ஹாய் குட்டீஸ்…
எப்படி இருக்கீங்க?
இப்போ நாம் ஒரு புகழ்பெற்ற ஓவியரை பார்த்துட்டு வரலாமா?

அவர் பெயர் சால்வடோர் டாலி (Salvador Dali). என்ன வித்தியாசமா இருக்கா, வெய்ட்… முழுப்பேரை சொல்லவா? ‘சால்வடோர் தொமிங்கோ ஃபிலிப் ஜெசிந்தோ டாலி இ டொமினிக்’. ஆத்தாடி, எவ்ளோ பெரிய பேருன்னு தோணுதா. அங்கே எல்லாம் அப்படித்தான், ஊர்பெயர், குடும்பப்பெயர்னு எல்லாம் சேர்த்து வச்சுப்பாங்க. சுருக்கமா நாம டாலி ன்னு பேசுவோம்.

23ம் புலிகேசி படம் எல்லோரும் பார்த்திருப்பீங்க. அதன் இயக்குநர் சிம்புதேவன் அடிப்படையில் ஒரு ஓவியர், கார்ட்டூனிஸ்ட். அவருக்கும் டாலியை மிகவும் பிடிக்கும் போல. அதனால்தான் வடிவேலுவுக்கு டாலியின் மீசையை காப்பி பண்ணி ஒட்டியிருக்கார். ஆமா, அந்த நீளமான கூர்மீசைதான் டாலியின் உருவ அடையாளம். டாலியும் ஒரு பழைய ஸ்பெயின் ஓவியரைப் பார்த்து அதே போலவே வச்சுக்கிட்டாராம்.

சால்வடோர் டாலி 1904ல் ஸ்பெயின் நாட்டில் பிறந்தவர். அம்மாவின் தூண்டுதலால் ஓவியத்தின் மேல் ஆர்வம் வந்து ஓவியப்பள்ளியில் இணைந்தவர். இவர் பிறக்கும் முன் இறந்த அண்ணாவின் ஆன்மா தனக்குள் வந்து வரைய வைப்பதாக அவருக்கு ஒரு நம்பிக்கை. இதனால் டாலியின் ஓவியங்கள் ஒரு மாதிரி வித்தியாசமாகவும் நாம் கற்பனை செய்யமுடியாததாகவும் இருந்தது என சொல்லுவார்கள்.

தான் வாழ்ந்த இடங்கள், மனதில் கற்பனை செய்த சகோதரன், இப்படி எல்லாம் அவர் ஓவியங்களில் பிரதிபலித்தன. மன எண்ணங்களை ஓவிய உருவமாக வடிப்பதில் கைதேர்ந்தவர். அந்த காலத்திலேயே புகழ்பெற்ற மனநிலை ஆய்வாளராக, சிக்மண்ட் பிராய்ட் இருந்தார். அவரின் எழுத்துக்களை படித்து ஈர்க்கப்பட்டு மன எண்ணங்களை வரைவதை தனது கலை அடையாளமாகக் கொண்டார் டாலி. புரியும்படி சொல்லணும்னா கனவுகளை வரைந்தார்னு வச்சுக்கோங்க.

இவரது ஓவியங்களை சர்ரியலியிஸம் ன்னு சொல்லுவாங்க. அது என்னன்னு போன கட்டுரையில் படிச்சோம்தானே. நிஜமும் கற்பனையும் கலந்த வகை.


வரைவதோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்கள், சிற்பங்கள் செய்தல், புகைப்படக்கலை இதிலெல்லாம் இவருக்கு ஆர்வம் இருந்தது.

இவரது ஓவியங்களைப் பற்றி இன்னமும் பெரியதானதும் படித்து தெரிஞ்சுக்கோங்க. மாதிரிக்கு சில படங்கள் இந்த பத்தியில் இருக்கு. நாமும் நம்ம கனவுகளை கற்பனைகளை வரைந்து உருவம் கொடுத்து பார்ப்போமா?
தொடரும்…