மந்திர சக்திகள்

குட்டி பீமாவுக்குத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தும்மலும் இருமலும் அவனைப் பாடாய்ப்படுத்தியது. இந்த ஆண்டு மூன்றாவது தடவையாக அவனுக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. அதுவும் இந்த கடந்த ஐந்து மாதங்களுக்குள்ளாக.

எப்போது பார்த்தாலும் கண்களில் நீர். படுத்தாலே இருமல். தலையும் பாரமாக இருந்தது. சரியாக அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அம்மா அவனுக்கு வெந்நீர் வைத்துத் தந்தார். ஆவி பிடிக்கக் கற்றுத் தந்தார். அப்பா நிறைய தண்ணீர் குடி, இளநீர் வாங்கி வந்தேன், அதை அருந்து என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

“அம்மா ஆவி பிடிச்சாலும் மறுபடியும் மூக்கில் தண்ணீர் ஒழுகுது. அப்புறம் வீணா ஏன் பிடிக்கணும்?” என்றான் பீமா.

“கண்ணா! இது வைரஸ் கிருமி. வைரஸோட ஆதிக்கம் உடம்பில் இருக்கும் வரை அதை வெளியேற்றுவதற்காக உடம்பு போராடும். அதனால்தான் இந்த தும்மல், இருமல் எல்லாமே. இவையெல்லாம் நம்ம உடம்பு இருக்கக்கூடிய மந்திர சக்திகள். ஒருவேளை தும்மல், இருமல் எல்லாம் இல்லைன்னு வச்சுக்கோ. இந்த வைரஸ் உடம்புக்குள்ளேயே இருந்து பெருகிக்கொண்டிருக்கும். இப்போ மூக்கு, தொண்டையோட நின்னுக்கிட்ட கிருமி நுரையீரலுக்குள்ள போகவும் ரத்தத்தில் கலக்கவும் வாய்ப்பு இருக்கு”

“தும்மலும் இருமலும் ஜலதோஷத்தை வெளி விரட்டிடாதா? ஏன் ஆவி பிடிக்கணும்?”

“நம்ம மூக்குடன் தொடர்புடைய நீர்ப்பைகள் கன்னத்தின் இரு பக்கத்திலும், நெற்றிப்புறங்களிலும், கண்களுக்குப் பின்புறமாகவும் இருக்கு. இதுக்கெல்லாம் சைனஸ் என்று பெயர். மூக்குல ஜலதோஷம் பிடிக்கும் பொழுது அங்கேயும் நீர் கோர்த்துக்கும். அதிலிருந்து நீரை வெளியேற்றுவதுக்காகத் தான் ஆவி பிடிக்கிறோம்”

“வெந்நீர் வச்சு தொண்டையைக் கொப்பளிக்கச் சொல்றீங்களே, அது ஏன்?”

Courtesy – Gemini AI

“அது உனக்கு தற்காலிகமா ஒரு நிம்மதியான உணர்வைக் கொடுக்கும். கொஞ்சம் நல்லா உணவை விழுங்க முடியும். தொண்டையில் இருக்கிற சில கிருமிகளைக் கொல்லவும், வெளியேற்றவும் உதவும்”

“ஆனா எங்க கிளாஸ்ல இருக்குற மீனா ரொம்ப பாவம்மா.. அவளுக்கு வருஷம் பூரா தும்மல் இருக்கு. அது ஏதோ வித்தியாசமான வைரஸ்னு நினைக்கிறேன்”

“வருஷம் பூரா தும்மல் இருந்தா அது வைரஸா இருக்க வாய்ப்பில்ல பீமா! அலர்ஜியா இருக்கும். அவளுக்கு ஏதோ ஒரு பொருளுக்கு ஒவ்வாமை. அலர்ஜி மருந்துகள் எடுத்துக்கணும், எந்த பொருள் ஒவ்வாமை தருதுன்னு பார்த்து அதைத் தவிர்க்கணும்”

“ஏன் தான் பரீட்சை நேரத்துல இப்படி ஜலதோஷம் வருதோ? கிளாஸில் எல்லாருக்கும் சளி”

“கொரோனா நேரத்தில் எல்லாருக்கும் லீவு விட்டாங்க ஞாபகம் இருக்கா? இது மாதிரி நோய் பரவல் வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி லீவு விட்டாங்க. சமூக இடைவெளிங்குற வார்த்தையும் அப்பதான் பிரபலமாச்சு. நாமெல்லாம் மாஸ்க் போட்டுக்க ஆரம்பிச்சோம். இப்பவும் அப்படி செஞ்சா நல்லது. ஜப்பான்ல ஒரு வாரம் ஸ்கூலுக்கு லீவு விட்டுட்டாங்களாம். அங்கேயும் வைரஸ் தீவிரமா பரவுதாம். இப்படி விடுமுறை விடுறது மூலமா கிருமித் தொற்று ஏற்படற தொடர் சங்கிலியை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அடுத்தடுத்து நிறைய பேருக்குப் போக முடியாமல் தடுக்கும். அதுக்குள்ள அந்த வைரஸ் செயல் இழந்து போக வாய்ப்பிருக்கு”

அப்போது இளநீருடன் உள்ளே வந்தார் அப்பா. “அப்பா இளநீர் குடிக்க கூடாது, அது குளிர்ச்சின்னு என் நண்பன் சொல்றான்”

“மக்கள் மத்தியில இருக்கிற எத்தனையோ மூடநம்பிக்கைகளை இதுவும் ஒன்னு. இளநீர் மிக சுத்தமானது. அதில் ஏகப்பட்ட சத்துக்கள் இருக்கு. உன்னால சரியா சாப்பிட முடியாமல் ஏற்படுகிற சோர்வையும், லேசான காய்ச்சலால் இழக்கக் கூடிய நீர், உப்புச் சத்துக்களையும் கொடுக்கிற சக்தி இளநீருக்கு இருக்கு. ஒரு இளநீர், ஒரு பாட்டில் ட்ரிப்ஸ்க்கு சமம், தாராளமா குடிங்க அப்படின்னு என்னோட டாக்டர் நண்பன் சொல்லுவாரு” என்றார் அப்பா.

அப்படியா அப்பா? ஏற்கனவே எனக்கு இளநீர்னா ரொம்பப் பிடிக்கும். நான் குடிக்கிறேன்!” என்று கூறியவாறு தன் முகக் கவசத்தைக் கழற்றினான் பீமா.

இருமல் வந்தது. ‘இருமல் வரும் போது வாயில் கையை வைத்து இரும வேண்டும்’ என்று அம்மாவும் அப்பாவும் சொல்வதற்கு முன்பாகவே தன் இரு கைகளாலும் வாயையும் முகத்தையும் மூடி அவர்களின் முகத்தில் நீர் படாத விதமாக திரும்பி நின்று கொண்டு இருமினான் பீமா. அப்படியே ஒரு தும்மலம் வெளிவந்தது. கையைக் கழுவி விட்டு வந்து மடக் மடக்கென்று இளநீர் குடித்தான்!

– Dr. அகிலாண்டபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *