ஆனியின் அன்புசூழ் உலகு – 13

ஆனி பிக்னிக் சென்ற பிறகு, மரிலா மாத்யூவிடம் தன் உடை ஊசி (brooch)திரும்பக் கிடைத்த விபரத்தைத் தெரிவித்தார்.

“நான் செய்தது தவறு என்று ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். தான் எடுத்துச் சென்று தொலைத்ததாக அவள் சொன்ன கதையை நினைத்தால் சிரிப்பு வருகிறது. ஆனால் அவள் அப்படிச் சொன்னதற்கு நான் தான் காரணம். அந்தக் குழந்தையைச் சில சமயம் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவள் நல்ல குழந்தையாக மாறிவிடுவாள் என்று நம்புகிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவள் இருந்தால் எந்த வீடும் உற்சாகமின்றி மந்தமாக இருக்காது” என்றார் மரிலா. 

ஆனி அன்று இரவு பிக்னிக் முடிந்து களைத்துப் போய் வீட்டுக்குத் திரும்பினாள். மரிலாவிடம் பிக்னிக் அனுபவங்களை மகிழ்ச்சியுடன் விவரித்தாள். தான் சுவைத்த ஐஸ்கிரீம் குறித்து விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றாள்.

ஆனி செப்டம்பர் முதல் பள்ளி செல்ல ஆரம்பித்தாள். அவன்லேவில் இருந்த அந்த வெள்ளை நிறப் பள்ளியின் மேற்கூரை தாழ்வாகவும் சன்னல்கள் அகலமாகவும் இருந்தன. உள்ளே இழுத்து மூடக்கூடிய டிராயர்களுடன் கூடிய பழங்கால மேசைகள் இருந்தன. மேசையின் மீது மூன்று தலைமுறை பள்ளிக் குழந்தைகளின் சித்திர எழுத்துகளும், பெயர்களின் முதல் எழுத்துகளும் பதிவாகி இருந்தன. பள்ளியின் பின்புறம் மரங்கள் அடர்ந்த பகுதியும் ஓர் ஓடையும் இருந்தன.

‘ஆனி மற்ற குழந்தைகளுடன் எப்படிப் பழகுவாள்? வகுப்பு நடக்கும் போது வாயை மூடிக்கொண்டு எப்படி இருப்பாள்?’ என்று மரிலா யோசித்தார். ஆனால் மரிலா பயந்தது போல இல்லாமல் ஆனி பள்ளியில் இருந்து உற்சாகமாக வீட்டுக்குத் திரும்பினாள். அவளுக்குப் பள்ளி பிடித்திருந்தது. மூன்று வாரம் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை.

பெஞ்சில் டயானா பக்கத்தில் தான் உட்கார்ந்து இருப்பது பற்றியும், உணவு இடைவேளையின் போது தோழிகளுடன் விளையாடுவது பற்றியும் ஆனி மகிழ்ச்சியாக மரிலாவிடம் தெரிவித்தாள். ஒரு நாள் ஆனியும், டயானாவும் பள்ளிக்கு நடந்து சென்ற போது, டயானா கில்பர்ட் பிளைத் என்பவனைப் பற்றிச் சொன்னாள்.

“இன்று முதல் கில்பர்ட் வகுப்புக்கு வருவான். கோடை விடுமுறைக்கு ஊருக்குப் போய் இருந்தான். சனிக்கிழமை தான் வந்தான். அவன் பார்க்க அழகாக இருப்பான். ஆனால் பெண்களை ரொம்பக் கேலி பண்ணுவான்” என்றாள் டயானா.

வகுப்பில் டயானா கில்பர்ட் உட்கார்ந்து இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டிக் காதில் கிசுகிசுத்தாள். “உனக்கு வலப்பக்கம் உட்கார்ந்து இருக்கான் பாரு. அவன் தான் கில்பர்ட். அவனைப் பார்த்தால் அழகா இருக்கான்னு நீயும் ஒத்துக்குவே” என்றாள் டயானா.    

ஆனி அவனைப் பார்த்தாள். அப்போது அவன் திருட்டுத்தனமாக அவன் முன்னால் உட்கார்ந்து இருந்த ரூபியின் நீண்ட சடைப் பின்னலைப் பின் இருக்கையோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு இருந்தான். அவன் உயரமாகவும் பிரெளன் நிறச் சுருள்முடியுடனும் இருந்தான். கண்களில் குறும்புத்தனமும் உதடுகளில் கிண்டல் கலந்த சிரிப்பும் நிறைந்து இருந்தன.

அப்போது ஆசிரியரிடம் ஒரு கணக்கைக் காட்ட எழுந்த ரூபி, சடை இருக்கையுடன் கட்டப்பட்டு இருந்ததால் அப்படியே இருக்கையில் பொத்தென்று விழுந்தாள். வேரிலிருந்து முடியை இழுத்துப் பிய்த்தது போன்ற வலி தாங்காமல் ரூபி அழுதாள். எல்லாரும் அவளைப் பார்த்தனர். கில்பர்ட் நல்ல பிள்ளை போல் வரலாறு புத்தகத்தைப் படித்தான். ஆனி அவனைப் பார்த்த போது கண்ணடித்தான்.

“உன் கில்பர்ட் அழகாய்த் தான் இருக்கிறான். அவன் ரொம்பத் தைரியசாலி. ஆனால் தெரியாத பெண்ணைப் பார்த்துக் கண்ணடிப்பது நல்ல செயல் அல்ல” என்றாள் ஆனி டயானாவிடம்.

அப்போது ஆசிரியர் ஃபிலிப்ஸ் வகுப்பின் பின் பக்கத்தில் அமர்ந்து இருந்த ப்ரிஸி ஆண்ட்ரூஸ் என்ற பெண்ணுக்கு ஓர் அல்ஜீப்ரா கணக்கைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.  மற்ற மாணவர்கள் சிலேட்டில் ஓவியங்கள் வரைந்து கொண்டும், பச்சை ஆப்பிள் தின்று கொண்டும் இருந்தார்கள். அப்போது கில்பர்ட் ஆனியின் கவனத்தைக் கவர வேண்டும் என்று சில முயற்சிகளில் ஈடுபட்டான். ஆனால் ஆனி அவனைக் கவனிக்கவே இல்லை. மேசை மீது ஊன்றிய கைகளில் கன்னங்களை வைத்துக்கொண்டு சன்னல் வழியாகத் தெரிந்த நீலநிற ஏரியின் பிரகாசித்த நீரைப் பார்த்தபடி ஆனி கற்பனைக் கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

ஆனி தன்னைப் பார்க்க வேண்டும் என்று கில்பர்ட் செய்த முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. இதுவரை எந்தப் பெண்ணிடமும் அவன் முயற்சி தோற்றதில்லை. சிவப்பு நிற முடியுடனும் அவன்லே பள்ளியில் எந்தப் பெண்ணிடமும் இல்லாத பெரிய கண்களுடனும் இருந்த ஆனி தன்னைப்  பார்த்தே ஆகவேண்டும் என்று அவன் நினைத்தான். எனவே கில்பர்ட் அவள் பின்னால் வந்து நின்று சடையின் கடைசி முனையைக் கையால் பிடித்து இழுத்தான். அவள் காதில் விழும்படியாக “கேரட் கேரட்” என்றான். சட்டென்று ஆனி அவனைக் கோபத்துடன் திரும்பிப் பார்த்தாள்.  

அவள் உடனே இருக்கையை விட்டு வேகமாக எழுந்தாள். “நீ ரொம்பக் கெட்டவன்! இப்படிச் சொல்ல எவ்வளவு தைரியம் உனக்கு?” என்று சொன்னபடி தன் சிலேட்டால் அவன் மண்டையில் ஓங்கி அடித்தாள். சிலேட் உடைந்துவிட்டது. வகுப்பே பயத்தில் உறைந்தது. ஆசிரியர் ஃபிலிப்ஸ் ஆனியிடம் வந்து அவள் தோளை அழுத்தமாகப் பிடித்தார். 

“ஆனி ஷெர்லி! என்ன இது?” என்றார் கோபத்துடன். அவள் பதில் பேசவில்லை.

“என் மேல் தான் சார் தவறு. நான் அவளைக் கேலி செய்தேன்” என்றான் கில்பர்ட். ஆனால் ஆசிரியர் அவன் சொன்னதைக் காதில் வாங்கவில்லை.  

“என் மாணவியிடம் இந்த அளவு கோபமும் பழி வாங்கும் உணர்வும் இருப்பதை நினைத்து வருந்துகிறேன். ஆனி! கரும்பலகை முன்னால் போய் இன்று பிற்பகல் முழுவதும் நில்” என்றார் ஆசிரியர்.

ஆனி வெளுத்துப் போன முகத்துடன் போய்க் கரும்பலகை முன்னால் நின்றாள். “ஆனி ஷெர்லிக்கு மோசமான முன்கோபம் இருக்கிறது. அவள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கற்க வேண்டும்” என்று அவள் தலைக்கு மேல் கரும்பலகையில் சாக்பீஸால் ஆசிரியர் எழுதினார். வாசிக்கத் தெரியாத குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில் அதைச் சத்தமாக வாசித்தும் காட்டினார்.

அன்று பிற்பகல் முழுதும் ஆனி அங்கே நின்றாள். அவள் அழவும் இல்லை. தலையைத் தொங்கப்போடவும் இல்லை. அவள் மனதில் கோபம் இன்னும் கொதி நிலையிலேயே இருந்தது. கில்பர்ட்டை அவள் பார்க்கவே இல்லை. ‘இனி அவனைப் பார்க்கவே மாட்டேன்; அவனுடன் பேசவே மாட்டேன்’ என்று முடிவு செய்தாள். 

அன்று பள்ளி முடிந்து அவள் வாசலுக்கு வந்த போது கில்பர்ட் அவளிடம் வந்தான்.

“ஆனி! உன் முடியைக் கேலி செய்ததற்கு மிகவும் வருந்துகிறேன். அதற்காக எப்பவும் என் மேல் கோபமாக இருக்காதே” என்றான்.

ஆனி அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் சொன்னதைக் காதில் வாங்கவும் இல்லை.

“கில்பெர்ட்டை நான் என்றுமே மன்னிக்க மாட்டேன்” என்றாள் ஆனி டயானாவிடம்.

‘கில்பர்ட் இப்படி என்னிடம் மன்னிப்புக் கேட்டால், என்னால் அதை நிராகரிக்க முடியாது’ என்று டயானா நினைத்தாள்.

“கில்பர்ட் உன் முடியைக் கேலி செய்ததைப் பொருட்படுத்தாதே ஆனி. அவன் எல்லாப் பெண்களையுமே கேலி செய்வான். என் முடி கருப்பாக இருக்கிறது என்பதற்காக 12 முறையாவது ‘காக்கா’ என்று என்னைக் கூப்பிட்டுச் சிரித்திருக்கிறான். அவன் இதற்கு முன் யாரிடமும் மன்னிப்புக் கேட்டு நான் பார்த்ததே இல்லை” என்றாள் டயானா.

“காக்கா என்று கூப்பிடுவதற்கும், கேரட் என்று கூப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்னால் தாங்க முடியாத அளவுக்கு அவன் என் உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்திவிட்டான் டயானா” என்றாள் ஆனி. 

மதிய உணவு இடைவேளையில் பள்ளி மாணவர்கள் பக்கத்தில் இருந்த தோப்புக்குச் செல்வது வழக்கம். அவர்கள் அங்கே இருந்த ஸ்புரூஸ் (spruce) என்ற ஊசியிலை மரங்களில் இருந்து பிசின் சேகரிப்பார்கள். (அக்காலத்தில் சூயிங்கம் போல அதை மெல்வார்களாம்) மரம் மேலிருந்து பார்த்தால் ஆசிரியர் வீடு தெரியும். ஆசிரியர் வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டார் என்றால் மாணவர்கள் தோப்பிலிருந்து தலைதெறிக்க வகுப்புக்கு ஓடி வந்துவிடுவார்கள். சில சமயம் தாமதமாக வந்து, ஆசிரியரிடம் மாட்டிக் கொள்வதும் உண்டு.

ஆனியைக் கரும்பலகை முன்னால் நிற்கச் சொன்ன அடுத்த நாள் “நான் வரும் போது எல்லாரும் அவரவர் இருக்கையில் இருக்க வேண்டும்; தாமதமாக வருபவர்களுக்குத் தண்டனை உண்டு” என்று ஆசிரியர் அறிவித்தார்.

அன்றும் வழக்கம் போல் மாணவர்கள் அந்தத் தோப்புக்குச் சென்றனர். ஜிம்மி குளோவர் என்ற பையன் “மாஸ்டர் வருகிறார்” என்று சொன்னவுடன், கீழே நின்றிருந்த பெண்கள் படுவேகமாகப் பள்ளிக்குத் திரும்பிவிட்டார்கள். மரத்திலிருந்து இறங்கி ஓடி வர பையன்களுக்குச் சற்று நேரம் பிடித்தது. எனவே அவர்களில் சிலர் தாமதமாக வகுப்புக்கு வந்து சேர்ந்தனர். ஆனி அந்தத் தோப்பின் கடைசியில் சில அல்லி மலர்களைப் பறித்துக் கையில் வைத்துக் கொண்டு, மெல்லிய குரலில் பாட்டுப் பாடியபடி அலைந்து கொண்டிருந்தாள். எனவே ஆனி வேகமாக ஓடக் கூடியவள் தான் என்றாலும் தொலைவில் இருந்ததால் கடைசியாகத் தான் அவளால் வந்து சேர முடிந்தது. அதற்குள் ஆசிரியர் வந்துவிட்டார்.

ஆசிரியர் ஃபிலிப்ஸ் தாம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தாமதமாக வந்தவர்களுக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று நினைத்தார். 12 மாணவர்களுக்குத் தண்டனை கொடுக்க அவர் விரும்பவில்லை. அப்போது தான் மூச்சிரைக்க ஓடி வந்து இருக்கையில் பொத்தென்று அமர்ந்த ஆனியைப் பலிகடாவாக்க அவர் நினைத்தார். ஒரு காதில் அவள் எடுக்க மறந்த ஓர் அல்லிப்பூ தொங்கிக்கொண்டிருந்தது.  

“ஆனி ஷெர்லி! உனக்குப் பையன்களின் சகவாசம் அதிகம் பிடிக்கும் என்று தெரிகிறது. எனவே இன்று பிற்பகல் உன் விருப்பத்தைப் பூர்த்தி செய்யலாம். உன் முடியில் இருக்கும் அல்லிப்பூவை நீக்கிவிட்டு, கில்பர்ட் பக்கத்தில் உட்கார்” என்றார் நக்கலாக. 

மற்ற பையன்கள் ரகசியமாகச் சிரித்தார்கள். டயானாவுக்கு ஆனியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவள் முடியில் மாட்டியிருந்த பூவை எடுத்து விட்டாள் டயானா. கல் போல் இறுகிய உணர்ச்சியற்ற முகத்துடன் ஆசிரியரைப் பார்த்தாள் ஆனி. 

“நான் சொன்னது காதில் விழவில்லையா ஆனி?” கடுமையான குரலில் ஆசிரியர் கேட்டார்.

“கேட்டது சார்!” மெல்லிய குரலில் சொன்னாள் ஆனி. “ஆனால் உண்மையாகவே செய்யச் சொல்கிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை” என்றாள். 

“உண்மையாகத் தான் சொன்னேன்” என்று வலியுறுத்திச் சொன்னார் ஆசிரியர்.  “உடனே நான் சொன்னதைச் செய்” என்றார்.

அடுத்த நிமிடம் ஆனி எழுந்து கில்பர்ட் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள். மேசை மீது குனிந்து தன் கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

தாமதமாக வந்த 12 மாணவர்களை விட்டுவிட்டுத் தன்னை மட்டும் தனிமைப்படுத்தி ஆசிரியர் தண்டனை கொடுத்ததையும் பையன்களுக்கு மத்தியில் உட்கார வைத்ததையும் நினைத்து “இனி எல்லாம் முடிந்துவிட்டது” என ஆனி மனம் புழுங்கினாள். எல்லாவற்றையும் விட மோசமாகக் கேலி செய்து உணர்வுகளைப் புண்படுத்திய கில்பர்ட் பக்கத்தில் உட்காரவைத்தது அவளைக் கடுமையாகப் பாதித்தது. இந்த அவமானத்தை இனிமேலும் தாங்க முடியாது என்று நினைத்தவள், ஒரு முடிவுக்கு வந்தாள். 

Anne of Green Gables –

(Lucy Maud Montgomery)

தமிழில் – ஞா.கலையரசி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *