ஓவியம் - அப்பு சிவா
ஓவியம் – அப்பு சிவா

புலி உறுமும் சத்தமும், பல நரிகள் சேர்ந்து ஊளையிடும் சத்தமும் கேட்டு அந்தக் குழந்தைகள் பயந்து போனார்கள். எல்லோருடைய முகங்களும் பயத்தால் இருண்டு போயின. சிலருக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

தாமரை பயப்படவில்லை. அதே போல நந்து, சுந்துவும் பயப்படவில்லை. தாமரைக்கு வனத்தைக் காப்பாற்ற வேண்டும், வனத்தை அழிப்போரை தண்டிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு. நந்து, சுந்துவிற்கு எப்போதும் துணிச்சல் அதிகம். எது வந்தாலும் நேருக்கு நேர் மோதிப் பார்த்து விடலாம் என்ற மனப்பான்மை. மற்ற குழந்தைகள் எல்லாருக்கும் பயம் தான்.

” பயப்படாதீங்க. திடீர்னு சத்தம் வருது. திடீர்னு நின்னு போகுது. எனக்கென்னவோ யாரோ நம்மை பயமுறுத்தறதுக்காக வேணும்னு செய்யறாங்கன்னு நினைக்கிறேன். இருங்க, பொறுமையாப் பாக்கலாம் ” என்று சொல்லி விட்டு தாமரை, சுற்றி முற்றிப் பார்த்தாள்.

” தாமரை, இதோ பாரு” என்று நந்து அருகில் இருந்த மரத்தின் மீது பொருத்தப் பட்டிருந்த சிறிய செவ்வக வடிவ சாதனத்தைச் சுட்டிக் காட்டினான். அந்த மரத்தின் கீழே போய் நின்று கொண்டு அவர்கள் ஆராய்ந்தபோது, புலிகளின் உறுமலும், நரிகளின் ஊளைச் சத்தமும் இன்னமும் அதிகமாக அவர்களுக்குக் கேட்டது.

” இதுக்குப் பேரு ஆம்ப்ளிபையர் தானே? சத்தத்தை அதிகரித்து ஒலி பரப்பும் சாதனம். நான் இதைப் பத்தி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். தாமரை சந்தேகப்படறது ரொம்ப ரொம்ப சரி தான்” என்றான் சுந்து.

” இனிமே பயப்படத் தேவையில்லை. தைரியமா முன்னேறலாம். ஆனா எச்சரிக்கையோட செயல்பட வேண்டிய நேரம் இது. நாம உள்ளே நுழைஞ்சிருக்கறது அந்த கிரிமினல்களுக்கு இவ்வளவு நேரம் தெரிஞ்சு இருக்கலாம்” என்றாள் தாமரை. திட்டமிட்டபடியே ஐந்து, ஐந்து பேர்களாக மூன்று குழுக்கள் பிரிந்தன. மூன்று வேறு வேறு திசைகளில் நடக்க ஆரம்பித்தார்கள். பச்சை நிறத்தில் உடை அணிந்திருந்ததால் மரங்களின் ஊடே ஒளிந்து ஒளிந்து முன்னேற ஆரம்பித்தார்கள். இளங்கன்று பயமறியாது என்பதை நிரூபிக்க அந்தச் சிறார்கள் தயாரானார்கள்.

தாமரை ஏதோ யோசித்தபடி நடந்தாள். ‘ ‘தேவைப்பட்டால் கோல்டன் தமிழச்சியாக மாற வேண்டியிருக்கலாம். அதுனால இந்த க்ரூப்பில் இருந்து பிரிஞ்சு போறது நல்லது’ என்று நினைத்த தாமரை,

” என்னோட வாட்டர் பாட்டிலில் இருக்கற தண்ணியில பூச்சி என்னவோ மிதக்குது. நீங்க எல்லாரும் முன்னாடி நடந்துட்டே இருங்க. நான் ஆற்றுத் தண்ணியை பாட்டிலில் நிரப்பிட்டு வரேன் ” என்றாள் தாமரை.

” இல்லை தாமரை. உன்னை மட்டும் தனியா விட்டுட்டு எதுக்குப் போகணும்? நாங்களும் உன்னோடயே வரோம். சேந்தே ஆத்தாங்கரைக்குப் போலாம். வா” என்று குழுவில் இருந்தவர்கள் சொல்ல,

” வேணாம்பா. நம்ம கிட்ட அதிக டயம் இல்லை. எப்படியும் சாயந்திரத்துக்குள்ள நாம செய்ய நினைச்சதை செஞ்சு முடிக்கணும். நீங்க நடங்க. நான் வேகமாப் போயிட்டுத் திரும்பிடுவேன்” என்று சொன்ன தாமரை, அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் ஆற்றங்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வேறு வழியில்லாமல் அந்தக் குழுவினரும் எதிர்த்திசையில் முன்னேற ஆரம்பித்தார்கள்.

தாமரை ஆற்றங்கரை நோக்கிப் போவதாகச் சில அடிகள் போக்குக் காட்டி விட்டு மீண்டும் வனத்திற்குள் நுழைந்தாள். மற்றவர்கள் போன எந்தத் திசையிலும் போகாமல் புதியதொரு பாதையில் நடக்க ஆரம்பித்தவள், சிறிது தூரம் சென்றதும் ஒரு மிகப்பெரிய மரத்தடியில் வந்து நின்றாள். சரசரவென்று மரத்தில் ஏறியவள் மரத்தின் உச்சியை அடைந்து சுற்றிலும் நோட்டம் விட்டாள்.

காலை நேரம் என்பதால் கொஞ்சம் வெளிச்சம் இருந்தது. சற்றுத் தொலைவில் சில ஆட்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டே காட்டின் உட்பகுதியை நோக்கி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்த தாமரை, கீழே குதித்து வேகமாக அந்த ஆட்களை அவர்களுக்குத் தெரியாமல் பின் தொடர ஆரம்பித்தாள்.

அவர்கள் நீண்ட தொலைவு நடந்து போய்க் காட்டின் உட்பகுதியை அடைந்தார்கள். அங்கே மரங்கள் அடர்த்தியாக இருந்ததால் அதிக வெளிச்சம் இல்லை. அந்தக் குறிப்பிட்ட  இடத்தை அடைந்ததும் தங்கள் இடுப்பில் சொருகியிருந்த கோடாரியை எடுத்து மரங்களை வெட்ட ஆரம்பித்தார்கள். தாமரை ஒரு பெரிய மரத்தின் பின்னால் ஒளிந்து நின்றபடி தனது மொபைல் கேமராவை உபயோகித்து அவர்கள் மரம் வெட்டுவதைப் படம் பிடித்தாள்.

மரம் வெட்டிக் கொண்டிருந்தவர்கள் திடீரென மரம் வெட்டுவதை நிறுத்தி விட்டுக் கூர்ந்து கவனித்தார்கள். மிக அருகில் பேச்சுக்குரல்கள் கேட்டன.

இரண்டு, மூன்று ஆட்கள் கைகளில் சாட்டையுடனும், பெரிய, பெரிய தடிக் கம்புகளுடன் அந்தப் பகுதிக்கு வந்தார்கள். பார்க்கவே முரட்டுத்தனமாக இருந்தார்கள்.

” என்ன வேலையை நிறுத்திட்டு வேடிக்கை பாத்திட்டிருக்கீங்களா? ரொம்ப நாளாச் சாட்டையை உபயோகிக்கலையேன்னு யோசிச்சேன்”

என்று சொன்னபடி தனது சாட்டையை ஒரு மரம் வெட்டும் தொழிலாளி மீது வீசினான்.

அப்போது எங்கிருந்தோ வந்த கவண்கல் ஒன்று அவனது கையைத் தாக்க, வலியுடன் அந்த முரடன் கையை உதறினான். அவன் கையிலிருந்த சாட்டை கீழே விழுந்தது.  ஒரு நொடியில் சமாளித்துக் கொண்ட அந்த முரடன் தன்னைச் சுற்றியுள்ள பகுதியைப் பார்வையால் அலசினான்.

ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த நந்து அவன் பார்வையில் சிக்கி விட்டான். நந்துவின் அருகில் போய் அவனுடைய காதைத் திருகி, அவனை வெளியே இழுத்து வந்தான்.

நந்து வலியுடன் கத்த, நந்துவுடன் வந்த மற்ற நான்கு நண்பர்களும் ஓடி வந்து நந்துவைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியபடி நின்றார்கள்.

” அட யாருப்பா நீங்கள்ளாம்? காட்டுக்குள்ள எதுக்கு வந்தீங்க? என் மேலே கல்லை எதுக்கு எறிஞ்சீங்க? சரி, பரவாயில்லை. சத்தம் போடாமக் காட்டை விட்டு வெளியே போயிடுங்க. எங்க ஆட்களை அனுப்பி வழி காட்டச் சொல்லறேன்” என்று தன்மையாக அந்த முரடன் பேசினான்.

” நாங்க அப்படி உங்களுக்கு பயந்து போறதுக்காக உள்ளே வரலை. நீங்க சட்டத்தை மீறி மரங்களை வெட்டிக் காட்டை அழிக்கறதைத் தடுக்க வந்திருக்கோம். உங்களை எல்லாரையும் வனத்துறை அதிகாரிகள் கிட்ட மாட்டிவிடப் போறோம்” என்று சுந்து வீராவேசமாக முழங்கினான். அதைக் கேட்ட முரடனுக்கு பயங்கரக் கோபம் வந்துவிட்டது.

” என்னடா திமிராப் பேசறயே? பொடிப் பசங்க ஏதோ தெரியாம இந்தப் பக்கம் வந்துட்டீங்க. நல்லதனமாப் பேசிப் புரிய வச்சு அனுப்பிடலாம்னு பாத்தா சட்டம், கிட்டம்னு எங்கிட்டயே லா பாயிண்ட் பேசறயா? உங்களை என்ன பண்ணறது?…. ” என்று யோசித்தவன் தனது ஆட்களைப் பார்த்துக் கண்களால் ஏதோ சமிக்ஞை செய்ய, அந்த முரடர்கள் நந்து, சுந்துவைச் சேர்த்து ஐந்து பேரையும் அருகில் இருந்த மரங்களில் கட்டிப் போட்டார்கள்.

தங்களை அவர்கள் கட்டிப் போடுவதற்குள் நந்துவும், சுந்துவும் வாயில் விரல்களை வைத்து பலமாகச் சீழ்க்கை அடித்தான். அந்த சத்தத்தைக் கேட்டு திபுதிபுவென்று யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது. கொஞ்ச நேரத்தில் மற்ற குழந்தைகளும் அங்கே வந்து சேர்ந்தார்கள். இப்போது தாமரை ஒருத்தியைத் தவிர மீதிக் குழந்தைகள் அனைவரும் அங்கே குழுமி விட்டார்கள்.

அவர்களைப் பார்த்து முதலில் திகைத்து நின்றார்கள் அந்த முரடர்கள். ஆனால் அவர்களுக்குத் தலைவன் போல இருந்தவன், தன் கையில் இருந்த ஒரு சிறிய கருவியை அழுத்த அந்த இடத்தில் அலாரச் சத்தம் ( சைரன்) கேட்க ஆரம்பித்தது. சாவதானப்படுத்த அபாயச்சங்கு ஊதுமே, அது போலவே!

உடனே அங்கு இன்னும் ஐந்து முரடர்கள் வந்து சேர்ந்து கொண்டார்கள். மொத்தம் பதினான்கு சிறுவர், சிறுமிகள். கிட்டத்தட்ட எட்டு முரடர்கள். சிறார்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.

” அட, இது பெரிய க்ரூப்பா இருக்கே? நாம நெனைச்சதை விட இந்தச் சின்னப்பசங்க ஆபத்தானவங்க போல இருக்கே! இப்ப என்ன செய்யலாம்? இவ்வளவு பேர் தானா? இல்லை உங்க கூடப் பெரியவங்க யாராவது வந்திருக்காங்களா? யார் உங்களை இங்க அனுப்பியது? ” என்று அந்த முரடர்கள் தலைவன் அவர்களை அதட்டினான்.

” பதில் சொல்லறீங்களா? இல்லைன்னா… … ” என்று சொல்லிக் கொண்டே அந்தக் குழந்தைகளிலேயே இளையவளாகத் தெரிந்த ஒரு சிறுமியைத் தன் பக்கம் இழுத்து,

” இவளுக்குச் சாட்டை அடியோட ருசியைக் காட்டட்டுமா? ஓர் அடிக்கே இந்தக் குட்டிப் பொண்ணு சுருண்டு விழுந்துருவாளே? பரவாயில்லையா? ” என்று எகத்தாளமாகக் கேட்க, நந்து பதில் சொல்ல முன்வந்தான்.

” அவளை விட்டுருங்க. நீங்க கேக்கற கேள்விக்கு நான் பதில் சொல்லறேன்” என்று சொன்னான்.

” எத்தனை பேர் காட்டுக்குள்ள வந்தீங்க?”

” இங்க இருக்கோமே? இவ்வளவு பேர் தான்? “

” வேற யாராவது பெரியவங்க உங்க கூட வந்தாங்களா? “

” இல்லை. வரலை”

” எதுக்கு இத்தனை பேர் சேந்து வந்தீங்க? “

” அது வந்து… .. ” என்று நந்து தயங்க, அந்த முரடன் கையில் இருந்த சாட்டையைச் சுழற்றுவது போல ஓங்கினான்.

” வேண்டாம். வேண்டாம். சொல்லிடறேன். நாங்க ஸ்கூல் பாடத்தில இப்போ சமீபத்தில தான் காடுகளைப் பக்திப் படிச்சோம். மரங்களைக் காப்பாத்த வேண்டியது நம்ப கடமைன்னு தெரிஞ்சுகிட்டோம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி எங்க கிராமத்தைச் சேந்த ஒருத்தர், இந்தக் காட்டில மரங்களை யாரோ வெட்டற மாதிரி சந்தேகமாக இருக்குன்னு சொன்னாரு. நாங்க இன்னைக்கு லீவு நாளுங்கறதுனால அதை செக் பண்ண இங்க வந்தோம்” என்று கோர்வையாக நந்து சொல்லி முடித்தான். தாமரையைப் பற்றி நல்ல வேளையாக ஒன்றும் சொல்லவில்லை.

தாமரை ஒளிந்திருந்து அத்தனை சம்பவங்களையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்…

What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments