ஐஸ்கிரீம் பயணங்கள் – 2

ஹாய் சுட்டீஸ்.
பெல்ட் போட்டாச்சா? நம்ம ஒளி வண்டியில் ஏறி, ஒளிக்கதிரைக் கெட்டியா பிடிச்சிக்கோங்க. நம்ம இந்த மாத விண்வெளிப்பயணம் ஆரம்பிக்கப்போகுது.

போன மாதம் நிலா எப்படி உருவாச்சின்னு 4.5 பில்லியன் வருடங்கள் முன்னாடி போய் பார்த்தோம். இந்த மாதம் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் போய் செவ்வாய் கிரகத்தில் என்ன நடந்துச்சின்னு பார்க்கலாமா?

இப்போவே சொல்லிட்டேன் ஃப்ரெண்ட்ஸ்.. இந்த பயணம் முழுக்க நான் பேசிகிட்டே இருப்பேன். அப்போ தானே உங்களுக்கு ‘போர்’ அடிக்காது.

இதோ வந்துட்டோம்! அங்கே பாருங்க! நம்ம குழந்தை பூமி அழகா இருக்கு. குழந்தை நிலா தன் பிஞ்சு பாதங்களால் பூமியைச் சுற்றிகிட்டு இருக்கு.

படம் : அப்பு சிவா

பூமிக்கும் சனிக்கும் நடுவில் இருப்பதை வைத்துப் பார்த்தால் இது செவ்வாய் கோள். ஆனால் இப்போ (அதாவது 3.5பில்லியன் வருடங்களுக்கு முன்னால்) செவ்வாய் பூமியைச் போலவே நீல நிறத்தில் இருக்குதே! நீர் இருந்தால்தான் நீல நிறத்தில் இருக்க முடியும். அப்போ இந்த கோளில் நீர் இருக்குது.

செவ்வாயில் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் நீர் இருந்ததா? நீர் உயிரின் ஆதாரம்‌. அப்போ ஒரு காலத்தில் உயிர் வாழ ஏதுவான கோளாக இருந்திருக்கிறதா செவ்வாய்? அந்த நீர் எல்லாம் இப்போ என்னாச்சி?- இந்த கேள்விகளெல்லாம் உங்க மூளைக்குள்ளும் பளிச் பளிச்சிட்டதா குட்டீஸ்? வாங்க பார்க்கலாம்.

கவனமா பாருங்க.. செவ்வாயின் காற்று மண்டலம் நம் பூமியோடதைப் போலவே அடர்த்தியாக இருக்குது. அதில் நீராவி நிறைந்து இருக்கு. அப்போ மேகங்கள் உருவாகி மழை பொழியுமே. அட! ஆமாம்‌. பாருங்க எத்தனை அழகாக மழை பெய்யுதுன்னு‌. அங்கே பாருங்க.. ஒய்யாரமாய் ஆறுகள் வளைந்து நெளிந்து போவதை! பூமியில் இப்போது இருப்பதைப் போலவே, ஆறுகள் பல நூறு ஆண்டுகள் ஓடி, ஆற்றுப்படுகைகள் உருவாகின்றன. ஆறுகள் ஒன்றாகப் போய் கடல்கள் உருவாகுமில்லையா. அதோ! செவ்வாயின் வடதுருவம் முழுக்க‌ஒரு பெருங்கடலால் மூடப்பட்டிருக்கிறது..

இப்படியே இருந்தால் இன்னும் சில கோடி வருடங்களில் உயிர்கள் உருவாகலாம்.

அச்சோ! என்ன நடக்குது? செவ்வாயின் காற்று மண்டலத்தின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பிக்குது‌. காற்று மண்டலம் விண்வெளிக்குள் தொலைந்து போகுது. நீராவி மேகமாய் மாறாமல், அண்டத்தில் காணாமல் போகுது. யார் செவ்வாயின் காற்றையும் நீராவியையும் உறிஞ்சி எடுக்குறது?

அதானே பார்த்தேன். நம்ம சூரியன் இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்? சூரியனிலிருந்து வரும் கதிரலைகள் செவ்வாயின் வளி மண்டலத்தை சூடாக்குகிறது. சூடான வளிமண்டலத்தின் காற்றுகள் செவ்வாயின் ஈர்ப்புவிசையை விட்டு வெளியேறிவிடுகிறது. ஆனால் இதைவிட பக்கத்தில் இருக்கும் பூயியில் சூரியனின் கதிரலைத் தாக்குதல் இத்தனை தீவிரமாக இல்லையே! எது நம் பூமியைச் பாதுகாக்கிறது?

வாங்க. ‘இயற்பியல்’ ங்கிற ஸ்பெசல் கண்ணாடி போட்டுப் பார்க்கலாம். அட! காந்த அலைகள்! பூமிக்கு எத்தனை பலமான காந்த அலைகள் இருக்கின்றன. பூமியின் காந்த சக்திக்கு காரணம் என்ன? பூமி சுற்றும் போது, பூமிக்கு நடுவில் வெப்பத்தின் காரணமாக உருகிய நிலையில் இருக்கும் இரும்பு, சுழற்சிக்கு உள்ளாகிறது. திரவ இரும்பு சுற்றுவதால் காந்த அலைகள் உருவாகுது. இந்த படத்தைப் பாருங்க. எவ்ளோ வீரியமான காந்த அலைகள் என்று. சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுத் தாக்குதலை இந்த காந்த அலைகள்தான் கேடயம் மாதிரி தடுத்து நம்ம பூமியைப் பாதுகாக்கிறது.

படம்: University of Rochester 2015

இந்த காந்த அலை கேடயம் செவ்வாய் கிரகத்திற்கு பலவீனமாய் இருக்கு. பூமி பெரிதாக இருப்பதால் அதோட மையப்பகுதி இன்னும் அதிகளவில் அதாவது கிட்டத்தட்ட 5000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கு. அதனால் திரவ இரும்பு இன்னும் சுழன்று கொண்டே இருக்கு. ஆனால் செவ்வாய் சின்னதாக இருப்பதால் அதன் மையப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக குளிர்ச்சியடையுது. அதனால் திரவ இரும்பின் சுழற்சி வேகம் குறையுது. அதனால் உருவாகிற காந்த அலைகளின் பலமும் குறையுது‌. காந்த அலைகளின் கேடயம் இல்லாததால் சூரியனின் கதிர் அலைகளின் வீரியத்தை தாக்குபிடிக்க முடியாமல் செவ்வாயின் காற்றின் அடர்த்தி குறையுது. நீராவி விண்வெளிக்குள் காணாமப் போயிடுது.

செவ்வாயின் நீர் எல்லாம் சூரியக்கதிரின் வெப்பத்தில் நீராவியாகி கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பிக்குது. நீராவியில்லாமல் மழையில்லை; ஆறுகள் இல்லை; கடல் இல்லை. பாருங்க.. வடதுருவத்தில் நாம் பார்த்த பெரிய கடலே சில கோடி வருடங்களில் காணாமப் போயிடுச்சி.

செவ்வாயின் ஆறுகள் ஓடிய பாதைகள் தழும்பாய் அதன் மேற்பரப்பில் காட்சி தருது. பக்கத்தில் இருக்கும் பூமியில் கிட்டத்தட்ட இதே காலத்தில் இன்று இருக்கும் அனைத்து உயிர்களின் மூதாதையரான பாக்டீரியா, வைரஸ்கள் உருவாக ஆரம்பிக்குது..

செவ்வாயின் மையப்பகுதி வெப்பம் அதிகமாக இருந்து, திரவ இரும்பு இன்னும் அதிவேகமாக சுழன்று கொண்டே இருந்திருந்தால், நம்ம பூமிக்குப் பக்கத்தில் இன்னொரு உயிர்க்கோள் இருந்திருக்கும். நாம் கோடைக்காலத்தில் ஊட்டி, கொடைக்கானலுக்கு பதில் செவ்வாய் கிரகம் சுற்றுலா போயிருக்கலாம்.

சரி, விடுங்க! அடுத்த மாதம் நம் விண்வெளியில் வேறு ஒரு சுவாரஸ்யமான இடத்துக்குப் போய், ஆச்சர்யமான நிகழ்வைப் பார்க்கலாம். டாடா!

வித்யா செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *