காவல்துறை நண்பர்கள்

வணக்கம் குழந்தைகளே, இன்னைக்கு நாம காவல் துறை நண்பர்கள் அதாவது போலீஸ்காரர்கள் பற்றி பேசுவோமா, நீங்க எங்கல்லாம் காவல் அதிகாரிகளை பார்த்துருக்கீங்க?

நான் இரண்டு முறை காவலர்களுடன் நேரில் சந்தித்து பேசியிருக்கேன். முதல்ல 9ம் வகுப்பு படிக்கும்போது , “காவலர்கள் நம் நண்பர்கள்” அப்டின்னு ஒரு பேச்சு போட்டி, எங்க பள்ளியில் வச்சாங்க. காவல் நிலையத்திலிருந்து எங்கள் பள்ளிக்கு வந்து போட்டி வைத்து பரிசு கொடுத்து இன்னும் சில விழிப்புணர்வு தகவல்களை பகிர்ந்துட்டு போனாங்க. இப்போ என்னோட பையன் பள்ளிக்கு வந்து குட்-டச், பேட்-டச் பத்தி விழிப்புணர்வு கொடுத்தாங்க. காவலர்கள் என்றாலே குற்றம் செய்தவர்களை தண்டிப்பவர்கள் மட்டுமல்ல, குற்றம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளையும் ஆர்வத்துடன் சமுதாயத்திற்கு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் துணை காவல் ஆய்வாளராக பணி புரிகிறார். அவருக்கு தற்செயலாக ஒரு ஞாயிற்றுக்கிழமை போன் செய்திருந்தேன். என்னப்பா என்ன பண்ணிட்ருக்க என்று கேட்டால் ரோட்டில் பள்ளம் நிரப்பும் வேலை வந்து விட்டது, பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். என்ன காவல் ஆய்வாளருக்கும் சாலை பணிக்கும் என்ன சம்பந்தம்? அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்று கேட்டால், “இன்று சாலை துறை அதிகாரி விடுமுறையில் இருக்கிறார், அவர் வந்து சரி செய்வதற்குள் ஏதேனும் விபத்து நடந்து விடக் கூடாதல்லவா, அதனால் நாங்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம், பதவி கூட கூட பொறுப்பும் கூடுகிறதல்லவா, எல்லோரும் விடுமுறையைப் பற்றி யோசித்தால் இங்கே விபத்து நடப்பதைத் தடுக்க யாரை வரச் சொல்வது?” என்று சொன்னார். மக்களைக் காக்க என்ன வேலை வந்தாலும் செய்யத் தயாராக இருக்கும் காவலர்களும் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், Salute சார்.

“ஹெல்மெட் போடாமல் போனால் அபராதத் தொகை வாங்குவார்கள் காவலர்கள்” என்று கற்பிக்கப்பட்டிருப்போம், ஆனால் இனி அந்த வரியை மாற்றி கற்பிப்போம் குழந்தைகளே, “ஹெல்மெட் போடுவதை உறுதி செய்து பல உயிர்களை காக்கிறார்கள் நம் காவலர் நண்பர்கள்”.

அரசியல்வாதிகள் சார்ந்த வழக்குகளில் அதிகாரத்தை காண்பிக்க முடியாத சூழ்நிலை நம் காவலர்களுக்கு, ஆனால் சாமானியர்களின் வழக்குகளில் அன்பை காண்பிக்கவும் அறத்தை நிலை நாட்டவும் அவர்கள் மறப்பதில்லை.

எத்தைனையோ சிறுவர்கள் கஞ்சா அல்லது வேறு ஏதேனும் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகும் சூழலில் சிக்கியிருந்தால் அவர்களை மீட்கும் பொறுப்பையும் பெற்றோர்களுடன் சேர்ந்து முகாம்களுக்கு அனுப்பி காவலர்கள் உதவி புரிகிறார்கள்.

இனி நீங்களும் காவலர்களை எங்காவது பார்த்தால் என்ன மாதிரியான காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று கவனியுங்கள் குழந்தைகளே. மற்றவர்களிடமும் வாய்ப்பு கிடைக்கும் போது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் தங்கங்களே, காவலர்களுக்கும் வெளியூர்களில் காவல் பணியில் ஈடுபடும்போது, தண்ணீர், உணவு, தூக்கம் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொள்வோம் செல்லங்களே.

இசை சுரேஷ்

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *