வசந்த காலம் முடிந்து கோடை காலம் துவங்கியிருந்த நேரம் இது..
அந்த காட்டில் மரங்கள் எல்லாம் காய்ந்த இலைகளை எல்லாம் உதிர்த்துக் கொண்டிருந்தது.
அந்த காட்டில் முயலும் குரங்கும் நீண்ட நாட்களாக நட்போடு பழகி வந்தது.
கூடவே சில எறும்புகளும் கூட அவர்களோடு நட்பு பாராட்டியது.
இதில் குரங்கு எப்போதுமே அதிக சேட்டைகளை செய்யும்.
அது செய்கின்ற ஒவ்வொரு சேட்டைகளுமே எப்போதுமே பிரச்சனையில் தான் கொண்டு வந்து விடும் .
அதனால் அந்த குரங்கிடம் மற்ற நண்பர்கள் எல்லாம் சற்று பேசவே பயந்தனர்.
அன்றைக்கும் கூட அது போல ஒரு இடத்தில் மொத்த நண்பர்கள் கூட்டமும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, குறும்புக்கார குரங்கோ வேறொரு காரியத்தை செய்தது.
இவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தூரத்திற்கு அப்பால் ஒரு மூங்கில் காடு இருந்தது.
பெரும்பாலும் அந்த மூங்கில் காட்டிற்கு எந்த விலங்குகளுமே செல்வது இல்லை .
அதுவும் இந்த கோடை காலம் நேரத்தில் பெரும்பாலும் செல்வது கிடையாது .
சூரியன் சுட்டெரிக்கின்ற பொழுதில் சில நேரங்களில் மூங்கில் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பற்றிக் கொள்ளும் .
அதனால் அந்த பகுதிக்கு செல்லவே விலங்குகள் அஞ்சினர் .
அன்றைக்கு அந்த குரங்கு விளையாட்டு போல அங்கே சென்றிருக்க ,ஒரு இடத்தில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இதுவும் விளையாட்டு போல ஒரு கொள்ளிக்கட்டையை தூக்கிக்கொண்டு நண்பர்கள் இருந்த இடத்திற்கு ஓடி வந்து கொண்டிருந்தது .
நண்பர்கள் அனைவருமே முதலில் பார்த்து பயந்தனர் .
ஒரு குரங்கோ “முதல்ல அதை கொண்டு போயி தூரமா வீசிட்டு வா ,அந்த தண்ணி பக்கத்துல கொண்டு போய் போட்டுடு..
இந்த பக்கம் போட்டுடாத.. அப்புறம் இந்த இடம் எல்லாம் தீ பிடிச்சிருக்கும் “என்று சொல்ல இவர்கள் பயந்தது எல்லாமே அந்த குரங்கிற்கு விளையாட்டு போல தோன்றியது .

யோசிக்காமல் குரங்கு இவர்களின் முன்னால் போட சிறிது நேரத்திலேயே புகை உற்பத்தியாகி அந்த இடத்தில் தீப்பற்றிக் கொண்டது .
சருகுகள் நிறைய என்பதினால் காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு வேகமாக பரவ அனைத்து விலங்குகளுமே ஆளுக்கு ஒரு புறமாக ஓட ஆரம்பித்தனர் .
முதலில் வேகமாக எறும்புகள் ஓடி அருகே இருந்த சிறு துவாரத்திற்குள் அனைத்துமே ஓடிச்சென்று ஒளிந்து கொண்டது.எறும்பு கூட்டம் தப்பித்து விட்டது .
அடுத்ததாக அங்கிருந்த முயலும் கூட வெகு வேகமாக ஓடி பாறைக்கு இடையே இருந்த பொந்தில் உள்ளே நுழைந்து கொண்டது.
சற்று தொலைவில் இருந்த குரங்குகள் கூட வேக வேகமாக தங்களை காப்பாற்றிக் கொண்டனர் .ஆனால் இந்த குறும்புக்கார குரங்கிற்கு ஓட முடியவில்லை .
வேகமாக ஓட அதைவிட காற்று வேகமாக வீசவும். லேசாக தீக்காயம் பட்டு விட்டது.
பயத்தோடு வேகமாக ஓடிய குரங்கு தண்ணீருக்குள் குதித்து இருந்தது.
ஒரு வழியாக காட்டுத்தீ எல்லாம் அனைந்து வெளியே வருகையில் குரங்கிற்கு தான் தீக்காயம் சன்று பலமாக பட்டிருந்தது .
பிறகு அனைத்து நண்பர்களுமே அந்த குரங்கை பார்க்க சென்றது.
முதுகில் காயத்தோடு பார்க்கவே பாவமாக படுத்திருக்க ,குரங்கின் நண்பனான முயல் குரங்குக்கு அருகே சென்று,” உன்னிடம் பலமுறை சொல்லியாச்சு. எப்போதுமே விளையாட்டு தான். விளையாட்டு வினையாக கூடாது இல்லையா. தன்வினை தன்னைச்சுடும்னு எதுக்காக சொல்றாங்க. உனக்கு அதெல்லாம் தெரியவே இல்லல்ல.. இப்ப பாரு நீ தான் கஷ்டப்படற .. உனக்கு தான் தப்பிக்கிற வழி தெரியாம கடைசில இப்படி காயம் ஆயிடுச்சு .இனியாவது இதுபோல குறும்புத்தனம் செய்யாத.. மத்தவங்க சொன்னதை கேளு” என்று அறிவுரை கூறிவிட்டு அங்கிருந்து சென்றது.. குரங்குக்குமே அப்போதுதான் தன் தவறு புரிந்தது. சற்று வெட்கி தலை குனிந்தது.
என்ன குழந்தைகளா இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருக்குதா..
சில நேரம் பெரியவங்க சொல்லுவாங்க இல்லையா.., விளையாட்டு வினையாகிடும்ணு அது போல தான் இந்த குரங்குக்கு ஆயிடுச்சு. நம்மளும் பெரியவங்க சொல்றத கேட்டு நடக்கணும் சரியா!!