ஆனியின் அன்புசூழ் உலகு-15

Anne of Green Gables – Lucy Maud Montgomery
தமிழாக்கம்:- ஞா.கலையரசி

அது அக்டோபர் மாதம். இலையுதிர் காலம். கிரீன் கேபிள்ஸ் பண்ணை வீட்டுத் தோட்டத்தில் இருந்த மேப்பிள், செர்ரி, பிர்ச் மர இலைகள் பொன் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, கருஞ்சிவப்பு எனப் பலவித அழகிய வண்ணங்களில் மாறின.

படம் – அப்பு சிவா


ஒரு சனிக்கிழமை காலை ஆனி சில இலைக் கொத்துகளைக் கைகளில் எடுத்துக் கொண்டு நடனமாடியபடி மரிலாவிடம் வந்தாள்.
“மரிலா! அக்டோபர் இருக்கிற உலகத்துல வாழுறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. இந்த மேப்பிள் மரங்களைப் பாருங்க. எவ்ளோ அழகா இருக்கு? இந்த இலைகளை வைச்சி என் அறையை அலங்கரிக்கப் போறேன்” என்றாள் ஆனி.
“வெளியில இருக்குற கண்ட கண்ட பொருளைக் கொண்டாந்து அறையைக் குப்பை ஆக்காதே. தூங்கத் தான் படுக்கை அறை.”
“அழகான பொருள் அறைக்குள் இருந்தால் நல்ல கனவு வரும் மரிலா. இந்தக் கொத்தை நீல ஜாடியில வைச்சி என் மேசை மேல வைக்கப் போறேன்.”
“சரி. ஆனா மாடிப்படி பூரா இலை விழாம பார்த்துக்கோ. இன்னிக்குச் சாயந்திரம் நான் ஒரு சங்கக் கூட்டத்துக்குப் போறேன். இருட்டுறதுக்கு முன்னாடி என்னால வீட்டுக்குத் திரும்ப முடியாது. அதனால மாத்யூவுக்கும் ஜெர்ரிக்கும் ராத்திரி சாப்பாடு கொடுத்துடு. நீ விரும்பினா, டயானாவை வீட்டுக்குக் கூப்பிடு. அவள் மதியம் உன் கூட விளையாடிட்டு, இங்கேயே தேநீர் குடிக்கலாம்.”
“ஆஹா! மரிலா! ரொம்ப மகிழ்ச்சி. அதுக்காக நான் எவ்ளோ ஏங்கி இருக்கேன் தெரியுமா?”
“அலமாரியில ரெண்டாவது தட்டுல ராஸ்பெரி ஜூஸ் இருக்கு. நீயும் டயானாவும் விரும்பினா குடிங்க. சாப்பிட பிஸ்கட்டும் எடுத்துக்கலாம்.”
அதைக் கேட்டவுடன் ஆனி விரைவாக ஓடி டயானாவை தேநீர் குடிக்க வீட்டுக்கு அழைத்தாள். மரிலா கிளம்பிய சற்று நேரத்தில் டயானா வந்தாள். அவளை வீட்டின் கிழக்கு அறைக்கு அழைத்துச் சென்றாள் ஆனி. இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
“வா டயானா! தோட்டத்துக்குப் போய் ஆப்பிள் பறிச்சித் தின்னலாம். தேநீர் குடிக்கிறப்ப புரூட்டி கேக்கும் செர்ரி பழமும் சாப்பிடலாம்னு மரிலா சொல்லி இருக்கார்” என்றாள் ஆனி.
பழங்கள் நிறைந்த ஆப்பிள் மரக்கிளைகள் வளைந்து தரையில் சாய்ந்து இருந்தன. அவர்கள் இருவரும் வேண்டிய மட்டும் பழங்களைப் பறித்துத் தின்றுவிட்டுப் புல்தரையில் உட்கார்ந்து வெகுநேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
ஆனி பள்ளிக்குப் போவதை நிறுத்திய பிறகு பள்ளியில் நடந்த நிகழ்வுகள் குறித்து இருவரும் பேசினர். சக மாணவிகள் பற்றி விரிவாகச் சொன்ன டயானா, எல்லோரும் ஆனி இல்லாதது குறித்து வருந்துவதாகவும், அவள் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் சொன்னாள். முடிவில் கில்பர்ட் பற்றி டயானா சொல்ல ஆரம்பித்தவுடன் அவனைப் பற்றிக் கேட்க விரும்பாமல் ஆனி துள்ளி எழுந்தாள். “வீட்டுக்குப் போய் ராஸ்பெரி ஜூஸ் குடிக்கலாம்” என்று டயானாவை அழைத்துச் சென்றாள்.
ஆனி அலமாரியில் ராஸ்பெரி பாட்டிலைத் தேடினாள். மரிலா சொன்னது போல அது இரண்டாவது தட்டில் இல்லை. மேல்தட்டில் இருந்தது. ஆனி பாட்டிலை மேசையில் கொண்டு வந்து வைத்தாள். பக்கத்தில் ஒரு டம்ளரையும் வைத்தாள்.
டயானா பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருந்த அந்தப் பழச்சாற்றை ரசித்துப் பார்த்தாள். அதை டம்ளர் முழுக்க ஊற்றிச் சிறிது குடித்தாள்.
“ஆனி, இந்த ஜூஸ் ரொம்ப ருசியா இருக்கு!. இது இவ்ளோ ருசியா இருக்கும்னு எனக்குத் தெரியாது” என்றாள் டயானா.
“உனக்கு பிடிச்சி இருக்கிறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோ. நான் அடுப்பைப் பார்த்துட்டு வரேன்” என்று அடுப்படிக்குச் சென்றாள் ஆனி.
ஆனி திரும்பி வந்த போது டயானா இரண்டாவது டம்ளர் குடித்துக் கொண்டிருந்தாள்.
மூன்று டம்ளர் குடித்த பிறகு “நான் இதுவரை குடிச்சதிலேயே ரொம்ப ருசியான ஜூஸ் இது” என்றாள் டயானா.
“மரிலாவுக்குத் தான் நன்றி சொல்லணும். அவரு தேர்ந்த சமையல்காரர்…” ஆனி சொல்லிக் கொண்டு இருந்த போதே, டயானா தள்ளாடியபடி எழுந்து நின்றாள். மீண்டும் உட்கார்ந்த டயானா கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டாள்.
“என்னாச்சு டயானா?” என்றாள் ஆனி.
“எனக்கு உடம்பு சரியில்லை. நான் இப்ப வீட்டுக்குப் போகணும்” என்றாள் டயானா.
“டீ குடிக்காம வீட்டுக்குப் போறியா? நான் போயி ஒரு நிமிஷத்துல டீ போட்டுக் கொண்டு வரேன்.” வருத்தத்துடன் ஆனி சொன்னாள்.
“நான் வீட்டுக்குப் போகணும்.” டயானா உறுதியாகச் சொன்னாள்.
“நான் கொஞ்சம் பழக் கேக்கும் செர்ரி பழமும் தரேன். நீ சோபாவிலேயே படுத்துக்கோ. படுத்தா கொஞ்சம் நல்லா இருக்கும்.”
“நான் வீட்டுக்குப் போயாகணும்.” டயானா மீண்டும் உறுதியாகச் சொன்னாள். வேறு வழியின்றி ஆனி ஒத்துக்கொண்டாள்.
“டீ பார்ட்டிக்கு வந்துட்டு டீ குடிக்காம போனவங்க பத்தி நான் கேள்விப்பட்டதே இல்லை. உன் உடம்புக்கு என்ன செய்யுது?” ஆனி கேட்டாள்.
“எனக்கு ரொம்ப மயக்கமா இருக்கு” என்றாள் டயானா.
டயானா மயக்கத்துடன் தள்ளாடியபடி நடந்தாள். கண்ணீருடன் ஆனி அவள் வீடு வரைக்கும் துணைக்குச் சென்றாள். அழுது கொண்டே வீடு திரும்பிய ஆனி, ராஸ்பெரி பாட்டிலை மீண்டும் அலமாரியில் வைத்தாள். மாத்யூவுக்கும் ஜெர்ரிக்கும் தேநீர் தயாரித்துக் கொடுத்தாள்.
மறுநாள் ஞாயிறு. காலையில் இருந்து மாலை வரை மழை தொடர்ச்சியாகப் பெய்து கொண்டு இருந்தது. ஆனி வெளியிலேயே வரவில்லை. திங்கள் மதியம் மரிலா ஆனியை ஒரு வேலையாக திருமதி லிண்டே வீட்டுக்கு அனுப்பினார்.
போன வேகத்தில் அழுது கொண்டே திரும்பி ஓடி வந்தாள் ஆனி. அவள் கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. சோபாவில் குப்புறப்படுத்து முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதாள்.
“என்னாச்சு ஆனி? திருமதி லிண்டே கிட்ட மறுபடி சண்டை போட்டு இருக்க மாட்டேன்னு நம்பறேன்.” சந்தேகத்துடன் கேட்டார் மரிலா.
ஆனி விம்மினாளே தவிர, அவளிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
“ஆனி! நான் கேள்வி கேட்டா பதில் சொல்லணும். உடனே எழுந்து உட்கார்ந்து ஏன் அழறேன்னு சொல்லு.” என்றார் மரிலா.
ஆனி சோகத்துடன் எழுந்து உட்கார்ந்தாள்.
“திருமதி லிண்டே இன்று டயானா அம்மா திருமதி பேரியைப் பார்க்கப் போய் இருந்தாராம். சனிக்கிழமை நான் டயானாவை மது குடிக்க வைச்சி மோசமான நிலையில் அனுப்பினேன்னு அவ அம்மா சொன்னாராம். நான் ரொம்பக் கெட்டவளாம்; டயானாவை இனிமே என் கூட விளையாட அனுமதிக்க மாட்டேன்னு சொன்னாராம். மரிலா! அதைக் கேட்டதிலிருந்து எனக்கு அழுகை அழுகையா வருது.”
மரிலா வியப்புடன் ஆனியைப் பார்த்தார்.
“டயானாவைக் குடிக்க வைச்சியா? ஆனி, நீ பைத்தியமா? அல்லது திருமதி பேரி பைத்தியமா? அவளுக்கு நீ என்ன கொடுத்தே?”
“ராஸ்பெரி ஜூஸ் தான் கொடுத்தேன். ராஸ்பெரி ஜூஸ் குடிச்சா மயக்கம் வரும்னு எனக்குத் தெரியவே தெரியாது மரிலா. டயானா மாதிரி மூனு டம்ளர் குடிச்சாலும் மயக்கம் வரும்னு தெரியாது. அவளை மது குடிக்க வைக்கணும்னு நான் நினைக்கவே இல்லை,” விம்மியபடி சொன்னாள் ஆனி.
மரிலா உடனே அலமாரிக்குச் சென்று அங்கே இருந்த பாட்டிலை எடுத்துப் பார்த்தார். அது மூன்று ஆண்டுகளுக்கு முன் வீட்டில் தாம் தயாரித்த பழமையான திராட்சை ரசம் என்பதை அறிந்தார். கடுமையான பழக்க வழக்கத்தைப் பின்பற்றும் திருமதி பேரி அதை விரும்ப மாட்டார் என்று யோசித்தார். ராஸ்பெரி பாட்டிலை ஆனியிடம் சொன்னது போல் அந்த அலமாரியில் வைக்காமல் கீழே அறையில் வைத்தது அப்போது தான் அவர் நினைவுக்கு வந்தது. மரிலா அந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு சமையல் அறைக்கு வந்தார்.
“ஆனி! பிரச்சினையில மாட்டிக்கிறது உனக்குக் கைவைந்த கலையா இருக்கு. டயானாவுக்கு ராஸ்பெரி ஜூஸுக்குப் பதிலா வைன் கொடுத்து இருக்கே. ரெண்டுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியலையா?” என்றார் மரிலா.
“நான் அதை ருசி பார்த்ததே இல்லை. அது ராஸ்பெரி ஜூஸ்ன்னு தான் நினைச்சேன். டீ பார்ட்டிக்கு வந்த டயானாவை நல்லாக் கவனிச்சிக்கணும்னு நினைச்சேன். அவளுக்கு உடம்பு சரியில்லாம போய் வீட்டுக்குப் போற மாதிரி ஆயிடுச்சி. மகள் மூச்சு முட்டக் குடிச்சி இருந்தாள்னு அவ அம்மா திருமதி லிண்டே கிட்ட சொன்னாங்களாம். என்ன நடந்துச்சின்னு அவங்க கேட்டப்ப லேசா சிரிச்சிட்டு அவ தூங்கப் போயிட்டாளாம். ரொம்ப நேரம் தூங்கினாளாம். அவ மூச்சுக் காத்தை மோந்து பார்த்தப்ப தான், அவ மது குடிச்ச விஷயம் அம்மாவுக்குத் தெரிஞ்சுதாம். நேத்து முழுக்க அவளுக்குக் கடுமையான தலைவலியாம். நான் வேணும்னு திட்டம் போட்டு செஞ்சதாத் தான் அவ அம்மா நம்புவாங்க.”
“ஜூஸாவே இருந்தாலும் அளவே இல்லாம மூனு டம்ளர் குடிச்சதுக்கு அவங்க டயானாவுக்குத் தான் தண்டனை கொடுக்கணும். மூனு பெரிய டம்ளர் ஜூஸ் குடிச்சாக் கூட அவ உடம்பு கெடும் தான். ஏற்கெனவே நான் வீட்டுல வைன் தயாரிக்கிறேன்னு குத்தம் சொல்றவங்களுக்கு அது நல்ல வாய்ப்பாயிடும். பாதிரியாருக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்ச பிறகு மூனு வருஷமா நான் வைன் தயாரிக்கவே இல்லை. உடம்புக்கு நோய் வர்ற சமயத்துல பயன்படுத்தலாம்னு அந்த ஒரு பாட்டில் மட்டும் வைச்சிருந்தேன். நீ அழாதே. இந்த விஷயத்துல நீ தப்பு செஞ்சதா நான் நினைக்கலை. ஆனா நடந்ததை நினைச்சி வருத்தமா இருக்கு” என்றார் மரிலா.
“நான் அழனும். என் இதயம் உடைஞ்சி போயிடுச்சி. நட்சத்திரங்கள் கூட எனக்கு எதிராச் சதி பண்ணுதுங்க மரிலா. டயானாவும் நானும் நிரந்தரமா பிரிஞ்சிட்டோம். நாங்க முதல் முறையா நட்பு உறுதி எடுத்தப்ப இப்படி நடக்கும்னு நான் கனவில கூட நினைக்கல.”
“முட்டாள்தனமாப் பேசாதே ஆனி,” என்றார் மரிலா. “உன் மேல தப்பு இல்லேன்னு தெரிஞ்ச உடனே திருமதி பேரி தம் கருத்தை மாத்திக்குவார். நீ விளையாட்டுக்காகச் செஞ்சேன்னு அவர் நினைச்சி இருக்கலாம். இன்னிக்குச் சாயந்திரம் அவர் கிட்ட போய் எப்படி நடந்துச்சின்னு உண்மையைச் சொல்றது நல்லது.”
“கோபமா இருக்கிற டயானா அம்மாவைப் பார்க்கணும்னு நினைச்சாலே பயமா இருக்கு.” என்று பெருமூச்சு விட்டாள் ஆனி.
“நீங்களே போய்ச் சொல்ல முடியுமா, மரிலா? என்னைவிட நீங்க போனா நல்லதுன்னு நினைக்கிறேன். நான் சொல்றதை விட நீங்க சொன்னா அவர் சீக்கிரமா நம்புவார்.”
“சரி, நான் போறேன்,” என்றார் மரிலா.
‘அதான் நல்லது’ என்று நினைத்த மரிலா, “இனிமே அழாதே ஆனி. எல்லாம் சரியாயிடும்” என்றார்.
ஆனால் டயானா வீட்டில் இருந்து திரும்பிய போது மரிலா தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த ஆனி அவர் வருவதைக் கண்டதும் முன்வாசலுக்கு ஓடி வந்தாள்.
“ஓ, மரிலா, போன காரியம் நல்லவிதமா முடியலைன்னு உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது. டயானா அம்மா என்னை மன்னிக்கலையா?” வருத்தத்துடன் கேட்டாள் ஆனி.
“திருமதி பேரியா? நான் பார்த்தவரைக்கும் காரணமே இல்லாம பிடிவாதமா இருக்கிற பெண்கள்ல அவர் ரொம்ப மோசம். ஒரு தவறு நடந்துடுச்சி; அது உன் குத்தம் இல்லேன்னு சொன்னேன். ஆனா அவர் நம்பவே இல்லை” மரிலா சொல்லிவிட்டுச் சமையல் அறைக்குச் சென்றார்.
கவலையுடன் நின்ற ஆனி சிறிது நேரம் கழித்து, தலையில் தொப்பி கூட அணியாமல் வெளியே வந்தாள். குளிர் நிறைந்த மாலையில் வயலைக் கடந்து, பாலத்தைத் தாண்டிச் சென்று தயக்கத்துடன் டயானா வீட்டுக் கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்த திருமதி பேரி வெளிறிப் போன உதடுகளும் ஏக்கம் கொண்ட கண்களும் கொண்ட சிறுமியை வாசலில் கண்டார். அவர் முகத்தில் கோபம் தெரிந்தது. ஆனி வேண்டுமென்றே திட்டமிட்டு டயானாவை மது குடிக்க வைத்தவள் என்று அவர் நம்பினார். எனவே அவளுடன் தம் மகளை சேரவிடக்கூடாது என்ற முடிவில் இருந்தார்.
“உனக்கு என்ன வேணும்?” என்று இறுக்கமான முகத்துடன் அவர் கேட்டார்.
“திருமதி பேரி! தயவு செஞ்சி என்னை மன்னிச்சிடுங்க. டயானாவை மது குடிக்க வைச்சி மயக்கணும்னு நான் நினைக்கவே இல்லை. நான் அப்படிச் செய்வேனா? நீங்கள் ஒரு ஏழை அநாதை சிறுமின்னு கற்பனை செஞ்சுப் பாருங்க. நல்ல மனசு கொண்டவங்க உங்களைத் தத்து எடுக்கிறாங்க. உலகத்துல உங்களுக்கு ஒரே ஒரு நெருங்கிய தோழி மட்டுமே இருக்கா. அவளை நீங்க திட்டம் போட்டு மயக்குவீங்களா? அது ராஸ்பெர்ரி ஜூஸ்ன்னு தான் நான் நம்பினேன். தயவு செஞ்சி டயானாவை இனிமே என் கூட விளையாட விடமாட்டேன்னு சொல்லாதீங்க. நீங்க அப்படிச் சொன்னா என் வாழ்க்கை பூரா சோகத்தில் மூழ்கிடும்” என்றாள் ஆனி.
ஆனியின் பேச்சு திருமதி பேரியின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அந்தச் சிறுமி தம்மைக் கேலி செய்வதாக அவர் நினைத்தார்.
“டயானா கூட நட்புல இருக்க நீ லாயக்கே கிடையாதுன்னு நான் நினைக்கிறேன். நீ வீட்டுக்குப் போய் ஒழுங்கு மரியாதையா நடந்துக்கிறது நல்லது.” கடுமையான குரலில் சொன்னார் திருமதி பேரி.
ஆனியின் உதடுகள் நடுங்கின.
“ஒரே ஒரு முறை மட்டும் டயானாவைப் பார்த்துச் சொல்லிட்டுப் போக அனுமதி தர்றீங்களா?” ஆனி வேண்டினாள்.
.”டயானா அவ அப்பாவோட கிராமத்துக்குப் போய் இருக்கா.” என்று சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திவிட்டார் திருமதி பேரி.
ஆனி சோகமாக வீட்டுக்குத் திரும்பினாள்.
“என் கடைசி நம்பிக்கையும் போயிடுச்சி,” என்றாள் மரிலாவிடம்.
“நான் நேராப் போய்த் திருமதி பேரியைச் சந்திச்சேன். ஆனா அவர் என்னை ரொம்பக் கேவலமா நடத்தினார். இனிமே கடவுள் கிட்ட பிரார்த்தனை செய்றதைத் தவிர வேறு வழி இல்லை. ஆனால் அதிலும் அதிக பலன் கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. ஏன்னா அவரை மாதிரி பிடிவாதம் கொண்டவரைக் கடவுளால் கூட மாற்ற முடியாதுன்னு தோனுது.”
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ஆனி, அப்படி எல்லாம் பேசக்கூடாது,” என்று மரிலா கண்டித்தார். அன்று இரவு நடந்ததை மேத்யூவிடம் சொன்ன போது ஆனிக்கு ஏற்பட்ட பிரச்சினையை நினைத்து வாய்விட்டுச் சிரித்தார்.
தூங்கப் போகுமுன் கிழக்கு மாடி அறைக்குச் சென்று மரிலா பார்த்தார். அழுதபடி தூங்கிவிட்டிருந்த ஆனியின் முகத்தைப் பார்த்தபோது அவர் முகத்தில் இரக்கம் தோன்றியது.
“பாவம், சின்னக் குழந்தை” என்று மரிலா முணுமுணுத்தார். கண்ணீரில் நனைந்து இருந்த அவள் முகத்தில் ஒரு சுருள் முடி விழுந்து இருந்தது. அதை எடுத்து மேலே ஒதுக்கிவிட்டார். பின்னர் குனிந்து அவளது சிவந்த கன்னத்தில் முத்தமிட்டார்.

– தொடரும்..

– ஞா.கலையரசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *