பறக்கும் பூநாய் – சிறார் நூல் விமர்சனம்
ஆசிரியர்: ஞா. கலையரசி
16 பக்கங்கள்
விலை ரூ. 20

பள்ளிக்கல்விப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பிரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள புத்தகம்.

திருமதி ஞா. கலையரசி அவர்களும் நிறைய சிறுவர் கதைகளை எழுதிப் புகழேணியில் ஏறிக் கொண்டிருக்கும் திறமையான சிறார் எழுத்தாளர். தமிழ்நாடு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக் கருத்தாளர். வாசிப்பு இயக்கத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப எளிமையான நடையில் தெளிவாகக் கதையைப் படைத்துள்ளார். இனி கதைக்குள் எட்டிப் பார்க்கலாம்.

இரண்டு கதைகள் இருக்கின்றன. முதல் கதையில் வாணியும், மணியும் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் மின்னல், இடியுடன் மழை வரும் போல இருக்கிறது. திடீரென வானத்தில் இருந்து அவர்களருகில் விழுந்தது ஒரு வினோதமான விலங்கு. நாய் போன்ற உடலும், பூனை போன்ற முகத்தையும் இறக்கைகளையும் கொண்ட அந்த விலங்குக்கு, “பூநாய் ” என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள் குழந்தைகள். தாங்களே வளர்ப்பதாக முடிவு செய்தவர்களுக்கு அது என்ன சாப்பிடும் என்று தெரியாமல் திணறுகிறார்கள். அந்தக் குழந்தைகளின் அம்மா, சமையலுக்காக வைத்திருந்த கீரையைத் தின்றுவிடுகிறது அந்தப் பூநாய். அப்போது தான் அது தாவரங்களை உண்ணும் வழக்கம் கொண்ட விலங்கு என்று அவர்களுக்குப் புரிகிறது. அதன் பிறகு குழந்தைகள் விரிக்கும் சாக்கில் தூங்கிவிடுகிறது அந்தப் பூநாய். அடுத்த நாள் அந்த விலங்கு என்ன ஆகிறது, அந்தப் புதுமையான விலங்கை அம்மாவின் அறிவுரைப்படிக் காட்டுயிர்க் காப்பகத்தில் குழந்தைகள் ஒப்படைக்கிறார்களா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்த கதையில் வரும் ஆதன் என்கிற சிறுவனுக்கு மந்திரப் பென்சில் ஒன்று கிடைக்கிறது. அதனைக் கொண்டு ஆதன் வரையும் பொருட்கள் உயிர் பெறுகின்றன. கையில் கிடைத்த மந்திரப் பென்சிலை உபயோகித்து, அவனுடைய தங்கை நீலா கூறும் கருத்தை ஏற்று, ஊருக்கு உபகாரமான காரியம் எதையாவது ஆதன் செய்கிறானா என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

– புவனா சந்திரசேகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *