ரயிலின் நண்பர்கள் – 8

படம் : அப்பு சிவா

அத்தியாயம் 8 (Final Episode)

“ஜிம் நம்ம வீட்டுக்கு வந்ததிலிருந்து நாம அவ்வளவா ரயில் நிலையத்துக்கு போகவே இல்லல்ல?” என்று கேட்டாள் ஃபிலிஸ்.

“ம்.. இன்னைக்குப் போகலாமா?* என்று பீட்டர் கேட்க, அன்று மூன்று பேரும் மீண்டும் ரயில் நிலையத்திற்குச் சென்றார்கள்.

அன்று வழியில் சந்தித்தவர்கள் அனைவரும் இவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கையசைப்பது போல் தோன்றியது.

சிறுவர்களுக்குப் பிடித்தமான ஒன்பதே கால் மணி ரயில் வந்து நின்றது. அன்று அதிலிருந்த பயணிகள் அனைவரும் ராபர்ட்டா, ஃபிலிஸ், பீட்டர் மூவரையும் பார்த்துக் கையசைத்தனர். இவர்களும் பதிலுக்குக் கையசைத்தார்கள். பயணிகள் பெரும்பாலானவர்கள் தங்கள் கைகளில் செய்தித்தாளை வைத்திருந்தது போல் தோன்றியது ராபர்ட்டாவுக்கு.

“இன்னிக்கு எல்லாரும் நல்ல மூட்ல இருக்காங்கன்னு நினைக்கிறேன்” என்றாள் ஃபிலிஸ்.

“ஆமா! எனக்கும் அப்படித்தான் தோணுது. மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்கும் போது நமக்கும் சந்தோஷமா இருக்கு” என்றான் பீட்டர். ரயில் புறப்பட்டதும் மூவரும் வீட்டிற்குத் திரும்பினர்.

அனைவர் மனதிலும் மகிழ்ச்சி இருந்தாலும் ராபர்ட்டாவிற்கு அன்று ஏதோ கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. ஏதோ நல்ல நிகழ்ச்சி ஒன்று நடக்கப் போவதாக மனதில் பட்டது. அனைவரும் வீட்டில் தத்தம் வேலையில் ஈடுபட்டிருக்க அவளுக்கு மறுபடியும் ரயில் நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்று தோன்ற, அப்படியே செய்தாள் ராபர்ட்டா.

மதியம் வந்த ரயிலைப் பார்த்துக் கொண்டே ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தாள். எப்போதுமே ரயிலில் இருந்து இறங்கி வரும் பயணிகள் ஒவ்வொருவரையும் கவனிப்பது அவளுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. ரயிலில் வந்த ஒரு மனிதரைப் பார்த்தவுடன் துள்ளிக் குதித்தாள் ராபர்ட்டா.

“அப்பா!” என்றபடி தன் இருக்கையில் இருந்து எழுந்து, குதித்தோடிச் சென்று அவரைக் கட்டிக் கொண்டாள். அருகிலிருந்த மற்ற பயணிகள் அவளது மகிழ்ச்சியைப் பார்த்துப் புன்னகைத்தனர்.

அப்பா மெலிந்து போய் சோர்வாக இருந்தார். ஆனாலும் அவரது முகம் மகிழ்ச்சியாக இருந்தது. ராபர்ட்டாவைப் பார்த்தவுடன் கட்டிப்பிடித்துக் கொண்டார்.

“நான் வர்றதா கடிதம் போட்டிருந்தேனே! அது கிடைச்சுதா?” என்று அப்பா கேட்க,

“அது வரலியே அப்பா! அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க!” என்று மகிழ்ச்சியில் துள்ளினாள் ராபர்ட்டா. “எல்லாம் சரியாயிடுச்சாப்பா?” என்று அவள் கேட்க,

“ஆமா! என் மேல சுமத்தப்பட்ட புகார் பொய்யானதுன்னு முடிவு பண்ணி, உண்மையான குற்றவாளியைக் கைது பண்ணிட்டாங்க. அதுக்குக் காரணம் யார் தெரியுமா? நீதான்! நான் வெளியே வர்றதுக்கு உதவினவர் ஒரு பெரிய மனிதர். அவர் உங்க மூணு பேரோட நண்பராமே! அவர்தான் விரைவா உண்மையைக் கண்டுபிடிச்சு உயரதிகாரிகள் கிட்ட சொல்லி எனக்கு விடுதலை வாங்கித் தந்தது.. உங்க பசங்க ரொம்பக் கெட்டிக்காரங்க, அருமையான குணம், அப்படின்னு என்கிட்ட உங்களைப் பத்தி ரொம்ப உயர்வா சொன்னார்.. எனக்கு ரொம்ப ரொம்பப் பெருமையா இருக்கு.” என்றபடி அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.

“ஆமாப்பா! ஜிம்மோட தாத்தா தான் அவர். நான் செய்தித்தாள்ல உங்க மேல போட்ட வழக்கைப் பத்திப் படிச்சேன். அம்மா தம்பி, தங்கை கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க. நான் அந்த செய்தியை வெட்டி எடுத்து, கூடவே எங்க அப்பா எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டாங்க, அவருக்கு உதவி பண்ணுங்க அப்படின்னு ஒரு லெட்டர் எழுதி, ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட கொடுத்து, ஜிம்மோட தாத்தா கிட்ட குடுக்கச் சொன்னேன். அவர் இவ்வளவு விரைவா செயல்பட்டு உங்க விடுதலைக்கு உதவியிருப்பார்னு நினைக்கவே இல்லை. இப்படித்தான் முன்னாடி அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தப்பவும் எங்களுக்கு உடனடியா உதவி பண்ணினார்.”

“ஆமாடா செல்லக்குட்டி! நீங்க எல்லாம் எவ்வளவு பொறுப்பா இருந்தீங்கன்னு அம்மா எனக்குத் தொடர்ந்து லெட்டர் எழுதிக்கிட்டே இருந்தாங்க.”

“ஆமாப்பா! அம்மா எப்பவும் ஏதாவது எழுதிக்கிட்டே இருப்பாங்க. அவங்க எழுதுற கதைகள் நிறைய புத்தகங்கள்ல இப்ப வருது தெரியுமா? வாங்கப்பா, வீட்டுக்குப் போகலாம். நான் உங்களுக்கு நம்ம புது வீட்டைக் காட்டுறேன். நீங்க பார்த்ததில்லை இல்ல? நம்ம வீடு பேரு ‘த்ரீ சிம்னீஸ்’. அதுல மூணு புகைப் போக்கிகள் இருக்கும்” என்றபடி அப்பாவை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்குச் சென்றாள்.

அப்பா வீட்டிற்குள் வருவதற்கு முன்பாகவே, “அம்மா, தம்பி, தங்கை எல்லார்கிட்டயும் முதன்முதல்ல நான் தான் நீங்க வந்திருக்கிற சந்தோஷமான செய்தியை சொல்லுவேன். அதுக்கப்புறம் தான் நீங்க உள்ளே வரணும்” என்று கூறியபடி அப்பாவை வெளியே நிறுத்திவிட்டு குடுகுடுவென்று வீட்டிற்குள் ஓடினாள் ராபர்ட்டா.

இனிமேல் என்றுமே தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பது அவளுக்குப் புரிந்து விட்டது!

(முற்றும்)

Dr. S. அகிலாண்ட பாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *