மேகமலையில் – 1

பகுதி – 1

மேகமலை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டம்.

பங்குனி மாதப்பனி அப்பகுதியை போர்த்தியிருந்தது.

அதிகாலை ஐந்து மணி.

மேகமலை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தங்கும் விடுதிக்கருகே யானையின் பிளிறல் சத்தம் கேட்டது.

அங்கிருந்த முதல் தள அறையொன்றில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தங்கவேலும், அவரது மனைவி அன்பரசியும் நான்கைந்து பிளிறல் சத்தம் கேட்கவும் எழுந்தனர். அருகில் உறங்கிக்கொண்டிருந்த மகனையும், மகளையும் பார்த்தார், தங்கவேல். அவர்களிருவரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தனர்.

மனைவியிடம், “அவங்க சொன்ன மாதிரியே யானை வந்திருச்சே. நாம போய் யானையை பார்ப்போமோ?” என்றார், தங்கவேலு.

“வேண்டாங்க!” என்று மறுத்த மனைவியிடம்,

“நாம் வாரண்டாவில் நின்று தானே பார்க்கப் போறோம்?” என்றார்.

அவர் ஒப்புதலாக தலையசைக்கவும், தங்கவேலு பல் துலக்கச் சென்றார். அவர் வரவும், அன்பரசி பல் துலக்கி, முகத்தைக் கழுவிவிட்டு வந்து அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டார்.

குழந்தைகள் கீழே விழாமலிருக்க, தலையணைகளை இரு பக்கமும் வைத்துவிட்டு, கதவை அடைத்து வெளியே வந்தனர்.

இருவரும் விடுதியின் வாரண்டாவிற்கு வந்த பொழுது, ஒரு கூட்டம் அங்கு கூடியிருந்தது.

அக்கூட்டத்தில் தங்கவேலுவுடன் சுற்றுலா வந்த அவருடைய நண்பர்கள் ஸ்டீபனும், ராஜாவும் அவரவர் மனைவியருடன் நின்றிருந்தார்கள்.

“நீங்க எப்ப எழுந்து வந்தீங்க?” என்றார் தங்கவேலு, ஸ்டீபனிடமும், ராஜாவிடமும்.

ராஜா, “நான் யானையோட முதல் பிளிறலுக்கே எழுந்துட்டேன். வெளியிலே வந்தேன். ஸ்டீபனோட ஒரு கூட்டமே நின்னுட்டிருக்குது. நீங்க தான் லேட்!” என்றார்.

“பிளிறல் சத்தத்துக்கு பிள்ளைங்க எழுந்து பயப்படுவாங்களோ?” என்றார் அன்பரசி.

“எனக்கும் அதே யோசனைதான்!” என்றார் ஸ்டீஃபனின் மனைவி ஜெபா.

“நேத்தைக்கு பிள்ளைங்க நல்லா ஆட்டம் போட்டிருக்காங்க. அப்புறமும், பனிரெண்டு மணி வரை ‘கார்ட்ஸ்’ விளையாடிட்டு தான் தூங்கியிருக்காங்க. அதனால இப்போதைக்கு எழுந்திரிக்க மாட்டாங்க!” என்றார் ராஜாவின் மனைவி சத்யா.

கூட்டத்தினர் கண்களில் பயமும் ஆர்வமும் கலந்திருந்தன.

கூட்டத்தில் ஓரிரு முதியவர்களையும், நான்கைந்து இளைஞர்களையும் தவிர, அனைவரும் நடுத்தர வயதினர்.

படம் : அப்புசிவா

சிவப்பு சட்டை அணிந்த ஓர் இளைஞரும், மஞ்சள் சட்டை அணிந்த இன்னொரு இளைஞரும் ஆர்வமிகுதியில் அலைபேசியை எடுத்துக்கொண்டு வாரண்டா கதவின் தாழ் நீக்க ஆரம்பித்தனர்.

கூட்டத்திலிருந்தவர்கள் அவர்களை தடுத்து, “தம்பி! எங்கே போறீங்க?” என்றார்கள்.

சிவப்பு சட்டைக்காரர், “வீடியோ எடுக்கப்போறோம் சார்..” என்றார்.

ஒருவர், “தம்பி! வெளியே போகாதீங்க.. நேத்தைக்கு ரூம் சாவி கொடுக்கும் போதே, ‘சார்! யானை பிளிறல் கேட்டா, வாரண்டாவுல நின்று வேடிக்கை பாருங்க. ஆனா, வெளியே போகாதீங்க’ ன்னு சொன்னாரே!” என்றார்.

சிவப்பு சட்டைக்காரரான மதன், “இங்க ஏரி இருக்கிறதால தண்ணி குடிக்க யானைங்க அடிக்கடி வரும்னு சொன்னாங்க. அது அதோட வேலைய பாக்குது.. நாங்க எங்க வேலைய பார்க்கப் போறோம் சார்!” என்றார்.

“நீங்க உங்க வேலையை கொஞ்சம் நேரம் கழிச்சு பாருங்க!” என்றார், ஒரு பெரியவர் கோபமுடன்.

“கொஞ்ச நேரத்துல யானை போய்டுமே சார்.. அப்புறம் எப்படி நாங்க வீடியோ எடுக்கமுடியும்? யூடியூப்ல எப்படி அப்லோட் பண்ண முடியும்?” என்றார் மதன்.

“எப்ப பார்த்தாலும் வீடியோ தானா?” என்று கூட்டத்தில் ஒரு குரல் எரிச்சலோடு ஒலித்தது.

“நாங்க யூடியூபர்ஸ் சார்.. சேலஞ்சிங்கான விசயத்தை பண்ணின தான் த்ரில்லே.. இப்படி த்ரிலிங்கான வீடியோ போட்டா வியூஸ் எகிறிடும் சார்!” என்றார்,மதன்.

“உங்க த்ரில்லுக்கு நாங்க பலியாக முடியாது!” என்றார், அங்கிருந்த ஒருவர்.

“சார்! அனாவசியமா பேசாதீங்க.. ஏரி இரண்டடி தூரத்திலா இருக்குது? அது நூறடி தூரத்தில் இருக்குது. நாங்க இந்த கேட்டை திறந்து வெளியே எட்டித்தான் பார்க்கப்போறோம். அதுக்கே போகாதீங்கன்னு மல்லுக்கட்டுறீங்களே!” என்றார்,மதன்.

யானையின் பிளிறல் மீண்டுமொரு முறை கேட்டது. பரபரப்பான மதன், மஞ்சள் சட்டைக்காரரான நவீனை இழுத்துக்கொண்டு வெளியேற ஆரம்பித்தார்.

ராஜன் விரைந்து வந்து, பின்புறமாக அவர்கள் இருவரின் சட்டைகளை பிடித்து, வாராண்டாவிற்குள் இழுக்க ஆரம்பித்தார். கூட்டத்திலிருந்த நான்கைந்து பேர்கள் அவருடன் சேர்ந்து அவர்களை பிடித்திழுத்தனர்.

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *