ஒரு மலை அடிவாரத்தில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் நிறைய விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மற்ற உயிரினங்கள் எல்லாம் ஒற்றுமையாக ஒருத்தருக்கொருத்தர் உதவிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். நிறைய மரங்கள், பசுமையான புல்வெளிகள், செடி, கொடிகள் எல்லாம் அடர்ந்து இருந்ததால் அந்தக் காடு எப்போதும் பசுமையாகவே காட்சி அளித்தது.

அந்தக் காட்டில் அப்பு என்ற குட்டி யானை வசித்து வந்தது. அந்த யானைக் குடும்பத்தில் அப்பு தான் கடைக்குட்டி என்பதால் அப்பா, அம்மா, அண்ணன்கள் எல்லாருக்கும் பயங்கரச் செல்லம். எப்போது பார்த்தாலும் ஏதாவது குறும்பு செய்து கொண்டே இருக்கும்.

போகிற, வருகிற வழியில் இருக்கும் மரங்களை ஆட்டிக் கிளைகளை முறித்துக் போடும். சில சமயங்களில் மரக் கிளைகளில் இருக்கும் பறவைகளின் கூடுகள் கூட, அப்புவின் குறும்புத்தனத்தால் கீழே விழுவதுண்டு. அப்பு ஒன்றும் மோசமான குணமுடையவன் இல்லை. தான் செய்வது தவறு என்று அவனுக்குப் புரிவதில்லை. யாரும் அவனுக்கு எடுத்துச் சொல்வதுமில்லை.

ஆனால் எங்கேயாவது கூட்டோடு பறவைக் குஞ்சுகள் கீழே கிடந்து தவிப்பதைப் பார்த்தால் உதவி செய்ய எப்போதும் தயங்குவதுமில்லை. தானாகவே அவற்றை கவனமாகத் தூக்கி மரத்தில் உயரமான ஒரு கிளையில் வைத்து விட்டுத் தான் நகரும்.

அந்தக் காட்டின் நடுவில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தில் நிறைய மீன்கள் வசித்து வந்தன. அப்பு, அந்தக் குளத்தின் நீரைத் தனது தும்பிக்கையால் கலக்கி, மீன்களைக் கலவரப்படுத்தும். அப்புறம் தும்பிக்கையால் குளத்து நீரை உறிஞ்சி வெளியே துப்பும். சில சமயங்களில் அந்தத் தண்ணீருடன் குட்டிக் குட்டி மீன்களும் வந்து வெளியே கரையில் விழும்.

தரையில் விழுந்து துடிக்கும் மீன்களைப் பார்த்து அப்புவின் மனதில் தானாகவே இரக்கம் கசியும். தனது தும்பிக்கையால் மீன் குஞ்சுகளைப் பிடித்து மீண்டும் குளத்தில் விடும். இது போன்று பல சமயங்களில் நல்ல செயல்களையும், தவறான செயல்களையும் மாறி மாறிச் செய்து ஒரு குழப்பவாதியாகவே இருந்து வந்தது அப்பு.

அடிக்கடி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு வந்ததால் பல விலங்குகளுக்கு அப்புவைப் பிடிக்காமல் போனது. அப்புவுடன் ஓடியாடி விளையாடவும், பேசிச் சிரித்து மகிழவும் நண்பர்களே இல்லாமல் தனியாகத் தவித்தான்.

நாட்கள் போகப் போக அப்புவின் வயதை ஒத்த பல குட்டி விலங்குகளும் விலகிப் போகப் போக, அப்பு தனது குறும்புத்தனத்தையும், கலகலப்பான சுபாவத்தையும் மறந்து, சோர்ந்து போய்த் திரிந்தான். வழக்கம் போல செய்து வந்த ரகளைகளைக் கூட மறந்து அமைதியாகத் திரிந்து வந்தான்.

ஒரு நாள் குளத்தில் நீரை அருந்தி விட்டு வரும் வழியில் ஒரு காட்டுப் பூனை, ஒரு சிறிய பறவைக் குஞ்சைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. அந்தப் பறவையும் பூனையிடம் இருந்து தப்பிக்கப் போராடிக் கொண்டிருந்தது. அந்த முயற்சியில் அப்போது தான் புதிதாக முளைத்திருந்த அதனுடைய பிஞ்சு இறகுகள் பிய்ந்து போயின. அந்தப் பறவை பறக்க முடியாமல் அங்குமிங்கும் ஓடித் தப்பிக்கப் பார்த்தது. அந்தச் சமயத்தில் தான் நமது அப்பு அந்தப் பறவையைப் பார்த்தான்.

அப்புவின் மனதில் கருணை உணர்வு பொங்கியது. ஓடிப்போய் அந்தப் பூனையை விரட்டினான். அந்தப் பறவைக் குஞ்சு அப்பு யானையை நன்றியுடன் பார்த்தது.

Elephant
படம்: அப்புசிவா

“ரொம்ப நன்றி அண்ணா. நீங்க மட்டும் சரியான சமயத்தில் வந்து என்னைக் காப்பாத்தலைன்னா, அந்தப் பூனை இவ்வளவு நேரம் என்னைத் தின்னு ஏப்பம் விட்டிருக்கும். இப்போ என்னவோ நீங்க என்னைக் காப்பாத்திட்டீங்க. ஆனாலும் என்னோட இறக்கைகள் பிஞ்சு போச்சு. அவை திரும்ப வளருகிற வரைக்கும் என்னால பறக்க முடியாது. நடந்து, நடந்து நான் மெதுவாக போகும் போது எளிதில் மத்த விலங்குகளுக்கு இரையாயிடுவேன்”, என்று வருத்தப் பட்டது.

அப்புவுக்கு அதைப் பார்க்கப் பார்க்கப் பாவமாக இருந்தது. அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தது.

தனது தும்பிக்கையால் அந்தப் பறவையைத் தூக்கித் தன் முதுகில் உட்கார வைத்துக் கொண்டது.

“இனிமே உன்னோட இறக்கைகள் ரெண்டும் நல்லா வளந்து திரும்ப உன்னால பறக்க முடியற வரைக்கும் நீ என்னோட பொறுப்பு. நான் உன்னை ஜாக்கிரதையாப் பாத்துக்கறேன்”, என்று சொன்ன அப்பு, தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றியது. தான் போகும் இடங்களுக்கு எல்லாம் அந்தப் பறவைச் சிட்டுவை முதுகில் சுமந்து கொண்டே நகர்ந்தது.

ஓய்வெடுக்கத் தோன்றும் போது ஏதாவது மரத்தின் மேல் சிட்டுவை விட்டு விட்டு அப்பு, தானும் அதே மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொள்ளும். நாட்கள் பறந்தன. அப்புவுக்கும் சிட்டுவுக்கும் நல்ல நட்பு மலர்ந்து வந்தது. இவ்வளவு நாட்களாக நல்ல நண்பனே இல்லை என்ற குறையை, சிட்டு தீர்த்து வைத்தது. ஒரு நாள் சிட்டுவின் இறக்கைகள் முழுமையாக வளர்ந்து, சிட்டு பறக்கத் தயாரானது.

“இன்னைக்குத் தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனிமே நான் முன்னால் மாதிரி சுதந்திரமா ஆகாசத்தில பறந்து திரிய முடியும். புதுசு புதுசா நிறைய இடங்களைப் பார்க்க முடியும். அப்பு அண்ணா, இவ்வளவு நாட்கள் என்னைப் பாதுகாத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. உங்களுக்கு நான் ரொம்பத் தொல்லை கொடுத்திட்டேன் இல்லையா?”, என்றது சிட்டு.

ஆனால் அப்புவின் முகமோ வாடிப் போயிருந்தது.

“என்ன ஆச்சு அண்ணா? நான் சந்தோஷமா இருக்கும் போது நீங்க ஏன் இப்படி சோகமா இருக்கீங்க?”, என்று சிட்டு கேட்டது.

“இவ்வளவு நாளா எனக்கு ஒரு நல்ல நண்பன் இல்லைங்கற குறை உன் மூலமாத் தீந்தது. இப்ப நீயும் இங்கேருந்து கிளம்பிப் போகறயே? அது தான் வருத்தமா இருக்கு”, என்றான் அப்பு.

“அதைப் பத்திக் கவலையே படாதீங்க அண்ணா. நான் தினமும் உங்களை வந்து பாத்துட்டுப் போறேன். உங்களை மறக்கவும் மாட்டேன். உங்க நட்பையும் என்னைக்கும் விட மாட்டேன்”, என்று சொன்ன சிட்டு அங்கிருந்து சிறகடித்துப் பறந்து சென்றது.

சிட்டு வாக்களித்தபடியே தினமும் வந்து அப்புவைப் பார்த்து விட்டுப் போனது. அருகில் இருக்கும் கரும்புத் தோட்டம், நல்ல பழங்கள் விளையும் இடம், நல்ல பசுமையான இலை, தழைகள் கிடைக்கும் இடங்களை எல்லாம் கண்டுபிடித்து அந்தத் தகவல்களை அப்புவிடம் வந்து சொன்னதால் அப்புவுக்கும் தினமும் பிடித்தமான உணவு கிடைத்தது.

அப்புவும் இப்போது தனது குறும்புத்தனத்தைக் குறைத்துக் கொண்டு மற்ற விலங்குகளிடமும் பிரியமாக நடந்து கொண்டதால் நிறைய நண்பர்கள் கிடைத்து விட்டார்கள். எல்லோருமாகச் சேர்ந்து அந்தக் காட்டில் ஒற்றுமையாக விளையாடி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments