கள்ளன் ஒருவன் ஒரு கிராமத்திற்குள் புகுந்தான். ஒரு மரத்தின் அருகே ஒளிந்து நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு ஓர் அரக்கனைப் பார்த்தான்.
இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் யாரென்று விசாரித்துக் கொண்டனர்.
“நான் ஒரு திருடன். இந்த ஊரின் பெரிய மனிதர் வீட்டில் திருட வந்திருக்கிறேன்.”
“நான் ஒரு பிரம்ம ராக்ஷஸன். நீ சொல்லும் அதே பெரிய மனிதனைக் கொன்று தின்ன வந்திருக்கிறேன்.”
இரண்டு பேரும் அறிமுகம் செய்து கொண்ட பின்னர் அவர்கள் செல்ல வேண்டிய வீட்டுக்கு சேர்ந்தே நடந்து போய் வீட்டுக்கு வெளியே ஒரு மரத்தின் அருகே ஒளிந்து கொண்டனர். இரவு அனைவரும் தூங்கிய பின்னர் உள்ளே நுழையக் காத்துக் கொண்டிருந்தனர்.
கள்ளன் முதலில் கிளம்பினான்.
“நான் முதலில் போய் வீட்டின் பின்புறத்தில் கட்டிப் போடப் பட்டிருக்கும் பசுவை அவிழ்த்து ஓட்டிச் செல்லப் போகிறேன்.”
“இல்லை. நான் முதலில் போய் இந்த வீட்டுச் சொந்தக்காரனைக் கொன்று தின்று விடுகிறேன். நல்ல பசியில் இருக்கிறேன்.”
“இல்லை. நீ முதலில் போனால் எல்லோரும் விழித்துக் கொள்வார்கள். என்னால் எனது திருட்டு வேலையைச் செய்ய முடியாது.”
“இல்லை. நீ முதலில் போய்ப் பசுவைக் கொண்டு செல்லும் போது பசு கத்தினால் எல்லோரும் முழித்துக் கொள்வார்கள். என்னால் இந்த வீட்டு மனிதனைத் தின்ன முடியாது.”

இரண்டு பேருக்கும் வாக்குவாதம் பெரிதாகிச் சத்தம் அதிகரிக்க வீட்டுக்குள் இருந்து எல்லோரும் முழித்துக் கொண்டு வெளியே வந்து அவர்களைப் பிடித்து விட்டனர்.
சண்டை போட்டதால் இரண்டு பேரும் தாங்கள் நினைத்ததை நடத்த முடியாமல் ஏமாந்து போய்த் தலைகுனிந்து நின்றனர்.
நல்ல மனதுடைய வீட்டுச் சொந்தக்காரன் அவர்களைப் பார்த்து மனம் இரங்கினான்.
“என் வீட்டுக்கு வந்து விட்டு நீங்கள் வெறும் கையுடன் திரும்ப வேண்டாம். எனது பரிசுகளைக் கொண்டு செல்லுங்கள். தவறான வழியை விட்டு விடுங்கள் ” என்று சொல்லி, அவர்களுக்குக் கை நிறையப் பொன்னும் பொருளும் தந்தான்.
அதைப் பார்த்த இருவரும் மனம் திருந்தி அவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
“இனி இந்த இழிதொழில் செய்ய மாட்டோம். உழைத்து உயிர் வாழ்வோம்.” என்று சொல்லி அன்று முதல் புதிய வாழ்வு வாழத் தொடங்கினார்கள்.
புவனா சந்திரசேகரன்.