பாரம்பரியக் கதைகள் – மூன்று ஆடுகளும் பூதமும்

ஒரு மலையடிவார கிராமம் அது. கிராமத்தின் ஊடே ஒரு சிற்றாறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் புல் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. அந்தப் பகுதியில் மூன்று ஆடுகள் வசித்து வந்தன.

கங்கு, மங்கு, சிங்கு என்ற பெயர்களைக் கொண்ட அந்த ஆடுகள், ஆற்றங்கரையில் வளர்ந்திருந்த புல்லை தினமும் வயிறார உண்டு மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.

மூன்றில் சிறியதான சிங்கு ஒல்லியாக, எலும்பும் தோலுமாக இருந்தது. அடுத்து மங்கு ஆடு, சிங்குவை விடச் சற்று பெரியதாக இருந்தது. ஆனாலும், ஒல்லிதான். மூன்றாவதான கங்கு ஆடு மூன்று ஆடுகளிலும் உருவத்தில் பெரியதாகவும், நல்ல சதைப்பற்றுள்ளதாகவும் கொழுக், மொழுக்கென்று இருந்தது. மூன்று ஆடுகளும் உருவத்தில் மாறுபட்டு இருந்தாலும் உள்ளுக்குள் ஒருவர் மீது ஒருவர் காட்டிய அன்பால் ஒன்றாகவே திரிந்தன. எப்போதும் சேர்ந்தே வாழ்ந்தன.

“தினம் இந்தப் புல்லையே சாப்பிட்டுட்டு இருக்கோம். ருசியே இல்லை. ரொம்ப அலுத்துப் போச்சு. வேற எடத்துக்குப் போயிப் புல்லு கெடைக்குதான்னு தேடணும்” என்றது சிங்கு.

“எங்கே போனால்தான் என்ன ஆகப் போகுது? எல்லாப் புல்லும் ஒரே மாதிரி ருசியோடத் தான் இருக்கப் போகுது. அதுக்கு எதுக்கு அலையணும்? இங்கேயோ நெறையப் புல் இருக்கு. இதையே சாப்பிட்டு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்” என்று சோம்பேறித்தனமாகப் பதில் சொன்னது மங்கு.

“சிங்கு சொல்லறது சரி. புதுசா முயற்சி செய்யணும். செஞ்சாத்தான் நமக்கும் தெரியும். ஆனா, அதுக்காக ரொம்ப மெனக்கெட வேணாம். மங்குவுக்குப் புது இடம் தேடி அலைய இஷ்டமில்லை. ரெண்டு பேருக்கும் பொருந்தற மாதிரி ஒரு யோசனை சொல்லவா?” என்றது கங்கு.

“சொல்லுங்க அண்ணா, சொல்லுங்க” என்று உற்சாகத்துடன் கத்தியபடி சிங்குவும், மங்குவும், கங்குவின் அருகில் ஓடி வந்தன.

“இந்த ஆற்றின் எதிர்க் கரையைப் பாருங்க. பச்சைப் பசேல்னு எவ்வளவு அழகா இருக்கு. ஆற்றைக் கடந்து எதிர்ப்பக்கம் போனால் போதுமே!” என்று வெற்றிச் சிரிப்புடன் கூறியது கங்கு. மீதி இரண்டு ஆடுகளும் யோசிக்க ஆரம்பித்தன.

“எப்பவுமே தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளுமையாத் தான் இருக்கும். இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு சொல்லற மாதிரிதான். பக்கத்துல போயி பாத்தாத்தான் உண்மை தெரியும். கஷ்டப்பட்டு ஆத்தைக் கடந்து போயி, அந்தப் புல்லு நல்லாவே இல்லைன்னா ஏமாந்து போயிடுவோமே!” என்று தன்னுடைய விரும்பமின்மையைத் தெரிவித்தது மங்கு.

“அது பரவாயில்லை. புதுசா எதையும் முயற்சி செய்யும்போது சாதகமாகவும் இருக்கலாம். பாதகமாகவும் போகலாம். சும்மா இங்கயே சுத்தறதுக்குப் பதிலா ஒரு புதிய முயற்சியில் இறங்குவோம்” என்று கங்கு அறிவித்துவிட்டது.

அடுத்ததாக ஆற்றை எப்படிக் கடப்பது என்று யோசித்தன மூன்று ஆடுகளும். ஆற்றங்கரையில் அப்படியே நீண்ட தூரம் நடந்து தேடிய போது ஓரிடத்தில் ஆற்றின் குறுக்கே போடப்பட்டிருந்த பழைய மரப்பாலம் ஒன்று தெரிந்தது. அதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தன மூன்று ஆடுகளும்.

“நாளை காலையில் முதலில் புல்லை வயிறு நிறையச் சாப்பிட்டுக்குவோம். அப்புறம் இந்தப் பாலம் வழியா எதிர்ப்பக்கம் போகலாம். சாயந்திரம் வரைக்கும் அங்கேயே சுத்திட்டுத் திரும்பி வந்துக்கலாம்” என்று ஏக மனதாக முடிவு செய்துவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பிச் சென்றன ஆடுகள்.

அந்த மரப்பாலத்தின் கீழே ஒரு பூதம், நிறைய நாட்களாக வசித்து வந்தது. இந்த ஆடுகளின் திட்டத்தைக் கேட்டு மனதிற்குள் குதூகலம் அடைந்தது.

‘நாளைக் காலையில் இந்த ஆடுகள், பாலத்தைக் கடக்கும்போது இவற்றை அடித்துக் கொன்று சாப்பிடலாம். நிறைய நாட்களுக்குப் பிறகு நல்ல ருசியான விருந்து கிடைக்கப் போகிறது’ என்று மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்த பூதம், அடுத்த நாளுக்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலையில் அங்கு வந்த ஆடுகள் கொஞ்சம் யோசித்தன.

“இந்தப் பாலம் ரொம்பப் பழசாத் தெரியுது. நாம மூணு பேரும் ஒண்ணாப் போனா, இது தாங்குமான்னு தெரியலை. அதுனால ஒவ்வொருத்தராப் பாலத்தைக் கடக்கலாம். முதலில் சிங்கு போகட்டும்” என்று கங்கு கூறிவிட்டது. உடனே சிங்குவும் பாலத்தைக் கடக்க ஆரம்பித்தது.

படம் : அப்புசிவா

அப்போது திடீரென அந்த பூதம், சிங்கவின் எதிரே வந்து நின்றது.

“நல்ல பசியோட இருக்கேன். உன்னைக் கொன்னு சாப்பிடப் போறேன்” என்று சொல்லிச் சிரித்தது பூதம்.

“அட மக்கு பூதமே! என்னை நல்லாப் பாரு. நான் எப்படி இருக்கேன்னு உன் கண்ணுக்குத் தெரியலையா? எலும்பும் தோலுமா இருக்கற என்னைச் சாப்பிட்டா, உன்னோட பசியே அடங்காது. எனக்குப் பின்னால் வரப்போற ஆடு, என்னை விடப் பெருசா இருக்கும். நீ என்னை ஒண்ணும் செய்யாம விட்டாத்தானே அது தைரியமாப் பாலத்தைக் கடக்க வரும்! நல்லா யோசிச்சுப் பாரு” என்று பூதத்தை நன்றாகக் குழப்பி விட்டது சிங்கு.

“சரி சரி, பிழைச்சுப் போ” என்று சிங்குவை ஒன்றும் செய்யாமல் பூதம் விட்டுவிட, அதுவும் வேகமாகப் பாலத்தைக் கடந்து எதிர்க் கரைக்குச் சென்றுவிட்டது. அடுத்ததாக மங்கு ஆடு பாலத்தைக் கடக்கத் தொடங்கியது. பாதி வழி வந்ததும், பூதம் வந்து மங்குவின் எதிரே குதித்தது.

“ஹா ஹா ஹா! என் கிட்ட வசமா மாட்டிக்கிட்டயா? வா, வா, உயிரை விட்டு என் வயித்துப் பசியைத் தீக்க வா” என்று பெருமிதத்துடன் கூறியது பூதம்.

“அடடா, உன்னைப் பாத்தா எனக்குப் பாவமா இருக்கு. என்னைச் சாப்பிட்டா உன்னோட பசி கொஞ்சம் குறையும். ஆனா முழுவதும் அடங்காது. கொஞ்ச நேரத்தில் திரும்பப் பசிக்குமே? நீ என்னைத் தாக்கறதைப் பாத்து அதோ அங்கே நிக்கற பெரிய ஆடு வராமல் தப்பிச்சுரும். அதுக்கு பதிலா என்னை விட்டுட்டேன்னா, அந்த ஆடு தைரியமாப் பாலத்தைக் கடக்கும். அதைப் பாத்தியா? நல்ல கொழுத்த ஆடு அது. அதைச் சாப்பிட்டா உனக்கு ரெண்டு நாளைக்குப் பசிக்காது” என்று மங்கு சொல்ல, பூதம் கரையில் நின்று கொண்டிருந்த கங்குவைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் தலையசைத்தது.

மங்குவும், தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிப்போய் சிங்குவின் அருகில் நின்றுகொண்டது.

இப்போது கங்குவின் முறை. கங்கு, கரையில் இருந்தபடி பூதத்தையும் மற்ற இரண்டு ஆடுகளையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தது. கங்கு பாலத்தைக் கடக்கத் தொடங்கியது. எதிரில் வந்த பூதத்தைத் தன்னுடைய வலிமையான கொம்புகளால் முட்டி மோதி ஆற்றுக்குள் தள்ளியது. தொபுகடீரென்று தண்ணீரில் விழுந்து தத்தளித்த பூதத்திற்குப் பலத்த காயம் பட்டதால், எழுந்திருக்க முடியாமல் தவித்தது. கொஞ்ச நேரத்தில் கஷ்டப்பட்டு எழுந்து தள்ளாடியபடி அந்த இடத்தை விட்டு ஓடியே போனது.

மூன்று ஆடுகளும் தங்களுடைய விருப்பப்படி இரண்டு பக்கக் கரைகளில் இருந்த புல்லை இரசித்து உண்டு மகிழ்ந்தன. அங்கேயும் இங்கேயும் மாறி மாறிச் சென்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *