மரப்பொந்துக்குள் ஒடுங்கி அமர்ந்திருந்தார்கள் பனியும் நெருவும். அது மிகவும் உயரமான மரம். மரம் அடர்ந்த காட்டில் இருந்தது. இருவருக்கும் பசித்தது. அம்மாவையும் அப்பாவையும் தேடின.
பனி மரப்பொந்தின் வெளியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தது. நெரு பொந்துக்குள் இருந்தது.
பனியும் நெருவும் ஆந்தைகள். குட்டி ஆந்தைக் குஞ்சுகள். அவர்கள் பிறந்து 7 வாரங்கள் ஆகி விட்டன. நெருவும் பனியும் பொந்துக்குள் பறந்து பறந்து பழகினார்கள். மீண்டும் மரப்பொந்தின் வாயிலில் நின்று அம்மாவை தேடினார்கள்.
பனி துணிந்து வெளியே பறக்க முயன்றது. மரப் பொந்தின் நுனியில் நிற்கும் போது தடுமாறியது. கால்களால் இறுக்கமாக பிடித்துக் கொண்டது. மீண்டும் பொந்துக்குள் போனது. நெரு அதைப் பார்த்தது. மிகவும் பயந்து விட்டது. நெரு பொந்துக்குள் போய் அமர்ந்து விட்டது. அது வெளியே வர முயலவே இல்லை.
பனி மீண்டும் பறக்க முயன்றது. இறக்கைகளை அசைத்து அருகில் இருந்த கிளையில் சென்று அமர்ந்தது. கிளை வரை போய் விட்டது. கீழே விழுவது போல இருந்தது. அதற்குள் கிளையில் காலை ஊன்றி விட்டது. இறக்கைகளை படபடவென அடித்து நிலையாக நின்றது. இப்போது அதற்கு பயம் போய் விட்டது. பொந்துக்கும் கிளைக்கும் இடையே பறந்து பறந்து பழகியது.

அம்மா உணவாக எலி வேட்டையாடி கொண்டு வந்தது. அம்மா கிளையிலேயே அமர்ந்தது. மரப்பொந்துக்குள் போகவே இல்லை. அது தன் குஞ்சுகள் பறக்க கற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணியது. பனியும் நெருவும் அம்மா பொந்துக்குள் வரும் என காத்திருந்தார்கள். அம்மா கிளையிலேயே இருந்தது.
பனி பறந்து கிளைக்குச் சென்றது. அதற்கு உணவு கிடைத்தது. நெரு உணவு கேட்டு அழுதது. ஆனால் அம்மா திரும்பிப் போய் விட்டது.
நெருவிற்கு அன்று உணவு கிடைக்கவில்லை. அது மீண்டும் மரப் பொந்துக்குள் பறந்து பறந்து பயிற்சி செய்தது.
அடுத்த முறை அம்மா உணவு கொண்டு வந்தது. நெருவும் பனியும் பறந்து போய் கிளையில் அமர்ந்தார்கள். அம்மா இருவருக்கும் உணவு கொடுத்தது.
அதன் பின் இருவரும் பறந்து போய் உணவு தேட கற்றுக் கொண்டார்கள். எலியும் ஓணானும் பிடித்து உண்டார்கள்.
ஆகா, ருசியான உணவு என மகிழ்ந்தது நெரு. ஆமாம் என சொல்லி நெருவை முத்தமிட்டது பனி.