முன்பு ஒரு காலத்தில், ஒரு மரத்தில் ஒரு குட்டி இலை இருந்தது. அது அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டும், அழுது கொண்டும் இருந்தது.
“என்ன ஆச்சு?” என்று அதனிடம் ஒரு சிறிய கிளை கேட்டது.
“நான் ஒரு நாள் ஒன்னை இந்த மரத்துலேர்ந்து பிடுங்கித் தரையில தூக்கிப் போட்டுடுவேன்னு, இப்ப தான் காத்து எங்கிட்ட சொன்னுச்சு” என்றது குட்டி இலை.
இந்த விஷயத்தைச் சிறிய கிளை, பெரிய கிளையிடம் சொன்னது; பெரிய கிளை மரத்திடம் சொன்னது.
“பயப்படாதே; நல்லாக் கெட்டியாப் புடிச்சிக்கோ; நீயா விரும்புற வரைக்கும் போக மாட்டே” என்று மரம், அந்த இலையிடம் சொன்னது.
அதைக் கேட்ட பிறகு, இலைக்குப் பயம் நீங்கி பாதுகாப்பாக உணர்ந்தது. பெருமூச்சு விடுவதை நிறுத்தி விட்டது. பாட்டுப் பாடிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது.
ஒவ்வொரு முறை மரம் குலுங்கிய போதும், கிளைகள் எல்லாம் ஆடின. இலைகள் எல்லாம் குலுங்கி அசைந்த போதும், குட்டி இலை மகிழ்ச்சியாக நடனம் ஆடியது; பாட்டுப் பாடியது. தன்னை எதுவும் மரத்திலிருந்து பிடுங்க முடியாது என நினைத்தது. கோடை காலம் முடிந்து, அக்டோபர் மாதம் வரும் வரை, அந்த இலை அப்படியே இருந்தது.
இலையுதிர் காலம் வந்த போது, தன்னைச் சுற்றி இருந்த இலைகள் எல்லாம் மிக அழகாக மாறுவதை, அந்த இலை கவனித்தது. சில இலைகள் மஞ்சளாக மாறின; சில இலைகள் சிவப்பாக மாறின; மேலும் சில இலைகளில் வரி வரியாக இரண்டு நிறங்களும், சேர்ந்து இருந்தன.
“ஏன் இப்பிடி மாறுச்சு?” என்று இலை, மரத்திடம் கேட்டது.
“இந்த இலையெல்லாம் பறக்கத் தயார் ஆயிடுச்சி. பறக்கப் போற மகிழ்ச்சியில, இந்த அழகான நிறங்களுக்கு மாறிடுச்சி” என்று மரம் சொன்னது.
அந்தக் குட்டி இலைக்கும் பறக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதுவும் அழகான பொன் நிறத்துக்கு மாறிவிட்டது.
ஆனால் மரத்தின் கிளைகள் பளிச்சென்று இல்லாமல் கருப்பும், சாம்பலும் கலந்த நிறத்தில் இருந்தன.
“ஏன் நாங்க மட்டும் பொன் நிறத்தில் இருக்கிறோம்? நீங்க மட்டும் பளிச்சுன்னு இல்லாம, சாம்பல் நிறத்துல இருக்கீங்க?” என்று கிளைகளிடம் அந்த இலை கேட்டது.
“வேலை செய்றதுக்கான உடையை, நாங்க போட்டு இருக்கணும்; ஏன்னா எங்களுக்கு இன்னும் வாழ்வு இருக்கு. ஒங்களுக்கான வேலை முடிஞ்சிட்டுது; அதனால நீங்க விடுமுறை கொண்டாட்டத்துக்கான உடையை போட்டு இருக்கீங்க” என்றது கிளை.
அப்போது காற்று வீசியது. அந்த இலையைத் தூக்கிக் கொண்டு சென்றது. காற்றில் தீச்சுடர் போல் அந்தப் பொன்னிற இலை பலமுறை சுழன்று சுழன்று பறந்து சென்றது.
ஒரு வேலி ஓரத்தில் காற்று மெதுவாக அந்த இலையைக் கீழே இறக்கியது. அங்கே நூற்றுக்கணக்கான இலைகள் கிடந்தன. கீழே விழுந்த அந்த இலை, கனவு காணத் துவங்கியது.
அது என்ன கனவு கண்டது என்பதைச் சொல்ல, அதற்குப் பிறகு கண் விழிக்கவே இல்லை.
(ஆங்கிலம் – ஹென்றி வார்டு பீச்சர்)
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.