நூல்: தன்வியின் பிறந்தநாள்
ஆசிரியர்: யூமா வாசுகி
பக்கம்: 131
தன்வியின் பிறந்தநாள் என்கிற இந் நூலுக்காக, பால புரஸ்கார் விருது பெற்றார் யூமா வாசுகி. 10 கதைகளை உள்ளடக்கிய சிறார் நூல் இது. என்னை மிகவும் பாதித்த கதை ஒரு மனநலம் பாதித்த சிறுமி அரசுப் பள்ளியில் படிக்கிறார். அவரை அவர்கள் அன்புடன் கவனித்துக் கொள்கிறார்கள். அவளுக்கு வரைவதும், நடனம் ஆடுவதும் பிடிக்கும். நடனம் என்றால் அவளுக்கு வருவதை அவள் ஆடுவாள். அதை ஏனையோரும் பாராட்டுவார்கள். அவளுக்குக் கதைகள் கேட்பது மிகவும் பிடிக்கும். அந்தப் பள்ளியில் உள்ள இராமமூர்த்தி என்கிற ஆசிரியர் தினந்தோறும் கதைகள் சொல்கிறார். அவர் எந்த வகுப்புக்குச் சென்றாலும் குணசுந்தரியும் அங்கே சென்று கதை கேட்பாள். எல்லோருக்கும் தேர்வு நடக்கையில் அவளுக்கும் பேப்பர் கொடுக்கப்படுகிறது. அவள் அதில் ஒரு செடியும், மலரும் வரைகிறாள். அதன்பிறகு மைதானம் செல்கிறாள். இப்படி அவள் செய்யும் ஒவ்வொரு செயல்களும் அவரின் வழியே நம்முள் கடத்தப்படுகிறது. எங்கேயும் அவள் மேல் வழியும் எச்சிலோ, அவளின் அழுக்கு உடையோ நம்மை பரிதாபத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. அவள் மேல் நமக்கும் அன்பு ஏற்பட்டு விடுகிறது. ஒரு மாற்றுத்திறனாளிக் குழ்ந்தையை நேசிக்கக் கற்றுத் தந்து விடுகிறார். இந்தக் கதையைக் குழந்தைகள் படிக்கும்போது அவர்களை அறியாமல் அவர்கள் மாற்றுத்திறன் கொண்ட குழ்ந்தைகளை நேசிக்கவும்,புரிந்து கொள்ளவும் வழி வகுக்கும் என்றே நான் நம்புகிறேன்.

குழிக்குள் விழுந்த கோழிக்குஞ்சு கடைசியில் என்னவாகும் என்கிற பதைபதைப்பு எனக்கும் வந்தது. முடிவைத் தெரிந்து சிறிது கோபமும், வருத்தமும் தன்வியைப் போலவே வந்தது.
வலியினால் அல்ல என்ற கதையும் நாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியது தான். நண்பன் ஒருவன் எதிரியானால் அவனுக்கு நம்முடைய எல்லாமும் தெரிய வந்திருக்க அவன் மிகச் சிறந்த துரோகியாவான். பள்ளியில் நடக்கும் போட்டி இரு தோழிகளை எப்படிப் பிரிக்கிறது என்பதும், கோபத்தால் அவள் செய்யும் செயல்கள் வெறுப்பை வரவழைக்க, எப்படி அவள் திருந்தினாள், தன் தவறை எவ்வாறு உணர்ந்தாள் என்பது கதையில் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.