“சாரா, நேற்று உன்னைத் தேடி வீட்டுக்கு வந்திருந்தேன் உன்னை காணலையே எங்க போயிருந்த” என்று கேட்டான் சச்சு.

“அதுவா நான் எங்க தாத்தாவோட தோட்டத்துக்கு போயிருந்தேன்” என்றாள் சாரா.

“ தோட்டத்துக்கா! அங்க மாடு கண்ணு குட்டி எல்லாம் இருந்துச்சா? “ என்று சச்சு வினவ, “ம்ம்ம்.. இருந்துச்சு எரும மாடு, பசு மாடு, காளை மாடு  எல்லாமே இருந்திச்சு” என பதில் கூறினாள் சாரா.

“ என்னது மாடுல இத்தனை வகை இருக்கா! எனக்கு இதைப் பத்தி எல்லாம் கொஞ்சம் சொல்றியா” என்றான் சச்சு.

“அதெற்கென்ன சொல்லிட்டா போச்சு, நான் பாடுறதை நல்லா கேட்டு தெரிஞ்சுக்க.

எருமை

Courtesy – Internet

ஏற்றம் தருமாம் எருமை

     ஏறி சுற்றிப் பாரீர்

போற்றும் பாலை உண்டே

    புகழைப் பெற்று வாழ்வீர்

மடியைத் தடவக் கிடைக்கும்

    மாட்டின் பாலின் சத்து

பிடித்து வாலை ஆட்டு

   பெரிதாய் நீயும் மகிழு!

காளை

Courtesy – Internet

காளை மாட்டை கண்டேன்

   கவரும் இளைஞர் மனத்தை

காளை அடக்க வாரீர்

   கையில் வெல்வீர் பணத்தை

முல்லை நிலத்தின் ஆயர்

   முயன்று வளர்ப்பர் மாட்டை

கொல்ல வேண்டி பலரும்

  குறிப்பாய் பிடிப்பர் கொம்பை

ஏறு தழுவி வாழ்ந்த

   இனிய கதைகள் கேட்டு

வீறு கொண்டு நாளும்

   விரும்பி மாட்டை வளர்த்து!!

பசு

Courtesy – Internet

கறவை மாட்டை கண்டேன்

   கனிவாய் நாளும் காத்தேன்

முறையாய் உணவைக் கொடுத்து

    முன்னே கூட்டிச் சென்றேன்

கருவை சுமக்கும் பசுவை

   கண்ணாய் காப்பேன் நன்றே

பெருமை பிறப்பில் உண்டு

   பெரிதாய் அறிவேன் நானே

குறைகள் இன்றி வளர்த்து

    குறிப்பால் தேவை அறிவேன்

குறைதல் போன்ற நோயும்

   கூடா நிலையில் வைப்பேன்!”

என சாரா பாடல்களை பாடி முடித்தாள்.

“அருமை சாரா, காளை மாடு ஏறு தழுவி வீரம் காக்கும், எருமை மாடு பாலை தந்து நம் பலத்தை கூட்டும், பசு மாடு பெருமை கொண்டு நம் குறைகள் தீர்க்கும்னு அழகாய் கூறினாய்” என்றான் சச்சு.

– நந்தினி மோகனமுருகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *