அன்று பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி நாள். அவர்களுக்குப் பள்ளியில் பிரிவுபசார விழா நடந்து கொண்டிருந்தது.
அன்று தான் பள்ளியின் சிறந்த மாணவியும் அறிவிக்கப் போவதால் மாணவ மாணவிகளிடையே பயங்கர எதிர்பார்ப்பு நிலவியது. அந்த அறிவிப்பு நிகழப் போகும் அந்தத் தருணத்திற்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
மாணவர்கள் மத்தியில் அவ்வளவு மதிப்பு வாய்ந்த விருது. அதனால் தான் அவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவிக்கு ஒரு சான்றிதழும் கேடயமும் கிடைப்பதோடு மேற்படிப்பிற்கான ஒரு வருடக் கல்விச் செலவு முழுவதையும் பள்ளி நிர்வாகத்தினர் ஏற்றுக் கொள்வார்கள்.
மதிப்பெண்கள் மட்டும் வைத்துப் பார்க்காமல், நடவடிக்கை, படிப்பைத் தவிர மற்ற துறைகளில் காட்டும் ஆர்வம், ஆசிரியர்களிடமும் மற்ற மாணவ மாணவியருடனும் பழகும் முறை. நடத்தை என்று பல்வேறு விஷயங்களிலும் மதிப்பீடு செய்து ஒரு தனிப்பட்ட குழு அந்தச் சிறந்த மாணவன் அல்லது மாணவியின் பெயரைப் பள்ளி நிர்வாகத்திற்குப் பரிந்துரைக்கும்.
எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணம் வந்துவிட்டது. அறிவிப்பைத் தர மேடையில் பள்ளி முதல்வர் மைக் அருகில் வந்து விட்டார்.
” இந்த வருடத்தின் சிறந்த மாணவி விருது பெறுபவர் மிஸ்.இந்துமதி”,
என்று சொல்ல மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் நிறுத்தாமல் கரவொலிகளை எழுப்ப அந்த அரங்கமே அதிர்ந்தது.
விருதினை வாங்கிக் கொள்வதற்காக இந்துமதி தனது ஊன்றுகோல்களின் உதவியோடு மேடைக்குச் சென்றாள்.
ஆமாம்; இந்துமதி ஒரு மாற்றுத் திறனாளி. சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில் வலது காலை முழங்கால் முட்டிக்குக் கீழே இருந்த பகுதியை இழந்திருந்தாள். செயற்கைக் கால் பொருத்தப் பட்டிருந்தது.
விளையாட்டுத் துறை ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றிலும் பங்கு கொண்டு
பல்வேறு பரிசுகளையும் வெற்றி பெற்றவள். வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படாமல் எல்லாப் போட்டிகளிலும் இந்துமதி ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் பழக்கம் உடையவள்.
சக மாணவர்களுக்கு உதவி செய்யவோ இல்லை ஆசிரியர்களிடம் பணிவுடன் நடந்து கொள்வதற்கோ என்றுமே இந்துமதி தவறியதில்லை.
விருதினை விழாவிற்கு வருகை தந்திருந்த பிரபலத்தின் கையால் வாங்கிக் கொண்டு நன்றியுரை வழங்குவதற்காக மைக்கின் அருகே வந்து நின்றாள்.
” என்னுடைய வெற்றிக்கு முழுவதும் காரணமாக இருப்பது என்னுடைய வகுப்புத் தோழி சிந்துஜா தான். அவளுக்குத் தான் முதலில் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்”,
என்று இந்துமதி தனது தன்றியுரையைத் தொடங்கினாள். எல்லோருக்கும் பயங்கர அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யம். வியப்புடன் இந்துமதி பேசுவதை கவனித்தார்கள்.
சிந்துஜாவும் நல்ல படிப்பாளி மற்றும் திறமைசாலி தான். ஆனாலும் சிந்துஜா எதற்கெடுத்தாலும் இந்துமதியோடு போட்டி போடுவாள். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூடச் சண்டை போடுவாள். சில சமயம் அவர்கள் கலந்து கொண்ட போட்டிகளில் எதிலாவது சிந்துஜாவிற்குப் பரிசு கிடைக்காமல் இந்துமதிக்குப் பரிசு கிடைத்தால் நடுவர்களிடம் சென்று விவாதம் செய்வாள். அவர்களுடைய முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்து எதிர்த்துப் போராடுவாள்.
இந்தக் காரணங்களால் தான் அனைவருக்கும் ஆச்சர்யம். இந்துமதி தனது உரையைத் தொடர்ந்தாள்.
” நீங்கள் அனைவருமே என்னைக் கருணையுடனும் அனுதாபத்துடனும் தான் பார்த்தீர்கள். ஆனால் எனது அருமைத் தோழி சிந்துஜா மட்டும் தான் என்னை அவளுக்கு சமமாகக் கருதி என்னுடன் போட்டி போட்டாள். அவளுடைய அந்த அணுகுமுறை தான் எனக்கு சுயபச்சாதாபம் ஏற்படாமல் தடுத்து என்னை இயல்பாக நடமாட வைத்தது. அதனால் சிந்துஜாவிற்குத் தான் எனது முதல் நன்றி”,
என்று சொல்லி விட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் நன்றி கூறி விட்டுப் பரிசுடன் கீழே இறங்கிய இந்துமதியை சிந்துஜா ஓடி வந்து கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள். தன்னை வெறுத்த அவள் மனதையும் தனது அன்பால் இந்துமதி வென்று விட்டாள். இனி அந்தத் தோழிகளின் நட்பு என்றும் தொடரும்.
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.