ரயிலின் நண்பர்கள் – 7

சிறுவனின் தாத்தாவாக அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தது வேறு யாருமில்லை, ரயில் நிலையத்தில் அவர்கள் தினமும் சந்திக்கும் அதே பெரிய மனிதர்தான்!

“அம்மா! இவரைத் தெரியலையா உங்களுக்கு? இவர் தான் உங்களுக்கு உடம்பு சரியில்லாதப்ப உதவி பண்ணின தாத்தா. அந்த எழுத்தாளருடைய குடும்பத்தையும் இவர் தான் கண்டுபிடித்துத் தந்தார்” என்றாள் ராபர்ட்டா.

“ஜிம் உங்களோட பேரனா? ஆச்சரியமா இருக்கு!” என்றான் பீட்டர். “ஆமாம்!” என்று அதை ஆமோதித்தனர் ராபர்ட்டாவும் ஃபிலிஸும்.

“உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்! நீங்க எங்க கூட சாப்பிட்டுட்டு தான் போகணும்” என்று அம்மா பெரிய மனிதரை வேண்டிக் கேட்டுக்கொண்டார்.

“அதுக்கென்ன! சாப்பிட்டுட்டே போறேன்” என்று இயல்பாக அமர்ந்த பெரிய மனிதர் அவர்களது வீட்டையும், அதிலிருந்து எளிமையான பொருட்களையும் உற்றுக் கவனித்தார்.

“எனக்கு வேலை விஷயமா அடிக்கடி வீட்டை விட்டு வெளியே போக வேண்டியதிருக்கும். என்னால ஜிம்மை பாத்துக்க முடியாது. அதனால பேசாம ஜிம் இங்கேயே இருக்கட்டுமே! நீங்க ரொம்ப திறமைசாலியாவும் அன்பானவங்களாவும் இருக்கீங்க. உங்களுக்கு உதவியா நான் ஒரு பணிப்பெண்ணையும் ஒரு சமையல்கார அம்மாவையும் அனுப்புறேன்” என்றார் ஜிம்மின் தாத்தா. அனைவருக்கும் அது நல்ல யோசனையாகவே தோன்றியது.

“நாங்க ஸ்கூலுக்குப் போகும் பொழுது அம்மா பாத்துக்குவாங்க. நாங்க ஸ்கூல் விட்டு வந்த உடனே ஜிம் கூட செஸ் விளையாடுவோம், கதை படிப்போம். ஜிம்முக்கு சோர்வாகவே இருக்காது!” என்றாள் ஃபிலிஸ். அம்மாவும் புன்னகைத்தார்.

ஜிம்மின் தாத்தா மறுநாளே பணிப்பெண்களை அனுப்பி வைத்தார். அடுத்த சில நாட்களுக்கு அவர்களுடைய நேரம் நன்றாகவே சென்றது. அம்மாவிற்கு எழுதுவதற்கும், குழந்தைகளுடன் செலவழிப்பதற்கும் கூடுதலாக சற்று நேரம் கிடைத்தது. லேசான வலி தவிர ஜிம்மிற்கு வேறு பிரச்சனைகள் இல்லை உற்சாகமாக இருந்தான்.

சில வாரங்களில் ஜிம் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பினான். அப்போது ஒரு நாள் ராபர்ட்டா ஒரு பழைய செய்தித்தாளை வாசிக்க நேர்ந்தது. அதில் அவர்களது தந்தையின் புகைப்படம் இருந்தது.

‘அட! அப்பா மாதிரி இருக்கே’ என்று நினைத்து அந்தச் செய்தியை வாசித்தவளுக்கு மிகுந்த அதிர்ச்சி! ஏனெனில் அந்தச் செய்தியில் அவர்களது அப்பா ஏதோ ஒரு குற்றத்திற்காக ஐந்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக செய்தி போடப்பட்டிருந்தது.

படம் : அப்புசிவா

அந்தச் செய்தியை பார்த்ததிலிருந்து ராபர்ட்டாவிற்கு மிகுந்த வருத்தம். அழுகையாக வந்தது. ‘அம்மாவுக்கு இந்தச் செய்தி தெரியுமா, தெரியாதா? வேலை விஷயமாத் தானே அப்பா எங்கேயோ போயிருக்காங்கன்னு சொன்னாங்க? பீட்டர், ஃபிலிஸ் இவர்களுக்குத் தெரிஞ்சாலும் ரொம்ப வருத்தப்படுவாங்களே!’ என்று நினைத்து தனக்குத்தானே வருத்திக் கொண்டாள்.

அவள் ஏதோ யோசனையுடனே இருப்பதைப் பார்த்த அம்மா, “ராபர்ட்டா! என்ன விஷயம்? ஏன் ஒரு மாதிரி இருக்கே?” என்று கேட்க, அந்தச் செய்தித்தாளைக் காண்பித்தாள் ராபர்ட்டா.

அம்மாவும் கண் கலங்க, “ஆமாம் டா! உங்க அப்பாவுடைய அலுவலக அறையில அவருக்கே தெரியாமல் ஏதோ சில பேப்பர்கள் இருந்திருக்கு. அதை வச்சு இவர் எதிரி நாட்டினுடைய உளவாளி அப்படிங்கிற மாதிரி குற்றம் சுமத்தி அவரைச் சிறையில் போட்டுட்டாங்க. ஆனா உங்க அப்பா எந்தத் தவறும் செய்யல. அவருடைய அலுவலகத்தில் யாரோ வேணும்னே இப்படிப் பண்ணி மாட்டி விட்டுருக்காங்கன்னு தோணுது. ஏன்னா இப்ப அப்பா ஜெயிலுக்கு போனப்புறம் அந்தப் பதவிக்கு வந்திருக்கிறவர், ரொம்ப நாளா அப்பாவோட பதவி மேல குறி வச்சிருந்தார்” என்றார்.

“எப்படிம்மா தனியா இவ்வளவு நாள் இந்தக் கவலையைத் தாங்கிக்கிட்டீங்க?” என்று ராபர்ட்டா அம்மாவிடம் கேட்க, “தம்பி தங்கைக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவாங்கன்னு நீ நினைக்கிற மாதிரி தான் நானும் நினைச்சேன். இப்ப இது நம்ம ரெண்டு பேருக்குமான ரகசியம். மனசுல வச்சுக்கோ” என்றார் அம்மா.

“கண்டிப்பா அம்மா!” என்றாள். ஆனால் அவள் வெறுமனே அந்தச் செய்தியை மனதில் மட்டும் வைத்துக் கொள்ளவில்லை. உடனடியாக வேறொரு வேலையும் செய்தாள்.

-தொடரும்.

(அடுத்த இதழில் முடியும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *