நில் கவனி செல்!

ஆழினி எட்டாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் சுட்டி. அதைவிட தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் அதிகம். ஆனால் இந்த தொல்லை தரும் பேசி வந்தாலும் வந்தது ஆழினி சற்றே அதன் போக்குக்கு அவ்வப்போது போய்  வந்து கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவளது தனிப்பட்ட தொலைபேசி அல்ல. அம்மாவின் தொலைபேசி தான். மாப்பிள்ளை இவர் தான் ஆனால் போட்டிருக்கும் சட்டை என்னோடது என்பது போல அம்மாவின் தொல்லை பேசியை போக போக தனதாக்கி கொண்டிருந்தாள் ஆழினி .

‘அம்மா நான் ஒன்னும் சும்மா போன் பாக்கல.. அழகழகா படம் எடுக்கறேன், எனக்கு பிடிச்ச பாட்டுக்கு நானே நடனம் அமைச்சு ஆடுறேன்  தெரியுமா இங்க பாரு!’  என்று அம்மா ஒரு நாள் தொல்லைபேசியையே கட்டிக்கொண்டு திரிகிறாயே என்று வைது தள்ளியபோது முசுமுசுவென்று கோபமாக காண்பித்தாள். நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் அம்மாவுக்கு தொலைபேசி உபயோகம் அவ்வளவு பிடித்தமில்லை. என்ன தான் அவசரம், அத்தியாவசியம் அறிவியல் , விரல் நுனியில் விவரங்கள் என்றெல்லாம் சாக்கு போக்கு சொன்னாலும் ஒரு கட்டத்தில் தொலைபேசி தொல்லைபேசி ஆக உருவெடுத்து நம் நேரத்தை விரயமாக்கும் முதல் காரணியாக தானே இருக்கிறது என்பது அம்மாவின் எண்ணம். குறிப்பாக ஆழினி வயது பதின் பருவத்தினருக்கு கவனசிதறலின் மைய்யப்புள்ளியாக இருப்பது தொலைபேசி தான் என்பது அவரது எண்ணம். அதை எப்படியாவது தக்க சமயத்தில் நன்கு பிள்ளைக்கு புரிய வைக்க வேண்டும் என்று அம்மாவும் காத்திருந்தார்.

நாம் வேண்டி காத்திருந்த சமய சந்தர்ப்பங்களை நம் நேர்மறை  எண்ணவோட்டங்களே உருவாக்குகின்றன என்பதை ஊர்ஜிதப்படுத்துவது போலவே அரங்கேறியது அன்றைய சம்பவம்.

ஆழினியின் ஒரு வயது தம்பிக்கு மொட்டை போடுவதற்காக ஆழினியின் தாத்தா பாட்டி அம்மா அப்பா உட்பட அனைவரும் திருப்பதிக்கு பயணத்திற்கு ஒரு வாடகை ஜீப் வண்டியில் அதிகாலையிலே தயாரானார்கள். வைகறை விழிப்பு, மலையோர காற்று, சில்லென்ற வானிலை, அதிகாலை தேநீர் என அவர்களது பயணம் ரம்மியமாக தொடங்கியது. 

பொதுவாக திருப்பதி செல்லும் பாதை வளைவு நெளிவானது. மலை அடிவாரத்திலிருந்து மேல் திருப்பதி என்னும் உச்சிமலைக்கு செல்ல ஏழு சிறுசிறு மலைகளை கடந்து போக வேண்டும். சாலையின் இருபக்கமும் அபாயகரமான ஆனால் கண்ணை பறிக்கும் இயற்கையெழில் மிகுந்த வளைவுகள். புதுவிதமான காட்சிகளும், வண்டி பயணமும் ஆழினியின் குட்டி தம்பிக்கு மிக பிடித்திருந்தது போல . வண்டியின் இருபுறமும் அங்குமிங்கும் வேடிக்கைபார்த்தபடி உற்சாகத்தில்  அலைபாய்ந்தன  அவன் கண்கள். கொஞ்ச நேரம் அவனது செய்கைகளை பார்த்தபடியே  வண்டியில் உள்ள அனைவரும்  பயணத்தை ரசித்துக்கொண்டிருந்தனர். .ஆழினிக்கு சொல்லவே வேண்டாம் எட்டி பார்த்தால் கடந்து வந்த உயரமும்,  அண்ணாந்து பார்த்தால் சுற்றியுள்ள மலைகளின் அழகும், ஆங்காங்கே கண்களுக்கு தென்பட்டு கண்ணாமூச்சி காட்டி மறையும் வண்ண மான்களும்  காண்பவர் மனதை கொள்ளைக்கொள்ளும் மலையழகும் அவளை கட்டிப்போட்டன. வண்டியின் ஜன்னலோரம் அமர்ந்துக்கொண்டு அவள் கண்ணெதிரே விரிந்துக்கொண்டிருந்த இயற்கை காட்சிகளை கண்கொட்டாமல் ரசித்துக்கொண்டிருந்தாள். கூடவே சொடக் சொடக்கென்று தொலைபேசியில் படமும் எடுத்துக்கொண்டிருந்தாள்.

‘பாப்பா நல்லா வேடிக்கை பாக்கலாம்ல.. இப்போ கைல கவச குண்டலம் மாதிரி அது தேவையா? என்றார்  அம்மா   தொலைபேசியை பார்த்து.

‘ஆரம்பிச்சிடீங்களா, அம்மா?! இந்த இடம் எவ்வளோ அழகா இருக்கு பாருங்கம்மா .. என் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் இதை காண்பிக்க வேண்டாமாம்மா.. இதுலதான்ம்மா நான் படம் எடுத்துட்டு இருக்கேன் என்று சலிப்புடன் பதிலளித்தாள் ஆழினி.

‘எடுத்தது வர போதும்.. இப்போ நீ வேடிக்கை பாரு!’ என்றபடி தொலைபேசியை வாங்கி தன் கைப்பைக்கிணற்றுக்குள் போட்டார் அம்மா.

‘கஷ்டம்ம்மா உன்கூட..!’ என்றபடி ஜன்னல் பக்கம் முகம் வைத்துக்கொண்டு மீண்டும் மலையழகில் தன் மனம் லயித்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. மலையோர பயணக்களைப்பில் ஒருபுறம் அப்பாவும் தாத்தாவும் சற்று அயர்ந்துபோய் கொண்டுவந்திருந்த பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள் . இன்னொரு புறம் அம்மாவும் பாட்டியும் உற்சாகத்தில் இன்னமும் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த குட்டி தம்பியை சிரமப்பட்டு இறக்கிக்கொண்டிருந்தார்கள். ஆழினியும் இவர்களை வேடிக்கை பார்த்தபடியே இறங்கினாள். அனைவரும் இறங்கினதும் வண்டி வேறு இடம் நோக்கி சென்றது. உடனே  அடுத்து தாங்கள் போக வேண்டிய இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக ஆயத்தமானார்கள் அப்பாவும் தாத்தாவும்.

‘ஆழினி.. நானும் தாத்தாவும் பக்கத்துல எங்க மொட்டை போடுவாங்கன்னு விசாரிச்சுட்டு வந்துடறோம். நீங்க எல்லாரும் அதோ அந்த கடைப்பக்கம் நிழலா இருக்குல்ல.. அங்க போய் உட்காந்திருங்க..என்றார் அப்பா.

‘நானும் உங்கக்கூட வரேனேப்பா?!’

‘வேண்டாம் பாப்பா. தவிர, நீ இங்க கூட இருந்தா அம்மாவுக்கும் பாட்டிக்கும் உதவியா இருக்கும்.. பாரு உன் தம்பி என்ன சேட்டை பண்ணிக்கிட்டு இருக்கான்னு ‘, என்று அப்பா கண்ணைக்காட்டியபோது ஆழினியின் தம்பி எப்படியாவது அம்மாவின் பிடியில் இருந்து விலகி கூட்டத்தில் இறங்கி நடக்க அடம் பிடித்துக்கொண்டிருந்தான். ஆழினிக்கு அவன் அடிக்கும் கொட்டத்தை பார்த்ததும் சிரிப்பு வந்தது.

சரிப்பா என்றாள்

அம்மா போன் உங்கிட்ட இருக்குல்ல?! என்று அப்பா ‘ஏதாச்சும்ன்னா அதுல தான் கூப்பிடுவேன்..சத்தமா வெச்சுக்கோ’ என்றார்

‘அதுதான் அவ கூடவே இருக்கே!’ என்று கிடைத்த இடைவெளியில் சடக்கென தன் கவலையை பதிவு செய்தார் அம்மா.

‘சரி சரி உங்க பஞ்சாயத்து அப்புறம். நாங்க போய்  விசாரிச்சிட்டு வரோம். என்றபடி கிளம்பினார்கள் அப்பாவும் தாத்தாவும்.

அவர்கள் புறப்பட்டதும் அம்மா தம்பியை தூக்கிக்கொள்ள ஆழினியும் பாட்டியும் கைப்பிடித்தபடி அப்பா சொன்ன கடை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

‘அம்மா சுத்தி எவ்வளோ கடை இருக்கு பாத்தியாம்மா ?!’

‘ஆமா ஆழினி . நம்மைப்போல இங்க நிறைய வெளியூர்க்கறாங்க தினம்தினம் வருவாங்க. அவங்கள கவரணும்ங்கிறதுக்காகவே நிறைய கடைகள்..!’

‘நாம ஏதாவது வாங்கிட்டு போலாமாம்மா ?!’

‘கண்டிப்பா வாங்கலாம். உன் தம்பிக்கு மொட்டை போட்டதும் நமக்கு வேறென்ன வேலை!’ என்றதும் ஆழினிக்கு உற்சாகம் தாங்கவில்லை. உடனே என்னவெல்லாம் வாங்கலாம் என்ற மனக்கணக்கை ஆரம்பித்துவிட்டாள். அந்த நேரம் தான் அவள் கண்ணில் குட்டி தம்பியின் கால்களில் இருந்த ஒரே ஒரு செருப்பை கவனித்தாள்.

அம்மா தம்பியோட இன்னொரு  செருப்பு எங்க? என்றாள்

இதோ இங்க என்று அம்மா பழக்கவாகில் முதுகை துழாவினார். அப்போது தான் தம்பிக்கென எடுத்து வந்த பையை காணவில்லை என்பதை உணர்ந்ததும் அவருக்கு தூக்கிவாரிப்போட்டது.

‘அச்சச்சோ ஆழி.. பையை காணோம்.. வண்டியிலேயே விட்டுட்டோம் போல!’ என்றார்.

‘என்னம்மா கொஞ்சம் கவனமா இருக்கக்கூடாதா?!’

‘இல்லம்மா இவன் சேட்டைதாங்கலன்னு இவனை பிடிச்சிகிட்டே வந்தேன்ல.. பை இடைஞ்சலா இருக்குன்னு ட்ரைவர் சீட் பக்கத்துல போட்டேன்.. அப்பா அதை எடுக்கல போல!’ என்றார்.

‘அப்பா அதை உடனே ட்ரைவர் சீட்டுக்கு அடியில வெச்சாங்கம்மா.. கிளம்பும்போது எடுத்துக்கலாம்ன்னு இருந்தாங்க.. நாமெல்லாரும் இறங்குற அவசரத்துல அதை எடுக்க மறந்துட்டோம்!’ என்றாள் ஆழினி .

‘ஹயோ.. தம்பிக்கு தேவையான பால், மாத்துதுணி , டையப்பர்ன்னு அத்தனையும் அந்த பைலை தான இருக்கு. முக்கியமா  என் பர்ஸ்  அதுல தான்  இருக்கு. பொருள் துணி காசு போனாக்கூட பரவாயில்லையே.. ஆனா நம்ம முக்கியமான சுயவிவர அட்டையெல்லாம் போச்சுன்னா ?! என்றபடி புலம்ப ஆரம்பித்தார் அம்மா. பாட்டியும் செய்வதறியாது திகைத்தார். தம்பியோ என்னவோ நடக்கிறது என்பதைப்போல அவன் போக்கில்  அவதானித்துக்கொண்டிருந்தான்.

நிலைமையின் தீவிரத்தை உடனே உணர்ந்த ஆழினி  மட்டும் சற்றே சுதாரித்தாள்.

‘அம்மா புலம்பாதீங்க.. முதல்ல அப்பாவுக்கு போன போடுவோம்.. விஷயத்தை சொல்லுவோம்.. !’ என்றாள்.

‘ஆமால்ல!’ என்றபடி அம்மா உடனே போனில் அப்பாவுக்கு தெரிவித்தார்.

அப்பாவும் தாத்தாவும் மறுமுனையில் பரப்பரப்பானார்கள் என்பது அவர்களின் குரலிலேயே தெரிந்தது.

‘பதட்டப்படாதீங்க.. இறங்குன இடத்துல போய்  முதல்ல பாப்போம்’ என்று போனை வைத்தார்கள்.

‘இப்போ என்னம்மா பண்றது ?!’ என்றார் பாட்டி.

‘அவங்க ஒரு பக்கம் தேடறாங்கம்மா . நாம அதோ அந்த மெயின் ரோட்டுக்கு பக்கத்துல நின்னு முடிஞ்சவரை போக வர்ற வண்டியை அலசுவோம்..!’ என்று சோகமாக சொன்னார் அம்மா.

‘இதெல்லாம் நடக்கற காரியமா.. ஒரு நிமிஷத்துக்கு பத்து பதினைஞ்சு வண்டிங்க ஒரே கலர்ல வருது போகுது.  இதுல நம்ம வந்த வண்டிய எப்படிம்மா அலசுறது.. ? தவித்தார் பாட்டி.

‘பாட்டி கவலைப்படாதீங்க.. நான் வண்டி நம்பரை நோட் பண்ணிருக்கேன்.. !’ என்றாள்  ஆழினி.

‘என்னது ?!’ ஆச்சரியமானார் அம்மா.

‘ஆமாம்ம்மா.. நாம ஏறினதுமே வண்டி நம்பரை மனப்பாடம் பண்ணிக்கிட்டேன்.. அது மட்டும்மில்ல.. வண்டி வெளில வெள்ளை. உள்ள நீலக்கலர் சீட். முன்னாடி ஒரு அடையாளமா ஒரு சின்ன பூமாலை ஆனா டாஷ்போர்டுல எதுவுமே இல்ல.. இதெல்லாம் பாத்து வெச்சுருக்கேன்.. ஒரு நிமிஷம் இரு..’ என்றபடி

உடனே அப்பாவுக்கு போனை போட்டு தனக்கு தெரிந்த விவரத்தை சொன்னாள் ஆழினி.

‘அப்பா, வண்டி நம்பர் இது தான் XX  3456YD . முதல்ல உங்களுக்கு போன் செஞ்சப்போ பதட்டத்துல சொல்ல வரல. இப்போ பாட்டி எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு கேட்டாங்கல்ல உடனே ஞாபகம் வந்திருச்சு.. இதை வெச்சு கண்டுபிடிச்சிடலாம்லப்ப்பா?!

‘சூப்பர்  ஆழினிகுட்டி எங்க யாருக்குமே தோணாததை நீ பண்ணியிருக்க.. மலை அடிவார ஸ்டான்டுல பிடிச்ச வாடகை வண்டி.. ட்ரைவர் ஃபோன் நம்பர் கூட வாங்கலயே! இத்தனை வண்டி போகுதே எப்படி தேடுறதுன்னு நாங்க மலைச்சுப்போயிட்டோம். இதை வெச்சு இன்னும் சுலபமா கண்டுபிடிக்கலாம்.. ! நான் பாத்துட்டு உடனே கூப்பிடறேன்.. நீங்க பத்திரமா இருங்க.. அம்மாவை பதட்டப்படவேணாம்ன்னு சொல்லு’ என்றார் அப்பா.

சரிப்பா’ என்றபடி அப்பா சொன்ன விவரத்தை அம்மாவுக்கும் பாட்டிக்கும் சொன்னவுடன் அவர்கள் கொஞ்சம் ஆசுவாசமானார்கள். அம்மாவுக்கு இன்னும் ஆச்சரியம் விலகவில்லை.

டீ ஆழினி .. அதெப்படிடீ வண்டி நம்பரை நோட் பண்ணிக்கனும்ன்னு உனக்கு தோணுச்சு..!’

‘அதுவாம்மா , வர்ற வழியில படம் எடுத்துட்டே வந்தேன்னா.. அப்போ நீகூட போதும்.. வேடிக்கைப்பாருன்னு  சொன்னியே.. அப்போ தான் போர் அடிக்குதேன்னு ஒன்னொன்னு மனசுல மனப்பாடம் பன்னிட்டு இருந்தேன்.. அது இவ்வளவு சீக்கிரம் உதவும்ன்னு நினைக்கல..!’

‘பாத்தியா .. போன நான் மூடி வெச்சதால நீ எவ்வளோ புத்திசாலித்தனமா உன் நேரத்தை உபயோகிச்சிருக்க.. !’ என்று கட்டியணைத்து முத்தமிட்டார் அம்மா.

‘ஓ நீ அப்படி வரியா, சரிதான்ம்மா சரிதான்!’ என்றபடி அம்மாவை செல்லமாக வம்புக்கு இழுத்தாள் ஆழினி.

‘ஆமா ஆழினிகுட்டி.. அம்மா சொல்றது சரிதான்.. உன்னோட கவனத்தோட பலத்த நீனே இன்னைக்கு தெரிஞ்சுக்கிட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.. இந்த போன் எல்லாம் நம்ம அவசரத்துக்கு தான் . அவசியத்துக்குன்னு நாமளே மாத்தினதால தான் இன்னைக்கு யாராலயும் எதையும் சரியா ஞாபகம் வெச்சுக்க முடியறதில்லே.. ஏன் எனக்கே உங்க தாத்தாவோட போன் நம்பர் கடைசி நாலு நம்பர் தானே தெரியுது . முன்னெல்லாம் அப்படி இல்ல தெரியுமா?! என்றார் பாட்டி.

‘ஆமா பாட்டி அப்பாகூட  சொல்லியிருக்காங்க.. முக்கியமான எல்லாரோட போன் நம்பரையும்  ஞாபகம் வெச்சுப்பாங்களாமே! அது மட்டுமில்ல ஒரு கடைக்கு போனாக்கூட மொத்த பில்லையும்  அப்பாவே சட்டுன்னு கூட்டி சொல்லிடுவாங்கலாமே! 

‘இந்த போன் வந்தாலும் வந்தது.. எல்லாரும் முழு சோம்பேறி ஆகிட்டோம்.. எல்லார் கவனத்தையும் அது வாங்கிட்டு நம்மள தேமேன்னு ஆகிடுது.. என்று பாட்டி சொன்னபோது அப்பா போன் அடித்தார்

போனை எடுத்த மாத்திரத்தில் அம்மாவின் முகத்தில் சிரிப்புக்களை

என்னமா வண்டி கிடைச்சுடுச்சா?! என்று ஆர்வமாக கேட்டாள் ஆழினி

அம்மா தன்  பெருவிரலை உயர காண்பித்தார். பாட்டிக்கும் ஆழினிக்கு  சந்தோஷம் தாங்கவில்லை. உற்சாகத்தில் இந்தமுறை பாட்டி ஆழினியை ஆரத்தழுவிக்கொண்டார்.

‘சரி நீங்க சீக்கிரம் வாங்க’ என்றபடி போனை வைத்த அம்மாவும் ஆழினியை அன்போடு தழுவினார்.

ஆழி.. உன்னால தான் வண்டியை ரொம்ப சுலபமா கண்டுபிடிக்க முடிஞ்சுதாம். நாம இறங்கினோம்ல அதுக்கு பக்கத்து தெருவுல வண்டி நின்னுக்கிட்டு இருந்துச்சாம். ட்ரைவர் வண்டியில இருந்து நம்மள இறக்கினதும் டீ சாப்பிட அங்கே நிப்பாட்டியிருக்கார். நீ சொன்ன நம்பரப்படியே தேடிட்டு போன அப்பா தாத்தா கண்ணுலயும் வண்டி பட்டுடுச்சு.. டிரைவர்கிட்ட விஷயத்தை சொல்லி பையோட தாத்தாவும் அப்பாவும் வந்துக்கிட்டு இருக்காங்க  !’ உற்சாகம் குறையாமல் நடந்ததை விவரித்தார் அம்மா.

‘அப்பாடி! பை கிடைச்சிருச்சு.. யேய்  என்று தம்பியை தூக்கி உற்சாகமாக சுற்றினாள் ஆழினி .

‘ஆழினி  குட்டி.. உன் கவனத்துக்கு பரிசு கொடுத்தே ஆகணும். உனக்கு பிடிச்சதை கேளு.. !’ என்றார் அம்மா.

‘அப்படியா.. அப்போ இந்த போன்கேஸ்  கொஞ்சம் பழசாகிருச்சு.. கொஞ்சம் புதுசா.. வாங்கி கொடுத்தீங்கன்னா ?’ என்றபடி அவள் வம்பு இழுக்க, “என்னது என்ன சொன்ன ?! “ என்றபடி செல்லமாக அவளது கன்னத்தை கிள்ளினார் அம்மா..

‘ஐயோ அம்மா.. சும்மா சொன்னேன்மா.. நீ சொன்னது நிஜம் தான். கொஞ்ச நேரம் போன் இல்லாத போதே என் நேரத்தை இவ்வளவு உபயோகமா என்னால மாத்தமுடியும்ன்னா அப்போ மீதி நேரம் எனக்கு பிடிச்ச நிறைய விஷயங்கள் பண்ணலாம்ன்னு எனக்கே தோணுதும்மா.. !’ என்று ஆழினி சொன்னதும் தொல்லைப்பேசி ஏற்படுத்தும் கவனசிதறலுக்கு தீர்வாக ஒரு நல்ல சந்தர்ப்பம் அமைந்தை எண்ணி அம்மாவுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *