ஒரு காட்டில் சின்னு, சின்னு என்கிற சிட்டுக்குருவி வசித்து வந்ததாம். ரொம்ப சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் சிரித்துக் கொண்டே திரியும் சின்னுவைக் காட்டில் இருந்த எல்லா விலங்குகளுக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்குமாம்.

‘புதுப் புது இடங்களுக்குப் போகணும், நிறைய சாகசங்கள் செய்யணும்’ என்றெல்லாம் சின்னுவின் மனதில் எப்போதும் ஆசை இருக்கும். தன்னுடைய அம்மா, அப்பாவிடம் புலம்பிக் கொண்டே இருக்கும்.

” எனக்கும் ரொம்ப ரொம்ப உயரத்தில் பறக்கணும். மேகங்களைத் தொடணும். வெள்ளை நிறப் பஞ்சு மிட்டாயைப் பிச்சுப் பிச்சு போட்ட மாதிரி வானத்தில் இருக்கற மேகங்கள் எவ்வளவு அழகா இருக்கு! மெத்து மெத்துன்னு மெத்தை மாதிரி இருக்குமான்னு எனக்கு அதில படுத்துப் பாக்கணும். என்னை அவ்வளவு உசரத்துக்குக் கூட்டிட்டுப் போங்க” என்று தினம் தினம் தன்னுடைய அம்மா, அப்பா கிட்ட அடம் பிடிக்கும்.

” ரொம்ப உசரத்துல பறக்கற கழுகு, பருந்து கூட வானத்தைத் தொட முடியாதுன்னு சொல்லுவாங்க. அவங்களை மாதிரி உடல் பலமோ இல்லை உசரத்துல பறக்கற மாதிரி அமைஞ்ச இறக்கைகளோ இல்லாத நாம எப்படிப் பறக்க முடியும்? செய்ய முடியாத விஷயத்தில் வீண் ஆசை வேணாம் ” என்று சின்னுவின் அம்மா என்னவெல்லாம் சமாதானம் சொல்லி சின்னுவின் மனதை மாற்றப் பார்த்தது. ஆனால் முடியவில்லை.

” நீங்க தானே எனக்கு வானத்தைப் பத்தி நிறையக் கதைகளைச் சொல்லி என் மனசில ஆசையைக் கிளப்பி விட்டீங்க? இப்போ இந்த மாதிரி சொல்லறீங்களே? அந்தப் பஞ்சு மிட்டாய்க் கதையைத் திரும்பச் சொல்லுங்க.”

” அதுவா? சரி, சொல்லறேன். எங்கம்மா எனக்கு சொன்னதை நான் உனக்கு சொல்லறேன். ரொம்ப வருஷத்துக்கு முன்னால வானத்தில் ஒரு தேசம் இருந்துச்சாம். அங்கே இருந்த ஒரு வீட்டில அம்மா, குழந்தைகளுக்காக  ஏதாவது வாங்கணும்னு கடைவீதிக்குப் போனாங்களாம்.

October Story 1
படம்: அப்புசிவா

ஒருத்தன்  கடை வீதியில் பஞ்சு மிட்டாய் வித்திட்டு இருந்தானாம். ஆனா அந்த மிட்டாய் ரோஸ் கலர் இல்லாம வெள்ளையா இருந்துச்சாம். ஏன் இப்படி வெள்ளையா இருக்குன்னு கேட்டதுக்கு, ‘ இங்கே ஒரு ராக்ஷஸன் சுத்திட்டு இருக்கான். அவன் வந்து என் கிட்ட இருந்த ரோஸ் நிறப் பொடியை உடம்பில் பூசிட்டுப் போயிட்டான். நிறையக் குழந்தைகளைப் பிடிச்சிட்டுப் போகப் போறானாம். அவங்களோட கவனத்தை ஈர்க்கறதுக்காக அந்த நிறமாம். நான் என்ன பண்ணுவேன்? வேற பொடி இல்லையே? அதுனால இன்னைக்குப் பஞ்சு மிட்டாய் எல்லாம் வெள்ளை நிறம் தான்’ அப்படின்னு வருத்தத்தோட சொன்னானாம்.

ராக்ஷஸனைப் பத்திக் கேள்விப்பட்ட அம்மா, ‘ அச்சச்சோ, என் குழந்தைங்க வீட்டில் தனியா இருக்காங்களே? நான் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்’னு சொல்லிட்டு அந்த வியாபாரி கிட்ட இருந்த அத்தனை பஞ்சுமிட்டாயையும் வாங்கிட்டு வீட்டுக்கு வேகமாகத் திரும்பினாங்களாம். ஆனா அதுக்குள்ள அந்த ராக்ஷஸன் அவங்க வீட்டுக்குப் போய் அங்கேயிருந்த குழந்தைகளைத் தூக்கிட்டுப் போயிட்டானாம்.

அவங்க அழுதுக்கிட்டே வான வீதியில் தேடி அலையற சமயத்தில் அவங்க கையில் இருந்த வெள்ளைப் பஞ்சு மிட்டாய் வானத்தில் சிதறினதுல மேகங்கள் உருவாச்சாம். அவங்க கண்ணீர் தான் மழையாப் பெய்யுதாம். ராக்ஷஸன் வரும் போது அவன் கூட அவங்க சண்டை போடும் போது தான் மின்னல் தோணுதாம். இடிச் சத்தமும் கேக்குமாம்”

” அப்படின்னா இன்னமும் அந்தக் குழந்தைங்க கிடைக்கலையா? மேகமும் இருக்கு. மழையும் இன்னமும் பெய்யுதே? “

” இல்லை. எங்கயோ தொலைதூரத்தில் ஒளிச்சு வைச்சுட்டான் போல இருக்கு. ஒருவேளை பூமியில் ஒளிச்சு வச்சிருப்பானோ? ” என்று சிரித்துக் கொண்டே சின்னுவின் அம்மா சொன்னது.

” இந்தக் கதை கற்பனை தானே? மழை பெய்யறதுக்கு, இடி, மின்னல் வரதுக்கெல்லாம் வேற காரணம் இருக்குன்னு கிளி அண்ணா எனக்கு சொன்னாங்களே? “

” ஆமாம், ஆமாம், சும்மாக் கற்பனை தான் இது. சரி, போய் விளையாடு” என்று சின்னுவை அனுப்பி விட்டுக் குழந்தைகளுக்கு இரை தேடக் கிளம்பியது சின்னுவின் அம்மா.

விளையாடும் போது தான் சந்தித்த கழுகு, பருந்து கிட்டல்லாம் , ” என்னையும் உசரத்துக்குக் கூட்டிட்டுப் போங்க கழுகு மாமா, பருந்து மாமா, ப்ளீஸ், ப்ளீஸ். எனக்கு மேகங்களைத் தொட்டுப் பாக்கணும் ” என்று கெஞ்சியது சின்னு.

” சரி, ரொம்ப நாளா நீயும் கேட்டுட்டே இருக்கே. இன்னைக்கு ராத்திரி எல்லாரும் தூங்கினதுக்கு அப்புறமாத் தனியாக் கிளம்பி வா. நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லி விட்டு, கழுகு அங்கிருந்து பறந்தது.

அன்னைக்கு ராத்திரி திட்டம் போட்டபடி கிளம்பி வந்த சின்னு, கழுகின் முதுகில் உட்கார்ந்து பறக்க ஆரம்பித்தது. கழுகும் தன்னால் முடிந்த உயரத்தில் பறந்தது. ஆனாலும் அவர்களால் மேகத்தைத் தொட முடியவில்லை.

அப்போ திடீர்னு புயற்காத்து வீச, கழுகு மேலே இருந்த சின்னு தடுமாறித் தன்னோட பிடியை விட்டுடுச்சு. ரெண்டு பேரும் ரெண்டு பக்கம் பிரிஞ்சுட்டாங்க. சின்னு பயத்துல கண்ணை மூடிக்கிச்சாம். கண்ணைத் திறந்து பாத்த போது ஒரு மேகத்து மேல கிடந்ததாம். சின்னுவுக்கு ஒரே சந்தோஷம். ஆசைப்பட்ட படி மேகத்தைத் தொட்டாச்சே?

மேகத்துல குதிச்சு ரொம்ப நேரம் விளையாடினதுக்கு அப்புறம் சின்னுவுக்குப் பசிக்க ஆரம்பிச்சதாம். அப்போ அந்தப் பஞ்சு மிட்டாய் மாதிரி இருந்த மேகத்தைப் பிச்சுப் பிச்சுத் தின்னுச்சாம். வயிறு ரொம்பினதும் அப்படியே மேகத்து மேலயே தூங்கிடுச்சாம்.

அடுத்த நாள் காலையில் கண்ணை முழிச்சுப் பாத்தா, சின்னு தன்னோட கூட்டுக்குள்ள இருந்துச்சாம்.

” நான் எப்படி இங்கே திரும்பி வந்தேன்? ராத்திரி வானத்துக்குப் போய், மேகத்துல விளையாடினேனே!? ” என்று அம்மாவிடம் கேட்க, அம்மாவோ, ” என்ன கனவு, கினவு கண்டயா? வானமாவது? மேகமாவது? ” என்று கோபித்துக் கொண்டது.

” இல்லை, நான் நேத்து ராத்திரி நிஜமாவே கழுகு மாமா கூட வானத்துக்குப் போனேன். பொய் சொல்லலை நான் ” என்று கத்தியது சின்னு. அப்போது அந்தப் பக்கமாகப் பறந்து வந்த கழுகு, சின்னுவைப் பார்த்து ரகசியமாகக் கண்ணடித்து விட்டு, சிரித்துக் கொண்டே பறந்து சென்றது . சின்னு தனது அனுபவத்தை மனதில் அசை போட்டபடி உட்கார்ந்திருந்தது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments