ஐஸ்கிரீம் பயணங்கள் – 3

நம் கால வெளிப் பயணத்தில் நிலா எப்படி உருவானதுன்னு பார்த்தோம்; பூமியைப்‌போல இருந்த செவ்வாய் கிரகம் எப்படி காற்றையும் நீரையும் இழந்து இப்படி ஆனதுன்னு பார்த்தோம். இன்று இன்னும் கொஞ்சம் பின்னே போய் நம்ம சூரியனும் சூரியக் குடும்பமும் எப்படி உருவானதுன்னு பார்ப்போமா? சீட் பெல்ட் போட்டு ரெடியாகிக்கோங்க. இது மின்னல் வேகப் பயணம் இல்லை. அதைவிட வேகமான ஒளி வேகப் பயணம்.

நம்ம பால்வெளி அண்டத்தில் இப்போ சூரியனும் அதன் கோள்களும் இருக்கிற‌ இடத்தில், 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் வெறும் வாயுக்களும் தூசியும் இருக்குது. இந்த தூசிகள் எல்லாம் பெரிய பெரிய மேகங்களாக எங்கும் மிதந்துகிட்டு இருக்கு. இதை சூரிய நெபுலான்னு சொல்லுவாங்க. லத்தினில் நெபுலா என்றால் மேகம்ன்னு அர்த்தம்.

படம் – அப்பு சிவா

இந்த தூசிகள் எங்கிருந்து வந்ததுன்னு உறுதியா தெரியலை. இதுக்கு முன்னாடி இங்கே ஒரு நட்சத்திரம் இருந்து, அது வயதாகி, வெடிச்சி அதோட துகள்களாக இருக்கலாம் இந்த தூசிகள்.

ஈர்ப்பு விசை காரணமாக இந்த மேகக் கூட்டத்தின் சுழற்சி வேகம் அதிகமாகுது. வாயுக்கள் எல்லாம் மையத்தை நோக்கி அழுத்தப்படுது. அதிகப்படியான வெப்பம் உருவாகுது. மிகுந்த அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக ஹைட்ரஜனும் ஹைட்ரஜனும் சேர்ந்து ஹீலியம் உருவாகுது. அதாவது அணுக்கரு இணைவு நடக்க ஆரம்பிக்குது. அணுகுண்டு தெரியுமில்லையா? அதில் உருவாகிற ஆற்றலை விட பல மடங்கு ஆற்றல் இந்த அணுக்கரு இணைவில் உருவாகும். ஒளி மற்றும் வெப்ப அலைகள் இருண்ட அந்த தூசி மண்டலத்தின் நடுவில் உதித்துவிட்டது. பல கோடி உயிர்களுக்கு ஆற்றலை அள்ளி அள்ளித்தரும் நம் சூரியன் பிறந்துவிட்டது.. பல மில்லியன் ஹைட்ரஜன் அணுக்கள் ஒரே நொடியில் அணுக்கரு இணைவு மாற்றதிற்குள்ளாகி, பல மில்லியன் டன்‌ ஆற்றல் உருவாகி சூரியமண்டலம் எங்கும் பரவுகிறது.

இன்னும் சூரியனைச் சுற்றி இந்த தூசு மண்டலம்தான் சுத்திக்கிட்டு இருக்குது. இந்த தூசி மண்டலம் எப்படி எட்டு கோள்களாக மாறுதுன்னு பார்க்கலாம்.

இரும்பு போன்ற எடையுள்ள அணுக்கள் எல்லாம் சூரியனின் ஈர்ப்புவிசை காரணமா சூரியன் பக்கத்தில் வந்து சுத்த ஆரம்பிக்குது. எடை குறைவான வாயுக்கள் சூரியனுக்கு தூரத்தில் சுத்த ஆரம்பிக்குது.

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் என திடமான கோள்கள் சூரியனுக்கு பக்கத்தில் உருவாகுது. வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற வாயுக்களால் ஆன கோள்கள் சூரியனுக்கு தூரத்தில் உருவாகுது. வியாழனிலும் சனியிலும் இருக்கும் வாயுக்கள் வாயுநிலையிலேயே இருக்க, யுரேனஸ், நெப்டியூனில் இருக்கும் வாயுக்கள் உறைந்து, அவை இரண்டும் பனிக்கோள்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.

சூரியனை விட்டு வெகு தொலைவிலிருக்கும் பாறைகள், கற்கள் கோள்களாக மாறாமல் வெறும் தூசிப் படலமாகவே சூரியனைச் சுற்றுகிறது. அதை க்யூப்பர் பெல்ட் அப்படின்னு சொல்லுவோம். அட.. இந்த க்யூப்பர் பெல்ட்டில்தான் நம்ம முன்னால் கோள் ப்ளூட்டோ இருக்கிறது.

நிலா போன்ற துணைக் கோள்கள் எப்படி உருவானது? நம்ம நிலா எப்படி உருவானதுன்னு ஏற்கனவே பார்த்தோம். மற்ற துணைக்கோள்கள் எப்படி சூரியனைச் சுற்றி இருக்கிற தூசிகள் சேர்ந்து கோள்களா மாறுச்சோ, அது போல வியாழன் போன்ற பெரிய கோள்களுக்கு ஈர்ப்பு விசை அதிகமா இருக்குது. அதனால் சூரியனை தூசிப்படலம் சுற்றுவது போல இந்த பெரிய கோள்களையும் தூசிப்படலம் சுற்றுது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த தூசிகள் சேர்ந்து அங்கங்கே துணைக் கோள்கள் உருவாகுது.

இப்போ இருக்கிற சூரியக் குடும்பம் கிட்டத்தட்ட உருவாகிடுச்சி. அழகா இருக்குது, இல்லையா?

சரி அடுத்த மாதம் நம் விண்வெளியில் காலப் பயணம் செஞ்சி வேறு ஒரு அதிசய‌ நிகழ்வைப் பார்க்கலாம்.

வித்யா செல்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *