ஆனியின் அன்புசூழ் உலகு-9


மரிலா படுக்கையின் மீது மூன்று உடைகளை விரித்து வைத்து விட்டு உனக்குப் பிடித்து இருக்கா?” என்று ஆனியிடம் கேட்டார்.
ஒன்று கருமஞ்சளும் பழுப்பும் கலந்த சின்ன சின்னக் கட்டம் போட்ட பருத்தி உடை; இன்னொன்று கருப்பு வெள்ளை கட்டம் போட்ட சாட்டின் உடை; மூன்றாவது நீல ‘பிரிண்ட்’ போட்ட உடை. இவற்றை மரிலாவே தைத்து இருந்தார்.
“எனக்குப் பிடித்து இருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறேன்” என்றாள் அடக்கமாக ஆனி.
“நான் உன்னைக் கற்பனை பண்ணச் சொல்லவில்லை. ஓஹோ! உனக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். ஏன் இந்த உடைகளுக்கு என்ன குறை? இவை புதிதாகவும், நேர்த்தியாகவும், சுத்தமாகவும் இல்லையா?”
“இருக்கின்றன.”
“பிறகு ஏன் உனக்குப் பிடிக்கவில்லை?”
“இவை அழகாக இல்லை” ஆனி தயக்கத்துடன் சொன்னாள்.
“அழகா? உனக்கு அழகான உடைகள் தைக்க வேண்டும் என்று நான் மெனக்கெடவில்லை ஆனி. சுருக்கமும், மடிப்பும் இல்லாத இந்த உடைகள் கோடைக் காலத்துக்கு ஏற்றவை. இவை நன்றாக உழைக்கக்கூடியவை. சாட்டின் உடையை மாதாக் கோவிலுக்கும், ஞாயிறு-பள்ளிக்கும் உடுத்திச் செல். அந்தக் கட்டம் போட்ட பழுப்பு உடையையும், நீலத்தையும் பள்ளிக்கூடம் போகும் போது போடலாம். இவற்றைக் கிழிக்காமல் சுத்தமாக நீ வைத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். உடம்புக்கே போதாமல் அரைகுறையாக நீ போட்டுக் கொண்டு இருந்த விலை மலிவான அந்தச் சின்ன உடைக்குப் பதிலாக, இந்தப் புது உடைகள் கிடைத்ததற்கு, நன்றி சொல்வாய் என்று எதிர்பார்த்தேன்” என்றார் மரிலா.
“ஓ! ரொம்ப நன்றி. ஏதாவது ஒரு சட்டையில் கையில் ‘பஃவ்’ வைத்துத் தைத்து இருந்தால், இன்னும் அதிக நன்றியோடு இருப்பேன். அது தான் இப்போது ‘பேஃஷன்’. எனக்கு ‘பஃப்’ கை உள்ள சட்டையைப் போட்டால் அப்படியொரு மகிழ்ச்சி கிடைக்கும் மரிலா.”

படம் : அப்பு சிவா


“‘பஃப்’ கை வைத்துத் தைத்துத் துணியை வீணாக்க என்னிடம் துணி இல்லை. அதைப் பார்க்கச் சிரிப்பாக இருக்கும். நான் சுருக்கம் ஏதும் வைக்காமல் சாதாரணமாகத் தைப்பதையே விரும்புகிறேன்.”
“ஆனால் எல்லாரும் அப்படி போடும் போது, நான் மட்டும் சாதாரணமாகப் போட்டு இருந்தால் அதுவும் சிரிப்புக்கு இடமாகும் அல்லவா?” வருத்தமாகக் கேட்டாள் ஆனி.
“இந்த உடைகளை எடுத்துப் பத்திரமாக அலமாரியில் வைத்துவிட்டு உட்கார்ந்து ஞாயிறு-பள்ளிக்கான பாடத்தைப் படி. நீ நாளைக்குப் போக வேண்டும்” என்று மரிலா கோபமாகச் சொல்லிவிட்டுக் கீழே இறங்கிச் சென்றார்.
மறுநாள் காலை மரிலாவுக்குத் தலைவலி காரணமாக ஞாயிறு-பள்ளிக்கு ஆனியுடன் செல்ல முடியவில்லை.
“ஆனி! திருமதி லிண்டே வீட்டுக்குப் போய் அவருடன் சேர்ந்து மாதா கோவிலுக்குப் போ. அங்கே நல்லவிதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள். உனக்கான வகுப்புக்குப் போக, அவர் வழி காட்டுவார். மதபோதனை நடக்கும் போது, நம் குடும்பம் உட்காரும் மர இருக்கையைக் காட்டச் சொல். கோவிலுக்குக் கொடுக்க இந்த ஒரு சென்ட் காசை எடுத்துக் கொள். யாரையும் உற்றுப் பார்க்காதே. பதற்றப்படாதே. வீட்டுக்கு வந்த பிறகு அங்கே கற்றுக் கொண்டதை என்னிடம் சொல்வாய் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார் மரிலா.
ஆனி கருப்பு வெள்ளைக் கட்டம் போட்ட கவுனைப் போட்டுக் கொண்டு சென்றாள். வழியில் பூத்து இருந்த மஞ்சள் பூக்களையும், காட்டு ரோஜாக்களையும் பறித்துத் தொப்பி மேல் மலர் வளையம் போல் அலங்கரித்துக் கொண்டு திருமதி லிண்டே வீட்டுக்குச் சென்றாள். அவர் ஏற்கெனவே மாதா கோவிலுக்குச் சென்று விட்டதால் அவள் தனியாகச் சென்றாள்.
மாதா கோவிலின் முகப்பில் குட்டிப் பெண்கள் பலர் நின்று இருந்தனர். அவர்கள் ஆனியின் வித்தியாசமான தொப்பி அலங்காரத்தைக் கேலியாகப் பார்த்துச் சிரித்தனர். ஏற்கெனவே அவர்கள் ஆனியின் விசித்திரக் குணங்கள் பற்றிக் கேள்விப்பட்டு இருந்தனர். அவளது மோசமான முன்கோபம் பற்றித் திருமதி லிண்டே சொல்லி இருந்தார். “பைத்தியம் போலத் தனக்குத் தானே பேசிக் கொள்வாள்; பூக்களோடும் மரங்களோடும் பேசுவாள்” என்று மரிலா வீட்டில் வேலை செய்த பையன் சொல்லி இருந்தான். அவர்களுக்குள் அவளைப் பற்றி ரகசியமாகக் கிசுகிசுத்துக் கொண்டனர். அவளுடன் நட்பு பாராட்ட யாரும் முன்வரவில்லை.
பக்திப்பாடல்கள் பாடி முடிந்தவுடன் ஆனி மிஸ்.ரோஜர்சன் வகுப்புக்குச் சென்றாள். அவர் இருபது ஆண்டுகளாக ஞாயிறு வகுப்பை நடத்துபவர். மரிலா ஏற்கெனவே ஆனியைப் படிக்க வைத்து இருந்ததால், ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு அவள் சரியான பதில்களைச் சொன்னாள்.
வகுப்பில் எல்லாப் பெண்களும் ‘பஃப்’ கை வைத்த சட்டை போட்டு இருந்தனர். அதைப் பார்த்த ஆனிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அது போல் சட்டை அணியாமல் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. அவள் தொப்பி மேல் இருந்த பூக்கள் வாடிவிட்டதால், வீடு திரும்பிய சமயம் வழியில் தூக்கிப் போட்டாள்.
“உனக்கு ஞாயிறு-பள்ளி பிடித்து இருந்ததா?” என்று மரிலா ஆனியிடம் கேட்டார்.
“எனக்குப் பிடிக்கவே இல்லை; பயங்கரமாக இருந்தது” என்றாள் ஆனி.
“ஆனி ஷெர்லி” என்று கோபமாகக் கத்தினார் மரிலா.
“நீங்கள் சொன்ன மாதிரி நான் நல்ல பெண்ணாக நடந்து கொண்டேன். திருமதி லிண்டே ஏற்கெனவே போய்விட்டார். அதனால் நானே மாதா கோவிலுக்குப் போனேன். அங்கே நிறைய பெண்கள் இருந்தார்கள். பக்திப்பாடல்கள் பாடிய போது நான் சன்னல் பக்கம் இருந்த பெஞ்ச் ஓரம் உட்கார்ந்து இருந்தேன். திரு.பெல் ரொம்ப நேரம் பக்திப்பாடல் பாடினார். நான் அந்தச் சன்னல் பக்கம் உட்காராமல் இருந்திருந்தால், மிகவும் களைத்துப் போயிருப்பேன். நல்ல வேளையாக நான் சன்னல் வழியாகத் தெரிந்த தண்ணீர் மின்னும் ஏரியைப் பார்த்துக் கற்பனை பண்ணிக் கொண்டு இருந்தேன்.”
“நீ அப்படி செய்து இருக்கக் கூடாது. அவர் பாடியதைக் கவனமாகக் கேட்டு இருக்க வேண்டும்.”
“மிஸ்.ரோஜர்சன் வகுப்பில் ஒன்பது பெண்கள் இருந்தனர். எல்லாருமே ‘பஃப்’ வைத்த சட்டை அணிந்து இருந்தனர். என்னுடையதும் ‘பஃப்’ வைத்த சட்டை என்று கற்பனை செய்ய முயன்றேன். ஆனால் முடியவில்லை.”
“வகுப்பில் சட்டையைப் பற்றி யோசனை பண்ணக் கூடாது. பாடத்தைக் கவனமாகக் கேட்க வேண்டும் என்பது உனக்குத் தெரியும் என்று நம்புகிறேன்” என்றார் மரிலா.

ஞா. கலையரசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *