வணக்கம் பூஞ்சிட்டுக்களே!

“இந்த மாதம் நாம் பார்க்கப் போவது மிக எளிதான எக்ஸ்பிரிமெண்ட். இன்னிக்கு பிண்டு லீவ்! அவனோட பேட்டரி ரிப்பேர். அதுனால நான் தான் இந்த அறிவியல் சோதனையை முழுவதுமாக செய்துகாட்டப் போகிறேன்.” என்றாள் அனு.

“வாங்க அதுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைப்போம்!”

தேவையான பொருட்கள்:

1. வெள்ளை நிற கார்னேஷன் அல்லது ஜவ்வந்தி மலர்கள் – 4

(கார்னேஷன் மலர்கள் என்பது நான் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் மேடை அலங்காரத்தில் பார்க்கும் மலர்கள்.)

2. உணவில் சேர்க்கும் செயற்கை நிறமூட்டிகள் – 4 நிறங்கள்.

3. ஒளி புகும் நெகிழிக் கோப்பைகள் – 4

4. தண்ணீர்

5. கத்தரிக்கோல்

செய்முறை:

1. நான்கு கோப்பைகளிலும் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.

2. ஒவ்வொரு கோப்பையிலும் வெவ்வேறு நிறங்களில் மூன்று சொட்டு உணவு நிறமூட்டிகளை தெளித்துக் கொள்ளுங்கள்.

3. பூவின் நீளமான காம்பின் நுனியை மெலிதாக சீவிக்கொள்ளுங்கள்.

4. இப்போது ஒவ்வொரு பூவையும், ஒவ்வொரு கோப்பையில் போட்டு வைத்து, ஒரு மணி நேரம் பொறுமையாகக் காத்திருங்கள்.

5. ஒரு மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் கோப்பையில் இட்ட மலரின் நிறம் அந்த தண்ணீரின் நிறத்திற்கேற்ப மாறி இருக்கும்.

அனு, “என்ன குட்டீஸ் நீங்க வெள்ளையா வெச்சிருந்த பூ எல்லாம் கலர், கலரா மாறிடுச்சா! செம்ம ஜாலில்ல! அது எப்படி மாறுச்சுன்னு தெரியுமா!”

Courtesy: Internet

அறிவியல் உண்மைகள்:

மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ரத்த நாளங்கள் இருப்பது போல், தாவரங்களுக்கு சைலேம், ஃப்ளோயம் என்று இரண்டு குழாய்கள் இருக்கும். இதில் சைலேம் தண்ணீரையும், ஃப்ளோயம் உணவுப் பொருட்களையும் கடத்த உதவும்.

நிலத்தடி நீரை வேர்கால்கள் உறிஞ்சி அதை மரத்தின் மற்ற பாகங்களுக்கு கடத்துவது சைலேத்தின் வேலையாகும். அப்படித்தான் பூவின் காம்பின் அடியில் இருக்கும் தண்ணீர், அதிலுள்ள சைலேத்தின் மூலம் பூவின் இதழ்களை  கலர் தண்ணீர் அடைங்கின்றன.

தந்துகி இயக்கம், தண்ணீரின் அழுத்தம் மற்றும் தாவரத்திற்கும் நிலத்திற்கும் இடையே உள்ள தண்ணீரின் அழுத்த வேறுபாடு இவையெல்லாம் சைலேத்தின் மூலம் தண்ணீரை மேலே அனுப்புகின்றன.

உங்களுக்கான கேள்விகள்:

1. நாம் ஏன் இந்த சோதனையில் வெள்ளை நிறப் பூவை உபயோகித்தோம்?

2. மூன்று சொட்டு நிறமூட்டிக்கு மாறாக ஐந்து, ஆறு சொட்டுக்களை விட்டால் என்னவாகும்?

பூர்ணிமா கார்த்திக் ‘பூகா’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *