல்லாம் அப்புறப்படுத்த, உனக்கு உண்மையாகவே ஒரு தோழி இருப்பது நல்லது. ஆனால் டயானா அம்மாவிடம் இந்தக் கேட்டி, வயலட் பற்றி எல்லாம் சொல்லி விடாதே. நீ கதை விடுவதாய் நினைப்பார்.” என்றார் மரிலா.
“இல்லை. நான் வேறு யாரிடமும், அவர்களைப் பற்றிச் சொல்ல மாட்டேன். அவர்களது நினைவுகள் எனக்குப் புனிதமானவை.” என்றாள் ஆனி.
“நான் உன்னைப் பேசக் கூடாது; பக்திப் பாடல் படி என்று சொன்னேன். ஆனால் வாய் பேசாமல், உன்னால் இருக்கவே முடியவில்லை. அறைக்குப் போய் அதை மனப்பாடம் பண்ணு” என்றார் மரிலா.
ஆனி அறைக்குச் சென்று சன்னல் பக்கத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள். மீண்டும் கற்பனையில் மூழ்க ஆரம்பித்தாள். ‘டயானா எனக்கு நெருங்கியத் தோழியாக ஆகிவிடுவாள்; நான் அவளை மிகவும் நேசிப்பேன். ஆனால் கேட்டியையும், வயலட்டையும் மறக்க மாட்டேன். அவர்களை மறந்தால், அவர்கள் மனம் புண்படும். அவர்களை நினைவில் வைத்து ஒவ்வொரு நாளும் முத்தம் அனுப்புவேன்’ என்று ஆனி நினைத்தாள். அவள் விரல்களை வாயில் வைத்துச் செர்ரி பூக்கள் வழியே காற்றில் முத்தங்களைப் பறக்க விட்டாள்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.