“ஏய்! யார் டா எங்க மேல கை வைக்கிறது?” என்று கத்தினார் மதன்.
“சார்! சட்டையை விடுங்க” என்று கத்தினார் நவீன்.
வாராண்டாவிற்குள் தள்ளப்பட்ட நண்பர்களிருவரும் கோபத்துடன் எதிராளிகளை தாக்க முற்பட்டனர். சுற்றியிருந்தவர்கள் அவர்களிருவரும் தாக்காத வண்ணம் கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டனர்.
உதறி விலக முற்பட்ட வேளையில், பிளிறல் சத்தம் வெகு அருகில் கேட்டது.
திடுக்கிட்டு திரும்பினார்கள், மதனும், நவீனும். நான்கடி தூரத்தில் வாராண்டா க்ரில் கதவுக்கு வெளியே நின்றிருந்த ஒற்றை யானையை பார்த்து மிரண்டனர். இருவரின் பார்வையும், வாராண்டா கதவின் தாழ்ப்பாளில் படிந்தது.ஏற்கனவே அது பூட்டப்பட்டிருந்தது..
“டேய்! என்னடா இவ்வளவு பக்கமா நிக்குது” என்றார் நவீன்.
“ஆமாடா! தூரத்துல நிக்கும்னு நினைச்சேன்டா!” – மதன்
அங்கிருந்த அனைவரின் பார்வையிலும் மிரட்சியிருந்தது.
யானையின் பிளிறல் மீண்டுமொருமுறை கேட்டது. உள்ளே தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள், பெரியவர்கள் பதட்டத்துடன் வெளியே ஓடி வந்தனர்.
வெளியே வந்தவர்களின் கூச்சல் அதிகரித்தது. ஏற்கனவே நின்றிருந்தவர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அறைகளுக்குள் புகத்தொடங்கினர்.
“அம்மா! யானையை நல்லா பாக்கலைம்மா. பார்த்துட்டு வர்றேனே” என்றது ஒரு குழந்தை.
“நானும் அவனோட நின்று பாத்துட்டு வர்றேன்! ப்ளீஸ்!”என்று நச்சரிக்க ஆரம்பித்தது இன்னொரு குழந்தை.
பதின்ம வயது பிள்ளைகள், பெற்றவர்களை மீறி வெளியே நிற்க பிடிவாதம் பிடித்தனர்.
அப்பிள்ளைகளையும் மிரட்டி உள்ளே வரவழைத்திருந்தார்கள், பெரியவர்கள்.
அங்கிருந்த கூட்டம் மெல்ல கலையத் தொடங்கியிருந்தது.

மதனும், நவீனும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
“எல்லாருமே தொடை நடுங்கிகளா இருக்காங்களேடா.. பயந்தாங்கொள்ளிங்க” என்றார் மதன்.
இருவரும் தங்களுடைய கேமராக்களை எடுத்து படமெடுக்க ஆரம்பித்திருந்தனர்.
இரண்டு நிமிடங்கழித்து, யானை தும்பிக்கையை தூக்கிக்கொண்டு க்ரிலுக்கு அருகே வந்தது.
பிழியவும் ஆரம்பித்தது.
கேமராக்களை தூக்கிக்கொண்டு இருவரும், தங்களுடைய அறைக்கு ஓட்டம் பிடித்தனர்,
ஒற்றை யானை அங்கேயே நின்றுக்கொண்டிருந்தது.
தொடரும்….