வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

புல்லைப் பற்றின பல தகவல்கள் உங்களுக்கு இப்போ தெரிஞ்சிருக்கு இல்லையா? அப்படிப்பட்ட புல்லைப் பத்தின கதை ஒண்ணு நான் சொல்லப் போறேன், கேளுங்க.

நம்ம நாட்டிலேயே மிகவும் பிரபலமான இரண்டு இதிகாசங்கள் பத்தி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒண்ணு இராமாயணம். இன்னொண்ணு மகாபாரதம். அந்த மகாபாரதக் கதையில் புல்லும் ஒரு கதாபாத்திரம் தெரியுமா உங்களுக்கு? பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கல்வி கற்றுத் தந்த ஆசானை அறிமுகம் செஞ்சது புல்லே தான். என்ன நம்பமுடியலையா ? ஆச்சர்யமா இருக்கா? இருங்க, உங்களுக்குப் புரியற மாதிரி நான் சொல்லறேன்.

பாண்டவர்களும், கௌரவர்களும் சின்னக் குழந்தைகளாக இருந்தபோது அவர்களுக்குக் கல்வி கற்பிக்கறதுக்கும், ஆயுதங்களைக் கையாளச் சொல்லித் தரதுக்கும் சரியான ஆசானைத் தேடிக்கிட்டு இருந்தார் கங்கையின் புதல்வரான பீஷ்மாச்சாரியார்.

சரியாக அந்தச் சமயத்தில் அஸ்தினாபுரத்தில் நுழைகிறார் குரு துரோணாச்சாரியார். அவர் பாரத்வாஜ ரிஷியோட மகன். குரு வம்சத்தின் அதாவது அஸ்தினாபுரத்தில் ஆட்சி செய்த வம்சத்தின் குலகுருவான குரு கிருபாச்சாரியாரின் சகோதரி கிருபியின் கணவர்.

துரோணரோட குருகுலத் தோழனான துருபத அரசனிடம் உதவி கேட்கப் போய், அவனால் அவமானப்படுத்தப்பட்டார். அவனைப் பழிவாங்கும் வெறியோட அங்கயும் இங்கயுமா அலைஞ்சிட்டிருந்தபோதுதான் அஸ்தினாபுரத்தில் காலடி எடுத்து வச்சார்.

பாண்டவர்களும், கௌரவர்களும் அரண்மனை நந்தவனத்தில் பந்து விளையாடிட்டு இருந்தாங்க. அப்போ அவங்க பந்து தவறி, அங்கேயிருந்த கெணத்துல விழுந்திருச்சாம். எப்படி எடுக்கறதுன்னு யோசிச்சுக்கிட்டுக் கெணத்தைச் சுத்திக் கவலையோட நின்னுட்டிருந்ததை துரோணர் பாத்துட்டு அவங்க பக்கத்துல வந்து,

“என்ன ஆச்சு? கெணத்துக்குள்ள எதுக்கு எட்டிப் பாக்கறீங்க?” ன்னு கேட்டாராம்.

“எங்களோட பந்து கெணத்துக்குள்ள விழுந்துருச்சு. எப்படி எடுக்கறதுன்னு தெரியலை” அப்படின்னு சொல்லிருக்காங்க.

“கவலைப்பட வேணாம். நான் உதவி பண்ணறேன்” அப்படின்னு சொல்லிட்டு என்ன பண்ணினார் தெரியுமா?

கையில ஒரு புல்லை எடுத்து ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கெணத்துக்குள்ள போட்டார். அந்தப் புல் பந்துல போயி ஒட்டிக்கிச்சு. அடுத்து இன்னொரு புல்லைப் போட்டார். அது, முதலில் போட்ட புல்லில போய் ஒட்டிக்கிச்சாம். இப்படி ஒவ்வொரு புல்லாப் போடப் போட ஒண்ணு மேல ஒண்ணு ஒட்டிக்கிட்டுக் கிணத்தோட மேற்பரப்பு வரைக்கும் வந்துடுச்சாம். அதைப் பிடிச்சு இழுத்துப் பந்தை எடுத்துக் கொடுத்தாராம்.

படம் : அப்புசிவா

அடுத்தாப்பல தன்னோட மோதிரத்தைக் கிணத்துக்குள்ள தூக்கிப் போட்டு, தன்னோட வில்லில அம்பைப் பொருத்தி எய்தாராம். அந்த அம்பு போயி அப்படியே மோதிரத்தைத் தூக்கிட்டு வெளியே வந்ததாம். இளவரசர்களோ பிரமிச்சுப் போய் நின்னாங்களாம்.

அவங்க நடந்ததைப் போய் அப்படியே பீஷ்மர் கிட்டச் சொன்னதும், வந்திருப்பது மிகவும் திறமையான ஆசான் அப்படின்னு பீஷ்மருக்குப் புரிஞ்சு போச்சு. உடனே போயி துரோணரை வரவேற்று மரியாதை செஞ்சு, இளவரசர்களுக்கு ஆசானா இருந்து எல்லாக் கலைகளையும் கத்துத் தரச் சொல்லி வேண்டுகோள் விடுத்துருக்கார். அவரும் சரின்னு சொல்லிட்டாராம்.

மகாபாரதம் என்கிற மாபெரும் காவியத்தின் தொடக்கத்தில், குரு துரோணாச்சாரியார் என்கிற மகானை அறிமுகம் செஞ்சு வச்சது புல் என்கிற உண்மை இப்போது புரியுதா குழந்தைகளா?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *