குட்டி மிதுன், தண்ணீரை தரையில் குட்டி குளம் போல் கொட்டி அதன் மேல் கால் வைத்து, வைத்து எடுத்துக் கொண்டிருந்தான்.
“மிதுன் குட்டி என்ன பண்றீங்க?” என்று அப்பா ரமேஷ் கேட்டார்.
“அப்பா, நான் தண்ணீ மேல நடக்க முயற்சி பண்றேன்பா!” என்று சொல்லிவிட்டு மறுபடி அதே போல் செய்தான்.
“நம்மளால எல்லாம் தண்ணீல நடக்க முடியாது மிதுன். முதல்ல அங்க உள்ள துணியை எடுத்து, தண்ணி சிந்துன இடத்தை துடைச்சு வை இல்லன்னா வழுக்கி விழுந்துடுவோம்” என எச்சரித்து விட்டு, அவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.
குட்டி மிதுன் சமர்த்தாக அந்த இடத்தை துடைத்துவிட்டு, தண்ணீர் சொம்பை வாசலுக்கு எடுத்துக் கொண்டு ஓடினான். வாசலில் போய் அங்கே இருந்த மண் தரையில் கொஞ்சமாகக் கொட்டி அதன் மேல் ஏறி நடக்க முயற்சி செய்தான். இது போல் நான்கைந்து முறை செய்தவனை, மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த அம்மா பிடித்துக் கொண்டார்.

“மிதுன் கண்ணா! என்ன இது? உன்னோட பேண்ட் எல்லாம் இப்படி சேறும், சகதியுமா இருக்கு! மண் ரோட்ல எதுக்குடா தண்ணி கொட்டி வெச்சிருக்க!” என்று சற்று மிரட்டும் தொனியில் அம்மா கேட்க,
“அப்பா தான், வீட்ல தண்ணீ கொட்டுனா வழுக்கி விழுந்துடுவோம்னு சொன்னாங்க அதான் ரோட்ல தண்ணிய கொட்டுனேன்” என குட்டி மிதுன் சொன்னதும் அம்மா சிரித்து விட்டார்.
உடனே மிதுனும் சிரித்து கொண்டு, “அம்மா, எவ்வளவு முயற்சி செய்தும் என்னால இந்த தண்ணி மேல நடக்க முடியலை அம்மா! குட்டி குட்டி பூச்சியெல்லாம் தண்ணி மேல அழகா நடக்குது, என்னால ஏன் நடக்க முடியலை?” என்று சோகமாகக் முடித்தான்.
அம்மா, “அது வந்து மிதுன், குட்டி பூச்சி எல்லாம் குட்டியா இருக்குல்ல அதுனால தான் அதனால நடக்க முடியுது!”
மிதுன், “நானும் குட்டி தானே அம்மா, நீங்க கூட என்னை மிதுன் குட்டின்னு தானே கூப்பிடுவீங்க!”
“உனக்கு வேற மாதிரி தான் சொல்லி புரிய வைக்கணும். வீட்டுக்குள்ள வா சொல்லித் தரேன். மறக்காம உன்னோட பேண்ட்டை கழட்டி துவைக்க போட்டுட்டு வேற பேண்ட் போட்டுட்டு வா குட்டி” என்று சொல்லிவிட்டு அம்மா உள்ளே சென்றாள்.
மிதுனும் அம்மா சொன்னது போல் செய்தான். பிறகு அவரின் விடையைத் தெரிந்து கொள்ள அவரைத் தேடிப் போனான்.
“மிதுன், தண்ணி இருக்குல்ல தண்ணி, அதாவது ஆத்துல, குளத்துல, கிணத்துல, குட்டையில் அல்லது தேங்கி நிற்கும் தண்ணீரோடு மேற்பரப்பில் ஒரு அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தத்தோட பெயர் ‘ஸர்ஃபேஸ் டென்ஷன்’ என்று கூறுவோம். இந்த அழுத்தத்தால் தான் பூச்சி எல்லாம் தண்ணில நடக்குது.
அதுவும் இல்லாம பூச்சியோட கால்கள் நீளமா, குட்டி குட்டி முடிகளோட இருக்கும் அதனால தண்ணீரில் அது முழுகாமல் ஈசியா நடக்க முடியுது! என்றார் அம்மா.
“புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு அம்மா” என குட்டி மிதுன் கூறினான்.
“சரி இன்னும் ஒண்ணு சொல்றேன். நீ இப்ப கழட்டிப் போட்டியே உன்னோட அழுக்கான பேண்ட் அதை எடுத்து வா பார்க்கலாம்!” என்று அம்மா கூற, அவனும் எடுத்து வந்தான்.
அம்மா அந்த துணியை, சோப்பு பவுடரும், தண்ணீரும் கலந்த கலவையில் முக்கி, ஊற வைத்து, துவைத்து எடுத்ததும் பேண்டில் இருந்த அழுக்க அத்தனையும் நீங்கியது.
“வெறும் தண்ணீல தோய்த்தால் துணியில் உள்ள அழுக்கு போகாது மிதுன். இந்த சோப்பு என்ன செய்யும் தெரியுமா? அது தண்ணீரில் உள்ள மேற்பரப்பு அழுத்தத்தைக் குறைத்து, துணி இழைகளுக்குள் தண்ணியை எடுத்துக்கிட்டு போய் அழுக்கு எல்லாத்தையும் எடுத்துடுது, புரியுதா!”
மிதுன், “ம்ம் அம்மா கொஞ்சமா புரியுது”
“இதுவும் புரிஞ்சும், புரியாத மாதிரி இருந்தாலும் நீ பெரிய வகுப்பு போகும் போது எல்லாம் புரியும். அம்மாவே உன்னோட சயின்ஸ் டீச்சரா வந்தாலும் வருவேன்” என்று கண் சிமிட்டினார் அவன் பள்ளியிலேயே அறிவியல் ஆசிரியையாய் வேலை செய்யும் அம்மா.