ரஷ்ய எழுத்தாளர் ராபர்ட்டா, ஃபிலிஸ், பீட்டர் இவர்களுடைய வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்கு நாம் உதவ வேண்டும் என்று அம்மா அடிக்கடிக் கூறுவார்.
குழந்தைகள் தினந்தோறும் ரயிலை வேடிக்கை பார்ப்பதையும், பயணிகளைப் பார்த்து கையசைப்பதையும் தொடர்ந்து வந்தனர். ஒருநாள் மூவரும் ரயில் நிலையத்திற்குள் நுழைந்த நேரம் அருகிலுள்ள மலையில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளத்தின் மேல் பெரிய பாறை ஒன்று விழுந்திருந்ததைக் கவனித்தனர்.
தூரத்தில் ரயில் வரும் ஓசையும் கேட்டது. “ஐயோ! இப்ப இந்தப் பெரிய பாறை மேல ரயில் மோதினா ரொம்ப ஆபத்தாகிடுமே!” என்றான் பீட்டர்.
“ஆமா! ரயில் தடம் புரண்டு நிறைய பயணிகள் உயிரிழந்திடுவாங்க. ரயில்வே ஊழியர்கள் யாரும் பக்கத்துல இல்லையே? இப்ப எப்படி ரயிலை நிறுத்துறது?” என்று ராபர்ட்டா கேட்க, ஃபிலிஸ் தன் தலையில் அடைந்திருந்த சிவப்பு நிற ஸ்கார்ஃபைக் கழற்றிக் கையில் பிடித்தாள்.
“சிவப்பு சிக்னல் கொடுத்தா ட்ரெயின் நிக்கும்ல? இதைக் காட்டலாமா?”
“நல்ல யோசனை. இதோ! என்னுடைய ஸ்வெட்டருக்குக் கீழே நான் போட்டிருக்கிற சட்டை கூட சிவப்பு நிறம் தான்” என்று தன் ஸ்வெட்டரைக் கழற்றிய பீட்டர், அதனுள் அணிந்திருந்த சிவப்புச் சட்டையைச் சுட்டிக் காட்டினான்.
இரண்டு துணிகளையும் ஒன்றாக இணைத்து மூவரும் ரயில் வரும் பாதைக்கு முன் நின்று வேகமாக ஆட்டினர். தூரத்திலிருந்து சிவப்பு நிறத் துணிகள் ஆடுவதைக் கவனித்த ரயிலின் ஓட்டுனர் சரியான நேரத்தில் பிரேக்கை அழுத்தினார்.
மிகச் சரியாக, பாறை விழுந்திருந்த இடத்திற்குச் சற்று முன்னதாக வந்து ரயில் நின்றது. சக்கரங்கள் கிரீச்சிட, ரயில் திடீரென்று நின்றதைக் கண்டதும் அனைத்துப் பயணிகளும் இறங்கி வந்தனர். அதில் இவர்களுடைய நண்பரான அந்தப் பெரிய மனிதரும் இருந்தார்.
“அடடா எவ்வளவு பெரிய பாறை இதுல மோதியிருந்தா பெரிய ஆபத்தா இருந்திருக்குமே! நீங்க ரொம்ப நல்ல குழந்தைங்க. வேகமா செயல்பட்டு பல பேரோட உயிரைக் காப்பாத்திட்டீங்க! நான் ஒரு பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணி இத்தனை உயிர்களைக் காப்பாற்றின உங்களுக்குப் பாராட்டு விழா நடத்த போறேன்!” என்றார் அந்த பெரிய மனிதர்
“நீங்க ஏன் பாராட்டு விழா நடத்தணும்?” என்று கேட்டதற்கு,
“ஹா ஹா! உங்களுக்குத் தெரியாது இல்லையா? நான் தான் இந்த ரயில்வே நிறுவனத்துடைய தலைவர். என் உயிரை மட்டுமில்லாம என்னோட நிறுவனத்தோட பெயரையும் நீங்க காப்பாத்தி இருக்கீங்க” என்றார் அந்தப் பெரிய மனிதர்.

சொன்னபடியே விரைவில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அதில் ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ராபர்ட்டா, ஃபிலிஸ், பீட்டர் மூவரையும் பாராட்டி பரிசுகள் வழங்கினர். அந்த நேரத்தில் ராபர்ட்டா பெரிய மனிதரிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தாள்.
“அங்கிள்! நீங்க எங்களுக்கு இன்னொரு உதவி பண்ணனும்” என்றவள், தங்கள் வீட்டில் சிகிச்சை பெற்று வரும் ரஷ்ய எழுத்தாளரைப் பற்றிச் சொல்லி, “அவருடைய குடும்பத்தைக் கண்டுபிடிக்கிறதுக்கு நீங்க உதவி பண்ணனும்” என்று கேட்டுக் கொண்டாள்.
“கண்டிப்பா! அது ரொம்ப எளிமையான காரியம் தான். சீக்கிரமே கண்டுபிடிச்சுடலாம்” என்ற பெரிய மனிதர் அவர்களிடமிருந்து விபரங்களை பெற்றுக் கொண்டார்.
விரைவிலேயே எழுத்தாளரின் மனைவியும் குழந்தைகளும் எங்கிருக்கிறார்கள் என்பது தெரிந்து விட்டது. குடும்பத்தினருடன் இணைந்து விட்ட ரஷ்ய எழுத்தாளரும், ராபர்ட்டாவின் குடும்பத்தினரும் பெரிய மனிதருக்கு உளமாற நன்றி தெரிவித்தனர்.
இதனிடையே அம்மாவிடம், “அப்பா எப்போ வருவார்?” என்ற கேள்வியினைக் குழந்தைகள் அவ்வப்போது கேட்டு வந்தனர். அப்பாவைப் பற்றி பேசியவுடன் அவர்களின் அம்மா சோகமாக மாறி விடுகிறார் என்பதைக் குழந்தைகள் கண்டுபிடித்தனர்.
“ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் தான் அப்பா நம்ம கூட இல்லை. அதைப் பத்திக் கேட்டா அம்மா வருத்தப்படுறாங்க. அதனால நாம கேட்க வேண்டாம்” என்று மூன்று குழந்தைகளும் பேசி முடிவெடுத்தனர்
நாளாக நாளாக அப்பாவைப் பற்றிய குழந்தைகள் கேட்பதில்லை என்பதை கவனித்த அம்மா, ஒருவேளை குழந்தைகள் தங்கள் அப்பாவையே மறந்து விட்டார்களோ என்று யோசித்தார். அதற்கும் வருத்தம் கொண்டார். மொத்தத்தில் தந்தை அவர்களுடன் இல்லை என்பது நால்வருக்கும் பெரிய வருத்தத்தையே தந்தது.
இதனிடையில் ஒரு நாள் இவர்கள் வழக்கம் போல் ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்த போது ஒரு சிறுவன் இவர்களைப் பார்த்துக் கையசைத்தவாறு ரயில் நுழைந்து வரும் சுரங்கப் பாதைக்குள்ளாக ஓடினான். சுரங்கப்பாதையின் மறுபக்கம் அவன் திரும்பி வருவான் என்று எதிர்பார்த்திருக்க, வெகு நேரமாகியும் சிறுவனைக் காணவில்லை!
தொடரும்.
ரெயிலின் நண்பர்கள் 6 வாது பாகம் போடுங்கள் ..