வணக்கம் குட்டீஸ்.
நாம் இப்போ ஒரு விண்வெளிபயணம் போகப் போறோம்.
2024ல் உங்களுக்கு ரொம்ப பிடித்த தருணம் என்னன்னு யோசிச்சிப் பாருங்க. உங்க டீச்சர், “குட்” ன்னு சொல்லி உங்களுக்கு கை தட்ட சொன்னதா; உங்க தோழர் தோழிகளோடு நேரம், பசி தெரியாமல் விளையாண்ட அந்த மாலைப் பொழுதா; “என் செல்லம்!” ன்னு உங்க அம்மா, அப்பா கொஞ்சிய அழகிய நினைவா; உங்களுக்கு யாராவது சர்ப்ரைஸ் பரிசு கொடுத்த நேரமா.. அந்த மகிழ்ச்சியான தருணத்தை மறுபடியும் பார்க்கனும்னு உங்களுக்கு ஆசையாக இருக்கா? என்னோடு கிளம்பி வாங்க. நான் கூட்டிட்டுப் போறேன்.
ரெடியா? இப்போ, உங்க முன்னே இருக்கிற ஒளிக்கதிரைக் கெட்டியா பிடிச்சிக்கோங்க. இந்த அண்டத்தில் ரொம்ப வேகமா பயணம் செய்வது ஒளிக்கதிர்கள் தான். அதைவிட வேகமாகப் பயணம் செய்கிற பொருள் இதுவரை கண்டுபிடிக்கப்படலை. ஒளிக்கதிர் என்றால் நேர்கோட்டில் பயணம் செய்கிற ஃபோட்டான்கள். ஃபோட்டான்கள் என்றால் தன்னைச் சுற்றி உள்ள பொருட்களால் பாதிக்கப்பபடாத, எடையில்லாத சிறுசிறு ஆற்றல் பெட்டிகள். ஃபோட்டான்கள் மேல் ஏறி, அதன் வேகத்தில் பயணம் செய்யனும்னா, நீங்களும் எடையில்லாத பொருளா இருக்கனும்.
தற்போது நமக்கிருக்கும் அறிவியல் அறிவில் உங்களை எடையில்லாத பொருளாக மாற்ற எனக்குத் தெரியாது. ஆனால் நம் கற்பனைக்கு எடையில்லைதானே. அதனால் நம் கற்பனையை ஃபோட்டான்கள் மேலேற்றி, ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய வைக்கலாம்.
இதோ.. கிளம்பியாச்சி! ஆஹா… இந்த ஒளிக்கதிர் பயணம் சூப்பரா இருக்குதானே? கொஞ்சம் ஆக்சிலரேட்டர் போட்டு ஒளியை விட வேகமாகப் போகலாமா? இப்போ கொஞ்சம் திரும்பி பாருங்க. என்ன தெரியுது? ஒளிக்கதிரைப் பிடிக்குறதுக்கு முன்னாடி ஆர்வமும் சிறுதயக்கமுமா நீங்க நிற்பது தெரியுதா? இன்னும் வேகத்தை கூட்டுங்க. ஒரு மணி நேரத்திற்கு முன்னால் நீங்க இந்த இடத்தில் என்ன செஞ்சீங்க என்பது தெரியுதா?
இப்படியே வேகமாகப் போய், இந்த இடத்திலிருந்து கிளம்பி, விண்வெளியில் போய்க்கொண்டு இருக்கிற ஒளிக்கதிர்களைப் பார்த்தால் உங்களுக்கு வாழ்க்கை ரிவர்ஸ் பட்டன் தட்டியது போலப் பின்னோக்கிப் போகும். உங்க வாழ்க்கையின் திருப்புமுனை நொடிகளை நீங்க பார்க்கலாம்.
கற்பனை செய்வதற்கே கடினமா இருக்கா? இந்த அண்டம் முழுக்க நம் அறிவிற்கு எட்டாத, கற்பனையிலும் கைவசமாகாத எத்தனை எத்தனையோ பொருட்கள், நிகழ்வுகள் இருக்கு. இந்த கட்டுரைப் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அப்படி ஒரு அண்டவெளி பற்றிய தகவலை உங்க கூட நான் பகிர்ந்துக்கப் போறேன்.
இந்த பயணங்களுக்கு நான் வைச்சிருக்கும் பெயர், ‘ஐஸ்க்ரீம் பயணங்கள்’. ஏன்னு பயணங்களின் முடிவில்தான் சொல்லப்போறேன்.
நம் சின்ன வயதிலிருந்து, வானத்தைப் பார்த்ததும் நம் ஆர்வத்தைத் தூண்டுவது நிலா. அந்த நிலா எப்படி உருவானதுன்னு பார்க்கலாமா?
நம் ஒளிப்பயணம் மூலமா 4 பில்லியன் வருடங்கள் முன்னாடி போகலாம்.
சூரியன் நெருப்புக்குழம்பாய் பிரகாசமாய்த் தெரியுதா? ஆனால் நம் பூமி இப்போது போல நீல நிறத்தில் இல்லை. அதுவும் நெருப்புக்குழம்பாய்தான் இருக்கு. இது பூமிக் குழந்தை.

அதோ! உற்றுப் பாருங்க! நம் பூமியின் நீள்வட்டப் பாதைக்குள் பக்கத்தில் செவ்வாய் கிரகத்தின் அளவில் ஒரு கோள் இருக்கு. அதுவும் நெருப்புக் குழம்பாகத்தான் இருக்கு. இது பேரு ‘தியா’. என்ன! தியான்னு ஒரு கோளா? பள்ளிக்கூடத்தில் உங்களுக்கு இதைப் பற்றி சொல்லித் தரவே இல்லையேன்னு யோசிக்கிறீங்களா? எனக்கும் சொல்லித் தரவில்லை.
அடடா!! இந்த ‘தியா’ என்ன நம்ம பூமிக்குழந்தைக்கு இத்தனை பக்கமா வருது. இப்படியே போனா மோதிடுமே!
அடக்கடவுளே! மோதிடுச்சி! தியாவும் நம் பூமிக்குழந்தையும் மோதிடுச்சி. இப்போ இரண்டுமே சில்லு சில்லா சிதறிடுமே!
என்ன நடக்குது இங்க! இரண்டுமே நெருப்புக் குழம்பாய் இருப்பதால் உடையாம இரண்டும் ஒன்றாகக் கலக்குது. எடை குறைவான கொஞ்சம் நெருப்புக் குழம்பு சிதறி நம் பூமியை சனி கோளின் வளையம் போல் சுற்ற ஆரம்பிக்குது. தியாவின் நெருப்புக்குழம்பு பூமியின் ஓட்டிற்குக் கீழ் தங்குது. அந்த வளையத்தில் உள்ள சிறு பாறைகள் சிறிது சிறிதாக சேர்ந்து சில நூறு வருடங்களில் நிலாவாக மாறுது!
பார்க்க எத்தனை அழகாக இருக்குது இல்லையா இந்த அறிவியல் நிழ்வு!
நம்ம காலத்துக்கு திரும்பலாமா? போகும்போது உங்ககிட்ட இந்த நிகழ்வைப் பற்றி விவரமா சொல்றேன். நீங்க இப்போ பார்த்த நிகழ்வுக்குப் பெயர், ‘பெரும் தாக்கம்’. இந்த பெருந்தாக்கத்தின் விளைவாக நம் நிலா உருவானதுன்னு பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் நம்புறாங்க.
ஏன் தெரியுமா?
அண்டத்தில் இலக்கே இல்லாமல் சுற்றித் திரிகிற பெரிய பாறைகளை நம் சூரியக்குடும்பத்தின் கோள்கள் தங்கள் ஈர்ப்பு விசையால் இழுத்து தங்களைச் சுற்ற வைச்சி தங்களோட துணைக்கோளாக- நிலாவாக மாற்றியிருக்கின்றன. வியாழன் கோளின் பல நிலாக்கள் இப்படி பிடிபட்ட இளவரசிகள்தான். அதனால் அந்த கோளுக்கும், துணைக்கோளுக்கும் வேதியியல் கட்டமைப்பில் எந்த ஒற்றுமையும் இருக்காது.
ஆனால் நம்ம நிலாவின் வேதியியல் கட்டமைப்பும், நம் பூமியின் ஆழத்தில் இருக்கும் பாறைகளின் வேதியியல் கட்டமைப்பும் ஒரே மாதிரி இருக்கு.
ஒரு வித்தியாசம். நம் பூமியில் இருக்கிற இரும்பு, நிக்கல் போன்ற கனமான உலோகங்கள் நிலாவில் இல்லை. பெருந்தாக்கத்தில் சிதறிய எடைகுறைந்த நெருப்புக்குழம்பின் கூட்டுதான் நிலா என்பதற்கு இது மேலும் ஒரு சான்று. மேலும் நம் பூமியின் சுற்றுவேகமும், நிலாவின் சுற்று வேகமும் ஒரே போல் இருக்கு.
பிடிபட்ட கைதியாக இல்லாமல், தன்னில் பாதியைப் பகிர்ந்து கொண்ட தோழனான நிலா நிஜமாகவே நம் பூமியைப் பல விண்கற்களின் தாக்கத்திலிருந்து காப்பாற்றியிருக்குது.
சரி குட்டீஸ். நம் ஒளிப்பயணம் முடிந்து வீட்டுக்கு வந்தாச்சி. அடுத்த மாதம் நம் அண்டத்தில் வேறு ஒரு சுவாரஸ்யமான இடத்திற்கு உங்களைக் கூப்பிட்டுப் போறேன். இப்போ போய் விளையாடுங்க. பை!!!