ஒரு மாணவன் தனது ஆசிரியர் கொடுத்த ஒரு வேலையை முடிப்பதற்காக வேறு ஊருக்குக் காட்டு வழியாகச் செல்ல வேண்டியிருந்தது.
தனது தாயிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
“உன்னுடன் துணைக்கு யார் வருகிறார்கள்?” என்று தாய் அக்கறையுடன் கேட்டாள்.
“யாரும் வரவில்லை அம்மா. நான் தனியாகத் தான் போகப் போகிறேன்” என்று சொன்னான்.
“நீண்ட தூரம் காட்டு வழியாகச் செல்லும் போது துணைக்கு யாரும் கூட வராமல் தனியாகச் செல்லக் கூடாதப்பா!” என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்த ஒரு பெரிய நண்டை எடுத்துக் கலயத்தில் போட்டு அவனிடம் கொடுத்தாள்.
அவன் அந்தக் கலயத்தை எடுத்துக் கொண்டு காட்டு வழியாக நடந்து போனான்.
காட்டு வழியில் நடந்து நடந்து களைப்புற்ற அவன் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கி விட்டான். அந்த மரத்தில் வசித்து வந்த விஷப்பாம்பு ஒன்று அவனைத் தீண்ட அவனருகில் வந்தது.

கலயத்தில் இருந்து ஊர்ந்து வெளியே வந்த நண்டு அந்தப் பாம்பைப் பார்த்தது. பாம்பைத் தனது கொடுக்கால் இறுக்கிக் கொன்று விட்டது.
தூங்கி எழுந்த இளைஞன் தனது அருகில் செத்துக் கிடந்த நாகத்தைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். சுற்றிப் பார்த்ததில் நண்டுதான் பாம்பைக் கொன்று தன்னைக் காப்பாற்றி இருக்கிறது என்று புரிந்தது.
தனது தாய் சொல்லைக் கேட்டு நண்டைத் தன்னுடன் கொண்டு வந்த செயலால் தனது உயிரே பிழைத்ததை எண்ணி மனதிற்குள் இறைவனுக்கு நன்றி சொன்னான்.