வணக்கம் சிட்டூஸ்..
எல்லாருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்
அம்மா அக்கா தங்கச்சி அத்தை பாட்டின்னு நம்ம வீட்டுல நமக்காகவே முழுநாளும் இயங்கிக்கிட்டே இருக்கிற நம்ம வீட்டு சிங்கப்பெண்கள் முதல் நம்ம வகுப்பு டீச்சர் வீட்டுல இருந்துகிட்டே பாடம் சொல்லிக்கொடுக்கற பக்கத்து வீட்டு அக்கா , அன்றாடம் நாம தவறாம சந்திக்கிற அத்தனை சிங்கப்பெண்களுக்கும் நீங்க வாழ்த்துக்கள் சொல்லிருப்பீங்கன்னு நம்புறேன்.. ஒருவேளை சொல்லலானாலும் இப்போ ஓடிப்போய் சொல்லிடுங்க. ஏனா நீர் நிலம் காற்று ஆகாயம் பூமின்னு எல்லாமாகவும் இருக்கிற பெண்களுக்கு மகளிர் தினம்ன்னு வருஷத்துல ஒரு நாள் இல்ல ,எல்லா நாளுமே நம்ம அன்பு வாழ்த்துக்கள சொல்லலாம் 🙂
சரி இப்போ நாம வழக்கமா கதை கேக்கலாமா?
இன்னிக்கு நாம கதை கேட்க போகப்போற ஊர்
உளுந்தூர்பேட்டை..
இந்த ஊர், கள்ளக்குறிச்சி என்கிற மாவட்டத்துல இருக்கு.
ரொம்ப காலத்துக்கு முன்னாடி இந்த இடத்துக்கு ஒரு மிளகு வியாபாரி வியாபாரம் செய்றதுக்காக ஒரு பெரிய மிளகு மூட்டையோட வந்தாராம். அப்போ அங்க வந்த ஒரு வழிப்போக்கர் மிளகு வியாபாரிக்கிட்ட,
“ஏங்க மூட்டைல என்ன இருக்குது?”’ன்னு கேட்டாராம்.
அதுக்கு அந்த வியாபாரி, மூட்டைக்குள்ள இருக்கறத மாத்தி சொல்லி “இது உளுந்து மூட்டை’ன்னு ஒரு புளுகு மூட்டைய அவிழ்த்து விட்டாராம்.
உடனே வழிப்போக்கரும், “உளுந்து மூட்டையா சரி சரி.. அப்படியே ஆகட்டும்!”ன்னு சொன்னாராம்.
கொஞ்ச நேரம் கழிச்சு அந்த இடத்த விட்டு வேற இடத்துக்கு போன வியாபாரி தன் கிட்ட வாங்க வந்த ஒருத்தருக்காக மிளகு எடுக்கறதுக்காக மூட்டைய பிரிச்சு பார்த்தாராம். பிரிச்சு பாத்தவருக்கு ஒரே அதிர்ச்சி. காரணம் என்னன்னா, விளையாட்டா வியாபாரி அந்த வழிப்போக்கர் கிட்ட பொய் சொன்னது மாதிரியே மிளகு மூட்டை பூராவும் உளுந்தா மாறி இருந்துச்சாம்!
பயந்தடிச்சு அந்த வழிப்போக்கர தேடி பழைய இடத்துக்கு வந்த வியாபாரி, பொய் சொன்ன தன் கிட்ட விளையாடியது கடவுள்ன்னு உணர்ந்து அதே இடத்துலயே உளுந்தாண்டவர் கோயில்ன்னு ஒரு கோயிலையும் சிவபெருமானுக்காக கட்டினாராம். இப்படியொரு ஆச்சரியமான சம்பவம் நடந்ததால இந்த இடத்துக்கும் உளுந்தூர்பேட்டைன்னு பேர் வந்துச்சாம்.
குட்டீஸ் இந்த மாதிரி நிறைய செவி வழி கதைகள் நம்ம தமிழகத்துல இருக்கு. பல சமயங்கள்ல ஊரோட பெயர் காரணத்துக்கு இந்த கதைகள் முக்கியமான காரணமா இருக்கறத நாம பார்க்க முடியும். சில கதைகளுக்கு வரலாற்று சான்றுகள் அதாவது ஊரோட பெயர் பொறிச்ச செப்பேடு.. கல்வெட்டு.. பயணக்குறில்புகள் இதெல்லாம் கிடைக்கும். சில சமயங்கள்ல செவிவழி கதைகளாக மட்டுமே காலம்காலமா ஊரோட சேர்ந்து நிற்கும். எப்படியோ நமக்கு ஒரு சுவையா ஒரு கதை கிடைச்சிருச்சு.
இன்னொரு கதை கேளுங்க..
வெள்ளக்காரங்க நம்மள ஆட்சி செய்துட்டு இருந்த சமயம்,
திருவாரூர் பக்கத்துல இருந்த ஒரு கிராமத்துக்கு வந்தாராம் ஒரு வெள்ளக்காரர். ஊருக்கு வந்த அவருக்கு அது என்ன ஊர்ன்னு தெரியலையாம். அதனால அந்த இடத்தில தண்ணி பிடிச்சிக்கிட்டு இருந்த பெண்கள் கிட்ட
‘இது என்ன ஊரு?’ ஆங்கிலத்துல கேட்டாராம் வெள்ளக்காரர்.
அவர் பேசுனது புரியாம , தண்ணி பிடிச்சிட்டிருந்த ஒரு பெண்மணி தனக்கு தூரமா நின்னுக்கிட்டு இருந்த இன்னொரு பெண்மணிய கூப்பிட்டு , “அடி அக்கா மங்களம், இவர் என்ன சொல்றாரு?’ அப்படின்னு சத்தமா கேட்டாங்களாம். அந்த வெள்ளக்காரரும் , ‘ஓ அடியக்கமங்கலம்.. இதான் ஊர் பேரா?! நல்லது!’ ன்னு கிளம்பிட்டாராம். அப்போ இருந்து அடியக்கமங்கலம் அப்படிப்னே ஊர் பேராகிடுச்சாம் . இப்படி ஒரு கதை திருவாரூர் பக்கத்துல இருக்கிற அடியக்கமங்கலம் ஊருக்கு உண்டு.
உண்மையில் இறைவனது அடியவர்கள் வாழ்ந்த ஊர்- அடியவர்கள் மங்களம் அடியக்கமங்கலம் இப்போ ஆகிப்போச்சு. ஒரு வேடிக்கையான கதையும் உருவாச்சு!
மீண்டும் அடுத்த இதழில் இதே மாதிரி ஒரு சுவாரஸ்யமான கதையோடு கதைகதையாம் காரணமாம் பகுதில உங்கள சந்திக்கிறேன். வரட்டா சிட்டூஸ்..