காகிதத்தில் கை வண்ணம்!
பட்டாபி தாத்தாவும் பார்வதிப் பாட்டியும் சேர்ந்து வீட்டிலிருந்த தினசரிகளை சேகரித்து கட்டி வைத்துக் கொண்டிருந்தனர்.
“பட்டு.. பட்டு..” பூனை போல மெல்லிய குரல் பக்கத்து வீட்டு பால்கனியிலிருந்து வந்தது.
பாட்டி மெதுவாய் எட்டிப் பார்த்துவிட்டு,
“உங்க செல்லப் பேரன் மித்துதான் உங்கள கூப்பிடறான்..” என்று சொல்லிச் சிரித்தாள்.
தாத்தா எட்டிப் பார்த்துவிட்டு,
“என்ன மித்து?” என்று அவனைப் போலவே மெல்லிய குரலில் கேட்டார்.
“ம்ச்.. ஒரு முக்கியமான விஷியம்.. இங்க வாங்க..” என்று அவசரமாக அழைத்தான்.
“முக்கியமான விஷியமாம்.. பெரிய மனுஷன் கூப்பிடறான்.. என்னன்னு கேட்டுட்டு வரேன்..” என்று சிரித்துக் கொண்டே பாட்டியிடம் கூறியவர் மெதுவாக எழுந்து பால்கனிக்குச் சென்றார்.
“என்ன மித்து?”
“பட்டு.. இன்னிக்கு என்ன வெளையாடப் போறோம்.. பசங்கல்லாம் என் கிட்ட கேட்டுட்டே இருக்காங்க..”
“அப்டியா.. என்ன வெளையாடலாம்.. நீயே சொல்லு..” என்று அவர் அவனிடமே கேள்வி கேட்டார்.
“எனக்கு என்ன தெரியும்.. நீங்கதானே பெரியவரு.. நீங்கதான் சொல்லணும்..” என்றான்.
“ம்.. பாட்டி ஏதோ புது வெளையாட்டு சொல்றேன்னு சொல்லிட்டிருந்தா.. என்னன்னு கேக்கலாமா..” என்று தாத்தா பாட்டியை கோர்த்துவிட்டார்.
இதைக் கேட்ட பாட்டி தாத்தாவைப் பார்த்து எதையோ கேட்க நினைக்கும் போதே, மித்து பாட்டியிடம் கேட்டான்,
“என்ன வெளையாட்டு பாட்டி?” என்று.
“ம்.. ஒரு சூப்பர் விளையாட்டுடா மித்து.. உனக்கு ரொம்பப் பிடிக்கும்..” என்று அவனிடம் சொல்லிக் கொண்டே கட்டி வைத்த தினசரிகளை எடுத்து ஓரமாக வைத்தாள்.
“அதுதான் என்ன வெளையாட்டு..” என்று மித்து விடாமல் கேட்டான்.
“அதான் சஸ்பென்ஸ்.. சாய்ங்காலம் சொல்றேன்.” என்றாள் பாட்டி.
“ம்ச்.. என்ன பாட்டி..” என்று அவன் அலுத்துக் கொள்ள,
“எல்லாருக்கும் முன்னாலயே உனக்கு சொன்னா அதுல த்ரில் இல்லடா.. எல்லார் கூடயும் சேர்ந்துதானே விளையாடற.. அப்ப அவங்களோட சேர்ந்து இந்த த்ரில்ல எஞ்சாய் பண்ணு.. சரியா..” என்று பாட்டி இதமாகச் சொன்னாள்.
“ஹூம்.. சரி பாட்டி..” என்றபடியே அவன் தன் வீட்டுக்குள் போனான்.
அவன் அங்கே இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட பார்வதிப் பாட்டி தாத்தாவிடம் கேட்டாள்.
“என்னங்க.. என்னை மாட்டி விட்டீங்க..”
“என்ன செய்யம்மா.. அவன் விடாம கேக்கறான்.. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல.. ஆனா நீதான் அவனை அழகா சமாளிச்சியே.. ஆமா.. என்ன விளையாட்டு..” என்று தாத்தா ஆர்வமாகக் கேட்க,
“வெய்ட் அன் வாச்..” என்று சிரித்தபடி கூறிவிட்டு பாட்டி தன் வேலையைப் பார்க்கப் போனாள்.
என்ன இந்தப் பாட்டி, தாத்தாவுக்கே ட்ஃப் குடுக்கறாங்க?! 😁😁😁😁😁
அன்று மாலை அந்தக் குடியிருப்பு வளாகத்தின் விளையாட்டுத் திடலில் எல்லா குழந்தைகளும் ஆர்வமாகக் கூடியிருக்க, பட்டு தாத்தாவோ அவர்களை விட அதிக ஆர்வமாகக் காத்திருந்தார்.
பாட்டி, ஒரு பெரிய கட்டைப் பையை தூக்க முடியாமல் தூக்கி வர, குழந்தைகள் எல்லாம் ஓடிச் சென்று அவளுக்கு உதவினார்கள். பாட்டி சென்று அங்கிருந்த சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.
வழக்கம் போல எல்லா குழந்தைகளுக்கும் கையில் சானிடைசர் கொடுத்தான் மித்து. மாஸ்க் போட்டுக் கொண்டு வராத குழந்தைகளை, மாஸ்க் அணிந்து வருமாறு கூறி வீட்டிற்கு அனுப்பினார் பட்டு தாத்தா.
குழந்தைகள் எல்லாம் தயாராகி வந்தவுடன் சமூக இடைவெளியுடன் அழகாக அமர்ந்து கொண்டனர். பாட்டி கட்டைப் பையிலிருந்து கற்றையாய் கட்டியிருந்த காகிதக் கட்டை வெளியே எடுத்தாள்.
எல்லா குழந்தைகளுக்கும் சதுர வடிவில் ஒரு காகிதம் கொடுக்கப்பட்டது.
“இது என்ன பேப்பர், பாட்டி?”
“நம்ம இத வெச்சி என்ன பண்ணப் போறோம்?”
“இன்னிக்கும் ட்ரஷர் ஹன்ட்டா?”
என்று பிள்ளைகள் எல்லாம் சராமாரியாகக் கேள்விகளைக் கேட்க,
“அதெல்லாம் எதுவும் இல்ல.. இது வேற ஒரு விளையாட்டு.. நீங்கல்லாம் நா செய்து காட்ற மாதிரியே செய்ங்க.. எல்லார் கைலயும் இருக்கற பேப்பர இப்டிப் பாதியா மடிங்க..”
“இப்டியா..”
“ம்.. இப்டி தான்.. கரெக்ட்.. இப்ப அத இன்னும் பாதியா மடிங்க..” என்று பாட்டி சொல்லிக் கொடுத்தாள்.
பாட்டி சொல்லிக் கொடுத்தபடியே குழந்தைகள் அந்தக் காகிதத்தை மடிக்க மடிக்க, அந்தக் காகிதம் ஒரு அழகான கப்பல் வடிவத்துக்கு மாறியது.
“ஹை.. இது கப்பல்.. அழகா இருக்கு பாட்டி..” என்று கூவினான் மித்து.
அவனைத் தொடர்ந்து மற்ற பிள்ளைகளும் குதூகலமாகக் கூவினார்கள்.
“ஆமா பசங்களா.. இது ஒரு கலை.. பேப்பர் வெச்சி இப்டி மடிச்சி செய்யற இந்தக் கலைக்குப் பெயர் ஓரிகேமி! இத வெச்சி பூ, கப்பு, பறவை, டைனோசர் மாதிரி இன்னும் நிறைய வடிவங்கள் செய்யலாம்!”
இதைப் பார்த்த பட்டு தாத்தாவுக்கு மிகுந்த வியப்பாக இருந்தது. இந்த பார்வதிப் பாட்டி கலக்கறாளே.. என்று நினைத்துக் கொண்டார். 😂😂😂😂😂
“எங்களுக்கு இதெல்லாம் செய்ய சொல்லி குடுங்க பாட்டி!” என்றான் மித்து.
“இன்னிக்கு கப்பல் கத்துகிட்டோம்! நாளைக்கு 4 கப்ஸ்! நாளை மறுநாள் ரோஸ்.. இப்டி தினமும் ஒண்ணொண்ணா கத்துக்கலாம் சரியா?”
“சரி பாட்டி!” குழைந்தைகள் எல்லாம் ஆர்வமாக கூறினார்கள்.
பாட்டி கத்திக் கப்பலையும் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தாள்.
குழந்தைகள் எல்லாம் கையில் கிடைக்கும் காகிதத்தை எல்லாம் எடுத்து கப்பல் செய்து செய்து மகிழ்ந்தனர்.
அன்று அவர்கள் குடியிருப்பின் நீச்சல் குளத்தில் நிறைய காகிதக் கப்பல்கள் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்த பெற்றோர் அனைவரும் வியப்படைந்தனர். எல்லாருடைய மனதிலும் தங்கள் கடந்த கால நினைவுகள் வந்தன. அவர்களும் தங்கள் பங்குக்கு குழந்தைகளுடன் காகிதத்தில் கப்பல் செய்து நீச்சல் குளத்தில் விட்டு விளையாடினர்.
நாளைக்கு புதிதாக என்ன விளையாட்டைக் கற்றுக் கொடுக்கப் போகிறாள் என்று இப்போதே பாட்டியிடம் செல்லம் கொஞ்சத் தொடங்கினர்.
அடுத்ததாக பாட்டி என்ன விளையாட்டு கற்றுத் தரப் போகிறாள் என்பதை அடுத்த இதழில் பாக்கலாம். அது வரைக்கும் சமத்தாக இருங்க குட்டீஸ்!
பை! டாட்டா! 👋👋👋👋👋
*************
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.