திண்டுக்கல்லைச் சொந்த ஊராகக் கொண்ட முனைவர் வே.வசந்திதேவி வரலாற்றில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்நாட்டின் மூத்த முக்கிய கல்வியாளர்களில் ஒருவரான இவர், கல்லூரிப் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியவர்.1992-98ஆம் ஆண்டுகளில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இரண்டு முறை பதவி வகித்த பெருமைக்கு உரியவர்.
அவர் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்த காலத்தில், பல முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆய்வகத்திலிருந்து களத்திற்கு (Lab to Land) எனும் தலைப்பில் கல்வியாளர், மாணவர், ஆசிரியர், சமூகச்செயற்பாட்டாளர் ஆகியோரை அழைத்துக் கருத்தரங்குகள் நடத்தினார். அவற்றில் பெறப்பட்ட படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றியமைத்தார். கல்வி வணிகமயமாவதைத் தடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் வலியுறுத்தினார்.
மேலும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர், மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவர், தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் எனப் பல்வேறு உயரிய பொறுப்புகளில் பணியாற்றியவர். கல்வி உரிமை, மனித உரிமை, விளிம்புநிலைச் சமூகங்களின் மேம்பாடு, பெண் விடுதலை, சூழல் பாதுகாப்பு எனப் பலத் தளங்களில் பணியாற்றிச் சிறந்த பங்களிப்பை நல்கியுள்ளார்.
“இன்று நம் அனைவர் முன் நிற்கும் முக்கிய பொறுப்பு, இன்றைய கல்வி அமைப்பை முழுதும் உடைத்தெறிந்து, மாற்று அமைப்பைக் கட்ட வேண்டும். நம் அரசியல் சாசனக் கனவுகளை மீட்டெடுக்க வேண்டும்; ஜனநாயக இந்தியா, சுதந்திரம், சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய ஆதார விழுமியங்களைச் சமரசமின்றி நிறுவும் கல்வியை, மனித நேயக் கல்வியை நாட்டின் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறப்புரிமை ஆக்க வேண்டும்” என்கிறார் முனைவர் வே,வசந்திதேவி.

தற்போது பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக இருக்கும் இவர், அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் தள்ளாத முதுமையிலும் ஓயாமல் பாடுபடுகிறார். ‘மக்கள் மயமாகும் கல்வி’, ‘பெண்ணுக்கு ஒரு நீதி’, ‘கல்வி ஓர் அரசியல்’ என்பவை இவர் எழுதியுள்ள முக்கிய நூல்கள்.