Around the World in 80 Days
ஜூல்ஸ் வெர்னே
தமிழில் – அகிலாண்டபாரதி
இதுவரை:
(எண்பது நாட்களில் உலகைச் சுற்றி வருகிறேன் என்று தன் நண்பர்களிடம் சவால் விட்டுக் கிளம்புகிறார் ஃபிலியாஸ் ஃபாக். பல நாடுகள் பயணித்து, பல சாகசங்களைக் கடந்து, இந்தியாவில் இருந்து ஹாங்காங் நோக்கிப் பயணிக்கிறார். இனி..)
‘ரங்கூன்’ கப்பலில் பாஸர்பார்ட்டவுட் ஃபிக்ஸைப் பார்த்து நேரடியாகக் கேள்வி கேட்டது அவருக்குக் கொஞ்சம் அதிர்ச்சியைத் தந்தது. உடனே சுதாரித்துக் கொண்டு,
“ஆமா! நாம அடிக்கடி சந்திக்கிறோமே! நான் இப்ப ஹாங்காங் போய்கிட்டு இருக்கேன்.” என்று மட்டும் சொன்னார்.
ஹாங்காங் அப்போது ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அங்கு வைத்தும் ஃபிக்ஸால் ஃபிலியாஸ் ஃபாகை கைது செய்ய முடியும். ஹாங்காங்கில் இருந்து அவர்கள் அமெரிக்கா சென்று விட்டால் அவரால் ஃபாகை பிடிக்க முடியாது. ஏனெனில் அமெரிக்கா இங்கிலாந்து நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட நாடல்ல.
அந்தக் கப்பலில் ஏறும் முன்பாகவே லண்டனில் இருக்கும் காவல்துறை தலைமையகத்தைத் தொடர்பு கொண்ட ஃபிக்ஸ், “வங்கிக் கொள்ளையனா இருக்குமோன்னு நான் சந்தேகப்படுற ஃபிலியாஸ் ஃபாக் இப்ப ஹாங்காங் போயிட்டு இருக்கார். அவரைக் கைது செய்றதுக்கான ஆணையை ஹாங்காங்கிற்கு அனுப்புங்க.” என்று தகவல் அனுப்பியிருந்தார்.
பாஸர்பார்ட்டவுட் அடிக்கடி ஃபிக்ஸை சந்தித்த நேரங்களில் தங்களைப் போலவே அவரும் ஒரு பயணி என்று நினைத்திருந்தார். ஆனால் கப்பலில் அவர்கள் பயணித்த அடுத்தடுத்த தினங்களிலும் தங்கள் பின்னாலேயே ஃபிக்ஸ் திரிவது போல் தோன்றவும் பாஸர்பார்ட்டவுட்க்கு ஃபிக்ஸ் மீது லேசாக சந்தேகம் வந்தது.
இவர் தங்களைத் தொடர்ந்து வந்து கண்காணிக்கிறாரோ என்று சந்தேகப்பட்டார். ஃபிலியாஸ் ஃபாக் இந்தக் கவலை ஏதுமின்றி தன் பயணத்தை ரசித்தார். அவ்டாவிடம் நிறைய பேசி அவளைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டார். அந்தப் பயணத்தில் வானிலை மோசமாக இருந்தது. அதனால் குறித்த நேரத்தை விட சற்றுத் தாமதமாகவே பயணித்தது. ஹாங்காங் செல்வதற்கு ஒரு நாள் தாமதமாகலாம் என்று கப்பலின் மாலுமிகள் அறிவித்தார்கள்.

ஹாங்காங்கிற்குச் சென்ற பின் தங்கள் பயணத்தின் அடுத்த பகுதியாக, ஜப்பான் நாட்டிலுள்ள யோகஹாமா (Yokohama) என்ற பகுதிக்குச் செல்வதற்காக அவர்கள் ‘கர்நாடிக்’ என்ற கப்பலைப் பிடிக்கத் திட்டமிட்டிருந்தார்கள். இப்போது மோசமான வானிலை காரணமாக அந்தக் கப்பலை பிடிக்க முடியாதோ என்ற பதட்டம் அவர்களுக்கு. ஒருவழியாக கப்பல் ஹாங்காங்கை அடைந்தது.
ஹாங்காங் சென்று இறங்கியவுடன் வேகமாகச் சென்று யோகஹாமா செல்லும் ‘கர்நாடிக்’ கப்பலைப் பற்றி விசாரித்தார்கள். “நாங்க வந்த ரங்கூன் கப்பல் வானிலை காரணமா தாமதமா வந்துச்சு. கர்நாடிக் கப்பல் கிளம்பிடுச்சா?” என்று அவர்கள் கேட்டதற்கு,
“நாளைக்கு தான் கர்நாடிக் கப்பல் புறப்படப் போகுது. அந்தக் கப்பலில் ஏதோ ஒரு தொழில்நுட்ப கோளாறு.” என்று துறைமுகத்தில் பதில் தந்தார்கள். நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஃபாக், அவ்டா கூறிய அவளது ஒன்றுவிட்ட சகோதரன் ஜீஜிபாய் எங்கே என்று விசாரிப்பதற்காகச் சென்றார். ஜீஜிபாய் ஹாங்காங்கில் இருந்து ஹாலந்து நாட்டிற்குச் சென்று விட்டதாகத் தெரிந்தது.
“உன்னோட சகோதரன் ஹாலந்து நாட்டுக்குப் போயிட்டானாம். நீ பேசாம எங்க கூட வந்துடலாம். ஐரோப்பாவுக்குள்ள வந்துட்டேன்னா அடுத்து அவனைக் கண்டுபிடிக்கிறது சுலபம்” என்று கூறினார் ஃபாக். அவ்டா ஒத்துக் கொண்டாள்.
ஹாங்காங் நகரின் தெருக்களில் பாஸர்பார்ட்டவுட் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் ஃபிக்ஸை சந்தித்தார்.
“அட நீங்களா? அடுத்து நான் அமெரிக்கா போறேன். நீங்க?” என்று வியந்தாற் போல் கேட்டார் ஃபிக்ஸ்.
“நாங்களும் தான். வாங்க! நாம போய் கப்பல் எப்ப கிளம்புதுன்னு விசாரிப்போம்” என்று பாஸர்பார்ட்டவுட் கூற, இரண்டு பேரும் பயணச்சீட்டு கொடுக்கும் இடத்திற்குச் சென்றார்கள்.
பயணச்சீட்டு வழங்கும் நபர், “அந்த தொழில்நுட்பக் கோளாறை சரி செஞ்சாச்சு. இன்னைக்கு சாயங்காலமே கப்பல் கிளம்ப போகுது” என்று கூறினார்.
“ரொம்ப சந்தோஷம்! அப்ப நாங்க சீக்கிரம் அமெரிக்கா போயிடுவோம்.” என்று பாஸர்பார்ட்டவுட் மகிழ்ச்சியடைய, ஃபிக்ஸ்க்கு ஏமாற்றமாக இருந்தது. ‘இவங்க இன்னைக்கே கிளம்பிட்டாங்கன்னா நான் எப்படி ஃபாகை கைது செய்றது? இன்னும் அவருடைய கைதுக்கான ஆணை வரலையே?’ என்று யோசித்தார். ‘பேசாம இவன்கிட்ட உண்மையை சொல்லிடுவோம், இவனோட உதவிய வாங்கிக்க வேண்டியது தான். வேற வழி இல்ல.’ என்று நினைத்தவர்,
பாஸர்பார்ட்டவுட்டிடம், “உனக்கு நிறைய பணம் தர்றேன். எனக்கு ஒரு உதவி செய்றியா? உங்க எஜமானர் இன்னிக்கு கிளம்பக் கூடாது. அவர் கிளம்புறதை நீ தாமதமாக்கணும்.” என்று நேரடியாகவே கேட்டார் ஃபிக்ஸ்.
பாசர்பார்ட்டவுட்டுக்குக் கோபமாக வந்தது. “அந்த கேளிக்கை விடுதியைச் சேந்தவங்களையெல்லாம் நல்லவங்க, நேர்மையானவங்கன்னு நினைச்சேனே? இப்படி பண்ணிட்டாங்களே!” என்றார் பாஸர்பார்ட்டவுட் ஆதங்கத்துடன்.
“யாரைச் சொல்றே? கேளிக்கை விடுதியா? அவங்க யாருன்னு எனக்குத் தெரியாதே?” என்று ஃபிக்ஸ் கேட்க,
“எங்க முதலாளி தன்னோட சவால்ல தோத்து போகணும், பயணத்தை முடிக்கக் கூடாதுன்னு தடுக்க வந்த ஆள் தானே நீ? இப்படி எல்லாம் பண்ணுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா உங்க சவாலை அவர் ஏத்துக்கிட்டே இருந்திருக்க மாட்டார்.” என்று கூறி, ஃபிலியாஸ் பாக் ஏற்றுக்கொண்ட சவால் பற்றி விளக்கினான் பாஸர்பார்ட்டவுட்.
“அப்படியா? நீ சொல்ற கதை புதுசா இருக்கே.. இதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னால நம்பவும் முடியல. நான் ஒரு போலீஸ் அதிகாரி, உங்க முதலாளி ஃபாக் ஒரு பேங்க்கைக் கொள்ளையடிச்சுட்டார்னு நான் சந்தேகப்படுறேன். அவரைக் கைது பண்றதுக்காகத் தான் உங்களைத் தொடர்ந்து வர்றேன். நீ தான் உங்க முதலாளியைக் கைது பண்ண எனக்கு உதவி பண்ணனும்.”
“நிச்சயமா முடியாது. அவர் ரொம்ப நல்லவர். வங்கிக் கொள்ளையர் கிடையாது!” என்று பாஸர்பார்ட்டவுட் கோபமாகக் கூற, அப்போது பார்த்து அவன் தலையில் பலத்த அடி ஒன்று விழுந்தது. மயங்கிக் கீழே விழுந்தான் பாஸர்பார்ட்டவுட்!
– தொடரும்.
(ஃபிலியாஸ் ஃபாகின் இதுவரையிலான பயணம்: லண்டன் —–> டோவர் ——> பாரிஸ் —–> டூரின் ——>பிரிண்டிசி——-> சூயஸ் கால்வாய் —–> ஏடன் நகரம் ——-> பம்பாய் ——-> கல்கத்தா——> ஹாங்காங்க்)
– Dr. அகிலாண்டபாரதி
